காதலிக்கும் முன்னர் |
கடிதம்
1
"பல வருடங்களாக காதலித்துவிட்டேன் (ஒருவருக்கும் தெரியாமல்), சிறுவயதிலிருந்தே (உயர்நிலைப் பள்ளி படிக்கும்போதே) நேசித்தேன், பழகிவிட்டேன், இனி வேறொருவரை நினைக்கவும் முடியவில்லை, என் பெற்றோர் எனக்கு வேறொரு நபரைப் பார்க்கவும் ஆரம்பித்துள்ளார்கள், இந்நிலையில் நான் அவர்களுக்குச் சொன்னால் என் காதலை அங்கீகரிப்பார்களா? இல்லையா? என்று பயமாக இருக்கிறது. அப்படியே அங்கீகரியாமற்போனால், வேறொருவரோடு வாழ நான் விரும்பவில்லை; அது பாவமும் ஆகிவிடும். ஆண்டவரையும் நேசிக்கிறேன், பெற்றோரையும் கனம் பண்ணுகிறேன். எனவே திருமணம் செய்யாமல் இருப்பது நலம் என முடிவெடுக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அங்கிள்?"
கடிதம்
2
காதல் செய்வது தவறா? யாக்கோபும், தாவீதும் காதலிக்கவில்லையா? தேவன் அவர்கள் தேவனென்றும் சொல்லுகிறாரே, புதிய ஏற்பாட்டில் காதலைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே, உடனே எனக்குப் பதில் சொல்லுங்கள்.
கடிதம்
3
முதலாவது வேலை செய்யும் இடத்தில் நான் என்னுடையவரை சந்தித்தபோது, அவரை ஆண்டவருக்குள் கொண்டுவரவேண்டும் என்றுதான் நெருங்கினேன்; ஆனால், நாளாவட்டத்தில் அது காதலாயிற்று. அவர் வேறு ஜாதி... வேறு மதம் எங்களுடையவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே இனி நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து, கொஞ்ச நாட்கள் வாழ்க்கை நடத்தும் வரை மறைந்திருக்க தீர்மானித்துள்ளோம். இது என் சாட்சியைக் கெடுக்குமா? தேவன் பிரியப்படுவாரா?
கடிதம்
4
மிகவும் கஷ்டப்படுவதனைக் கண்டு உதவும் நோக்கோடு (மனிதாபிமானத்தினால்) உதவி செய்ய முனைந்த நான் காலப்போக்கில் காதல் வலையில் விழுந்துவிட்டேன். மிகவும் நெருங்கிப் பழகின பின்னரே அவருடைய மதம் என்ன என்று தெரிந்தது. அவர் தனது மதத்தை விடமாட்டார். எனக்கு சுதந்திரம் தருகின்றேன் என்கிறார். ஆனால், என் வருங்கால பிள்ளைகளைக் குறித்த கவலை என்னை ஆட்கொள்ளவே, பயமாயிருக்கிறது. காதலை விடவும் முடியவில்லை. என் பெற்றோரை சமாளித்துக் கொள்வேன், ஆனால் எதிர்காலம் ... கேள்விக்குறியாகவே உள்ளது; என்ன செய்வது?
கடிதம்
5
அவளுடைய நிறத்தின் நிமித்தம் யாரும் அவளை நேசிக்கவில்லை என்று கண்டு, குணத்தின் சிறப்பை அறிந்த நான் அவளை விரும்பினேன். ஆனால் பெற்றோர் அவள் நம் குடும்பத்திற்கு ஆகாதவள் என்று ஜாதி பார்க்கின்றனர். என்னை விட அதிகம் படித்திருக்கிறாள். இந்தத் திருமணம் நடந்தால் என் சொத்தில் உனக்கு ஒன்றும் தரமாட்டேன் என்கிறார் தந்தை. என் முகத்தில் விழிக்காதே என்கிறார் அம்மா. எப்படி என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது? ஆலோசனை தேவை.
இன்றைய நாட்களில் இப்படிபட்டக் கடிதங்கள் என் மேஜைக்கு தினமும் வருகின்றன. வேகமாக மாறிவரும் இந்தியாவில், காதல் என்பது சாதாரணமாக பட்டி தொட்டிகளிலும் பட்டணத்திலும் காணப்படும் காரியமாகிவிட்டது. ஊடகத்துறையின் தாக்கம் அனைவரின் சிந்தனையையும் அதிகமாக கவர்ந்து கற்பனை வாழ்வினை நிஜ வாழ்வாக்கத் துடிக்கத் தூண்டிவிடும் கருவியாக உதவுகிறது. தொடர்பு கொள்ள ஏராளமான வசதிகள் உண்டாகிவிட்டதினால் (Cell phone, SMS, E-mail, Face Book, Chatting, MMS என்று அடுக்கிக்கொண்டே போகலாம்) எளிதாக இந்த வலையில் விழுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் பெரிதாகிவருகிறது.
எனவே இதனைக் குறித்த தெளிவான காரியத்தினை வேதத்தின் வெளிச்சத்திலும், நிஜத்தின் அடிப்படையிலும், கலாச்சாரத்தின் பின்னணியத்திலும், நடப்புக்கும், நாகரீகத்திற்கும் ஏற்கும் வண்ணம், சமுதாய சீர்கேடுகள் பெருகா வண்ணம் இதனை எழுதுகிறேன்.
முதலாவது, ஒருவர் தன் வாழ்வில் தேவ நோக்கத்தினை அறிவதே சிறந்த ஞானம். தன்னை உண்டாக்கிய தேவன் காரணம் இல்லாமல் உண்டாக்கவில்லை என்பதனையும், அதனை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டவர்கள் என்பதனையும், அதுவே வாழ்வினை இனிக்கப் பண்ணுவதோடு, இன்பமாய் முடியப்பண்ணும் என்பதனையும் நாம் அறிவது நல்லது.
அதனை அறிந்து கொண்டவர்களுக்குத்தான் "அவருடைய திர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறும்". (ரோமர் 8:28)
தேவ நோக்கத்தினை அறிந்துகொள்பவர், அதனை நிறைவேற்ற ஏதுவான காரியத்திற்கு மாத்திரம் தம்மை ஒப்புக்கொடுப்பது மிகவும் அவசியம். அதனை, படிப்பைத் தெரிந்துகொள்வதிலும், வாழ்க்கைத் துணையினைத் தெரிந்துகொள்வதிலும், வேலையைத் தெரிந்துகொள்வதிலும், நண்பர்கள், சபை போன்றவற்றைத் தெரிந்துகொள்வதிலும் நிச்சயமாக உபயோகப்படுத்திப் பார்க்கவேண்டும்.
வேறு வழியில்லாமல் சில நேரங்களில் படிப்பினை அல்லது வேலையினைத் தெரிந்துகொள்ள நேரிடலாம். உதாரணமாக பொருளாதாரத் தேவையினிமித்தம், குடும்பச் சூழ்நிலை நிமித்தம், பெற்றோரின் வற்புறுத்தலின் நிமித்தம் மாற்றித் தெரிந்துகொள்ள நேரிட்டாலும், ஒப்புக்கொடுத்தவர்களுக்கு "அதுவும் நன்மையையே உண்டாக்கும்". ஆனால், வாழ்க்கைத்துணை என்கிற காரியத்தில் அப்படி கவனக் குறைவாக இருக்க முடியாது. ஏனெனில், அது வாழ்நாள் எல்லாம் மாற்றக் கூடாதது. கூடவே, தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் (1கொரி 2:9,10) என்று வேதம் கூறுகிறதே.
எனவே ஞானவான் எவனும், எவரும் முதலாவது வாழ்வில் தன்னை தேவ நோக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பர். எனவே காதல் என்ற எண்ணம் தோன்றும் போதே (பருவத்தில் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்களும், மற்றவர்களுடைய காரியங்களால் ஈர்க்கப்படுவதினாலும்), என் வாழ்வின் நோக்கத்தினை நிறைவேற்ற இந்தக் காரியம் உதவுமா? என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்லியாகவேண்டும்.
இரண்டு பேர் ஒருமித்து போனாலொழிய வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறாதே (ஆமோஸ் 3:3). அது நரகமாகிவிடவும் வாய்ப்புண்டே. ஒருவருக்கு ஒருவர் இணைந்து ஒரே தேவ நோக்கத்தினை நிறைவேற்ற ஒப்புக்கொடுத்தால் தானே இல்லறத்தில் இன்பம் பெருகும், வரும் சந்ததியும் காக்கப்படும், எனவே இது பிரதான காரியம்.
வாழ்வில் தேவ நோக்கம் தெரியவில்லை என நினைப்பவர்கள், முதலாவது காதல் என்றக் காரியத்தினை யோசிக்கவே கூடாது. தேவ நோக்கத்தினை வேதத்தின் வெளிச்சத்தில், ஜெபித்து அவரின் சத்தத்தினைக் கேட்டு, மற்றவர்களின் (ஆவிக்குரியவர்கள்) ஆலோசனையினைப் பின்பற்றி தெரிந்துகொள்ளுதல் எளிதானதே. என் ஆடுகள் என் சத்தத்தை கேட்கும் என்றுதானே ஆண்டவர் இயேசு சொன்னார் (யோவா 10:16).
இரண்டாவதாக, இந்திய கலாச்சாரத்தில் இரண்டுபேர்கள் மாத்திரம் அல்ல இரண்டு குடும்பங்கள் திருமணத்தில் இணைகிறார்கள் என்பது மாறாத உண்மை. எனவே என் குடும்பத்தாரும் இவனை / இவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அதற்குரிய பல தடைகள் இருக்கலாம். அப்படி தடைகள் வந்தால் தாண்டிச் செல்ல பெலன் உண்டா இல்லையா என்பதனை அறியாவிடில் "ஆழம் தெரியாமல் காலை விட்டு" அவதிப்படவே நேரிடும். பெற்றோரை இணங்கவைத்துவிடுவேன் (பிடிவாதத்தின் மூலமோ, பயமுறுத்துதலின் மூலமோ) என்பதினை விட அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலையே சிறந்தது.
மூன்றாவதாக, படிப்பு, உடலமைப்பு, வாழ்க்கைத் தரம், வயது, பின்னணி போன்றவைகளையும் கருத்தில்
கொள்வது நல்லது. "சமாளித்துக் கொள்வேன்" என்றே காதல் செய்பவர்கள் சொல்லுவது சர்வசாதாரணம். அதனை பின்னர் சமாளிக்க முடியாமல் வேதனையில் வாழ்வோரின் எண்ணிக்கையே மிகுதி. ஏழையை திருமணம் செய்து வாழ்வு கொடுக்கப் போகிறேன், என்னை விட அறிவில் குறைந்தவரைத் திருமணம் செய்து அசரவைக்கப்போகிறேன் என்றெல்லாம் மார்தட்டுவது அதிக நாட்களுக்கு உதவாது. அதனை நிறைவேற்ற மிகுந்த மன வலிமை தேவைப்படும்.
பின்னர் உருவாகும் புயல்கள் இவைகளை மையமாகக் கொண்டே கிளம்பும் என்பதில் சந்தேகமில்லை.
நான்காவது, இப்போதே நான் வாழ்க்கைக்கானத் துணையினைத் தேடத் துடிப்பது சரியா? படிக்கின்ற காலத்தில், எனக்கென்று வேலை இல்லாமல் நான் மற்றவரைச் சார்ந்த வாழ்க்கை வாழும்போது, கவனம் செலுத்தவேண்டியவற்றிற்கு கவனம் கொடுக்காமல் காதல் என்று காலத்தினை விரயமாக்கி, கற்பனை உலகில் வாழத் துடிப்பது சரியா? விசேஷமாய் ஆண்கள் தன் காலில் நின்று குடும்பப் பொறுப்பினை சுமக்க போதுமான வருமானத்தினைப் பெறாமல் இருக்கும்போது, காதல் என்ற காரியத்தில் மனதினைப் பறிகொடுக்க முயல்வது பைத்தியக்காரத்தனமே. இன்றைய உலகில் அநேகர் உயர்நிலைப் பள்ளியிலேயே இந்த அற்பக் காதலினை செயலில் காண்பிக்க ஆரம்பித்துவிடுகின்றனர், என்னே விநோதம்!.
ஐந்தாவதாக, (மிகவும் முக்கியமானது) தேவ சித்தம் என்ன? அவர் சித்தத்திற்கு விரோதமாக நான் செயல்பட்டால் புயல்களையே நான் சந்திக்க நேரிடும். அது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைப் படகினை கரைசேர்க்கவிடாது செய்து, படகினை மூழ்கடிக்கவும், உடைத்துப்போடவும் ஏதுவாகிவிடும். தேவ சித்தத்தினை மீறியவர்கள் அனைவரும் வாழ்வில் தோற்றுப் போனவர்களே. தேவ சித்தம் செய்கிறவனே என்றும் நிலைப்பான் (1யோவா 2:17). தேவ சித்தம் செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் (மத் 7:21) என்பனவைகள் மாறாத பிரமாணம்.
பொதுவாக காதல் என்பது அன்பின் அடிப்படையிலும், மேற்கண்டவைகளை மையமாகக் கொண்டதினாலும் பிறப்பதில்லை. அது காமத்தின் அடிப்படையில்தான் ஆரம்பிக்கிறது. உள்ளக் கிளர்ச்சி, உடல் உணர்வுகளைச் சார்ந்து, இது பிறக்கிறது. அதனால், மாம்சக் கிரியை நம்மில் மேலோங்கும்போதுதான் இதற்கு இடம் உண்டாகிறது (கலா 5:19). மாம்சத்துக்குட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள் (ரோ 8:8).
சிலருக்கு அது பொழுதுபோக்கு, மற்றவர்களுக்கு தனக்கும் அப்படி ஒரு நபர் இருந்தால்தான் தன்னை மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற மடமையான எண்ணம். இந்த சிலிர்ப்புக்கு தீனிபோட உலகத்தின் முறைகளையே அநேகர் பின்பற்றுகிறார்கள். அவைகள் தேவனால் உண்டானவைகள் அல்லவே (1யோவா 2:15-16). இச்சையினால் பிறக்கும் எந்த காரியமும் எளிதாக மரணம் வரை கொண்டு செல்ல வல்லமை உள்ளது. ஏனெனில், இச்சை கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக் 1:15). ஆயினும், நான் கூறின ஐந்து காரியங்களின் அடிப்படையில் நன்றாக ஒப்புக்கொடுத்தலோடு ஆராய்ந்து விரும்பும் நபரிடம் நேரிடையாகக் கூறாமல், ஆவிக்குரியவர்களிடத்திலும், அப்பா அம்மாவிடத்திலும் பகிர்ந்துகொண்டு அவர்களும் ஜெபித்து சரியென்றால், அதற்கு பின்னர் அந்த நபர்தான் உங்களுக்கு சரியானவர் என்பதனை அவருக்குச் சொல்ல முற்பட்டு, அதே முறைதனை எதிர்பாலரும் செய்து இணைக்கப்படும் "இணைந்த மனங்களே" காதலிக்கத் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன்.
"Puppy Love" போல ஏதோ இளமையின் கோளாறினால் பழகி, பின்னர் நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்து வாழ்வில் வடுக்களோடு வாழும் நபர்கள் அநேகர் வேதனையில் கிடப்பது மாத்திரம் அல்லாமல், தங்கள் பிள்ளைகள் அப்படி நடக்கும்போது கண்டிக்க முடியாமல் கண்ணீர் விட்டு, கட்டுகட்டாக அறுவடை செய்கின்றனர் என்பதனை யோசித்துப் பார்த்தால் நல்லது.
இந்த உண்மைகள் தெரியாமல் மனதைப் பறிகொடுத்துவிட்டேன் என்று கூறுவாயானால் இப்பொழுதே நீதி 6:1-5 ன் வசனங்களைக் கேள். "என் மகனே,மகளே நீ உன் சிநேகிதனுக்காக (Boy / Girl friend) பிணைப்பட்டு கையடித்துக் கொடுத்தாயானால், நீ உன் வாய் மொழிகளால் சிக்குண்டாய். உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். இப்பொழுது என் மகனே, மகளே உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக் கொண்டபடியால் நீ உன்னைத் தப்புவித்துக் கொள்ள ஒன்று செய்.
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடம் போய் உன்னைத் தாழ்த்தி அவனை,அவளை வருந்திக் கேட்டுக்கோள். வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவது போல நீ உன்னைத் தப்புவித்துக்கொள்". ஓடு! ஓடு!! உடனே அதைச் செய்.
அநேகருடைய காதல் அம்னோனின் காதலைப் போன்றதுதான் என்பதனையும் மறவாதே. தாமாரின் மேல் ஆசை வைத்ததினால், நாளுக்கு நாள் மெலிந்துபோன அவன் தன் சிநேகிதனின் தந்திர ஆலோசனையைக் கேட்டு தனியாக தாமாரைக் கண்டு, (வஞ்சகத்தினால்) பிடித்து, சயனித்து, கற்பழித்த பின்னர் அவளை வெறுத்தான். அவன் விரும்பியதைப் பார்க்கிலும் அவன் வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2சாமு 13ம் அதிகாரம் வாசிக்கவும்). கறிவேப்பிலையாக்கப்பட்ட பெண்கள், ஏன் ஆண்கள் கூட எத்தனை பேர். தன் எண்ணம் நிறைவேறின பின்னர் (பணத்தையும், கற்பினையும் உறிந்து குடித்த பின்னர்) தூக்கி எறிந்து போடப்பட்ட நபர்களுக்குக் கணக்கில்லை; மறவாதே.
காதல் திருமணம் செய்தவர்கள் சிலரைக் காண்பித்து இவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? என்று சொல்லுகிறாயா? 95 சதவீத காதல் திருமணத்தில் நடப்பவைகளை நீ அறியமாட்டாய். என்னைப்
பார்த்து பல்லைக் காட்டினது போலவேதானே மற்றவர்களையும் பார்த்து சிரிக்கிறான் / சிரிக்கிறாள் என்ற சந்தேகப் பார்வை அநேகக் குடும்பங்ளை சின்னாபின்னமாக்கிவிட்டதனையும் தெரிந்துகொள்.
இந்த அழகான, அறிவான பையன் / பெண் வேறொருவனுக்குச் சொந்தமாகும் முன் நான் அடையவேண்டும் என்று அவசரப்பட்டு,
போட்டியிட்டு, போதைக்குள்ளாகி தங்களை மாய்த்துக்கொண்ட விட்டில் பூச்சிகள் எத்தனை? எத்தனை? ஜாக்கிரதை.
நான் கூறின முறைகளின்படி சோதித்து பெரியவர்களின் அனுமதியோடும் அறிவுரையோடும் ஒருவனை ஒருவளை நேசித்தாலும் உடலைத் தொட அனுமதிக்காதீர்கள். அது திருமணத்திற்குப் பின்னரே உங்களுக்குச் சொந்தம் (1கொரி 7:4). மறைவாக சுற்றித் திரிவது உங்களைப் பாவத்திற்குள் தள்ளிவிட ஏதுவாக்கிவிடும். பின்னர் வருந்துவதனைவிட முன் எச்சரிக்கையாக இருப்பதுவே சிறந்தது. குறிப்பாக சாட்சியினைக் காத்துக்கொள்வதும், மற்றவர்களுக்கு இடறலில்லாமல் காத்துக்கொள்வதும் முக்கியம்.
காலத்தின் கட்டாயம் என்பது எதிலும் துணிந்து செயல்படாமல் உங்களைக் காத்துக்கொள்ளவே இந்த செய்தி உங்கள் கையில் தரப்படுகிறது.
தொடர் ஆலோசனைக்கு ...
GEMS Action Centers
1)
11, 13 th Street,
New Colony, Chrompet,
Chennai- 44.
Mobile: +91 9585522446
2)
16-A, Chinnkoil Street,
Adaikalapuram,
Murugankurichi,
Tirunelveli – 627002.
Mobile: +91 9443113322
காதல்
இல்லையேல்
சாதல்
மேல்
என்பவர்
காலத்தின்
கோலம்
என்று
சப்பை
கட்டு
கட்டலாம்
கர்த்தரின்
சித்தம்
செய்தால்
காலமெல்லாம்
கருத்துடன்
வாழ்வதோடு
களிப்போடும்
வாழலாம்
உலகமும்
மாமிசமும்
உன்னை
வஞ்சிக்க
விடாதே
உன்னதரின்
திட்டத்தினை
புரிந்த
வாழ்வே
மேல்
உனக்கு
குறிக்கப்பட்டவரை
உறவுகள்
தடுக்காது
உன்னை
ஏமாற்ற
எதற்கும்
இடம்
தராதே
இணைந்த
மனங்களே
காதலிக்க
தகுதி
பெற்றவை
இன்பங்கள்
சூழ
இனிவரும்
சந்ததியும்
ஆசிர்வதிக்கப்படும்
இழுப்புகள்
உன்னை
மூழ்கப்பண்ணும்
ஆழியில்
இறைவன் இயேசுவின் திருசித்தமே கரை சேர்த்திடும்
எனக்கும் எழுதலாம் ...
D.Augustine Jebakumar
GEMS, Sikaria, Dehri-on-Sone
Indrapuri P.O, Rohtas Dist.,
Bihar - 821 308
E-mail : jebakumar@gemsbihar.org
Phone : 06184 234567
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்