என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள் என்று அங்கலாய்க்கிற ஆண்டவரின், ஆத்தும தாகத்தைத் தீர்க்கும்படியாக, அநேக ஜனங்களுக்கு இருளாக்கப்பட்ட சத்தியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு கிருபை கொடுத்த தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
ஆதி மனிதன் ஆதாமின் அன்பு பிள்ளைகள் ஆபேல், காயின் செலுத்திய உலகின் முதன் முதல் காணிக்கையிலேயே தேவன் தம் திருவுளத்தை தெளிவாக வெளிப்படுத்தி விட்டார். இத்தனை தலைமுறைகளை கடந்து வந்திருந்தாலும், இன்றைய கிறிஸ்தவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாத சத்தியம், ஏன் தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டு காயினின் காணிக்கையை தள்ளிவிட்டார் என்பது.
இது விளங்காததினால் தானோ ஏனோ, காணிக்கைப் பெட்டியிலோ, அல்லது காசோலையிலோ, நான் செலுத்தும் காணிக்கை ஏற்று கொள்ளப்பட்டதா, என சிந்திப்பவர் அநேகரில்லை.
“அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
ஆண்டவர் தள்ளிவிட்டால்
அத்தனையும் வீண் தானே.”
அவர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன, என் கடமை நான் காணிக்கை போட்டுவிட்டேன் என திருப்திப்பட்டு கொண்டிருக்கும் உன் நம்பிக்கையில் இடி விழப்போகிறது.
பல ஞாயிறு பள்ளிகளிலும் சரி, சில சத்தியமில்லா சபைகளிலும் சரி இதுவரை கற்றுத்தந்த காரியங்கள் என்னவென்றால், நீங்கள் ஆபேலைப்போல முதல் தரமானவைகளை தேவனுக்கு காணிக்கையாக தரவேண்டும் ஏனென்றால் ஆதியாகமம் 4 ம் அதிகாரம் 4 ம் வசனத்தில் ஆபேல் முதல் தரமானவைகளை கொண்டுவந்தான். எனவே தான் தேவன் ஆபேலின் கானிக்கையை அங்கீகரித்தார். அதுபோல நீங்களும் தரமானவற்றையே காணிக்கையாக செலுத்தவேண்டும். கெட்டுப்போன காய்கறிகளோ, பழங்களோ, பயன்படுத்த முடியாத கிழிந்த ரூபாய் நோட்டுக்களோ காணிக்கையாக செலுத்தக்கூடாது. தேவன் அங்கீகரிக்க மாட்டார் என்பதையே சிறுவயது முதல் கற்றுத்தருகின்றனர். ஒருபக்கம் முதல் தரமானதையே கொடுக்கவேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் …
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே. அதை உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப்பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார் (மல் 1:8)
இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல் கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார். தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார் (மல் 1;12,13)
காயீனுடைய காணிக்கையை தேவன் அங்கீகரியாமல் போனதற்கு இது உண்மையான காரணமல்ல. ஏனென்றால் ஆபேல் முதல் தரமானவற்றை தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வந்தான் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், காயீன் கெட்டுப்போனதையோ அல்லது முதல் தரமில்லாததையோ காணிக்கையாகப் படைத்தான் என்று வேதத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாகக் கொண்டுவந்தான் என்றுதான் ஆதியாகமம் 4;3 ல் எழுதப்பட்டுள்ளதே தவிர, தரமில்லாதது என எங்குமே எழுதப்படவில்லை. எனவே இது உண்மையான காரணம் அல்ல, இப்படி போதிப்பது வேதத்தில் இல்லாத ஒன்றைப் போதிப்பதாகும்.
உண்மையான காரணம் என்ன ?
வேதத்தில் எழுதியிருப்பதை தெளிவாய்க் கவனியுங்கள், ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை ஆதி 4;4,5
நம் தேவன் ஆபேலை அங்கீகரித்த பின்னரே (ஆபேலையும்) அவன் காணிக்கையை அங்கீகரித்தார். காயீனை அங்கீகரிக்காததினால் தான் (காயீனையும்) அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை. எனவே உண்மையான காரணம் என்னவென்றால் காணிக்கை செலுத்துபவரை தேவன் ஏற்றுக்கொண்டால்தான் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வார்
உங்களை தேவன் அங்கீகரித்தால் தான்,உங்கள் காணிக்கையை அங்கீகரிப்பார்.
ஆபேலை தேவன் ஏற்றுக்கொண்டு காயீனை தேவன் நிராகரிக்க காரணம் என்ன?
இந்த உண்மையை நாம் சரியாய் ஆராய்ந்தால் தான் நாம் ஆபேலா? அல்லது காயீனா என்பது வெளிச்சத்திற்கு வரும்.
ஆபேலை தேவன் அங்கீகரித்ததன் காரணம் அவன் முதல் தரமானதை கொண்டுவந்ததினால் அல்ல, அவன் நீதிமானாய் இருந்ததினாலேயே.
காயீனினின் காணிக்கையை தேவன் ஏற்றுக்கொள்ளாததன் காரணம் அவன் பொல்லாதவனாயிருந்ததினாலேயே.
ஆபேல் நீதிமான் என்பதற்கான வேத ஆதாரம் :
மத்தேயு 23:35 ல் நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் என்று இயேசுவே சொல்லியுள்ளார்.
எபிரேயர் 11:4 ல் அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான் என எழுதப்பட்டுள்ளது.
காயீன் நீதிமானல்ல என்பதற்கான வேத ஆதாரம் :
காயீன் ஆபேலை கொலைசெய்தபின்பு பொல்லாதவனாய் மாறவில்லை. அவன் பொல்லாதவனாயிருந்ததால்தான் ஆபேலை கொலைசெய்தான்.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப்போலிருக்க வேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும் தன் சகோதரனின் கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. (1 யோ 3:12)
இவர்களுக்கு ஐயோ, இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து… கெட்டுப்போனார்கள் (யூதா 11)
ஆம் சகோதரனே சகோதரியே, நீ நீதிமானாயிருந்தால் நீ கொடுத்தது இரண்டு காசுதான் ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்படும். உன் கிரியைகள் பொல்லாதவைகளாயிருந்து நீ எத்தனை கோடியை கொண்டுவந்து ஆலயத்திலே கொட்டினாலும் அத்தனையும் கண்டிப்பாய் வீண்.
நீ ஆபேலா? காயீனா?
எந்த ஒரு நல்ல தகப்பனும், துன்மார்க்கமாய் வாழுகிற தன் பிள்ளை தனக்கு ஏதாவதொரு பரிசினை தரும்போது, தன் பிள்ளை கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறானே என்று வேதனைப்படுவானே தவிர, அவன் கொடுக்கும் பரிசினை நினைத்து சந்தோஷப்படமாட்டான். தகப்பனுக்கு தேவை தன் பிள்ளைதானே தவிர, அவன் கொடுக்கும் பரிசு அல்ல.
நீ வாழ்க்கையில் உன் இஷ்டம்போல தேவனுக்குப் பிரியமில்லாமல் வாழ்ந்துவிட்டு, என்னதான் காணிக்கை கொடுத்தாலும் ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்
சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்தரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; (ஏசா 66:2,3)
“பாவத்தோடு வாழ்ந்துவிட்டு
நீ படைக்கும் காணிக்கை
பன்றியின் இரத்தமே.”
இயேசு கிறிஸ்து சொன்னதை சிந்தித்துப்பார்:
நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்தவந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து ( மத் 5;23,24 )
எனவே உடனே நிறுத்து,
“தேவனுக்குப் பிரியாமல், எல்லா இச்சைகளையும் நிறைவேற்றி அக்கிரமத்துடன் வாழ்ந்துவிட்டு காணிக்கைப் பெட்டியில் எவ்வளவு போட்டாலும்
தசமபாகம் தவறாமல் கொடுத்தாலும்
தருமப்பணம் மிகுதியாய்த் தந்தாலும்
எத்தனை மிஷனரிகளைத் தாங்கினாலும்
நீ கொடுத்த பணம் உன் பாவத்திற்கு
பரிகாரமாகிவிடும்
என சந்தோஷப்பட்டுவிடாதே
நீ படைப்பது பன்றியின் இரத்தமே
“யாருக்குத்தேவை உன் பணம்?
என் தேவன் பிச்சைக்காரரல்ல
அவர் ஐசுவரிய சம்பன்னர்.”
நீ நீதிமானாகிய ஆபேலா? அல்லது பொல்லாதவனாகிய காயீனா? என்பதே உன் காணிக்கை அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பதை முடிவு செய்கிறது.
2 கருத்துகள்
கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாய் வாழ்வதே தேவனுக்கு பிரியம். அப்போதுதான் நம்முடைய காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்கின்றார் . கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக. ஆமென்.
பதிலளிநீக்குசரியான விளக்கம் நன்றி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
பதிலளிநீக்குஉங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்