யோவான் ஸ்நானனை நமது இன்றைய ஆவிக்குரிய தரங்களால் அளக்க முயலுவது, அளவு நாடாவினால் சூரியனை அளக்க முயலுவதைவிடக் கடினமானதாகும் புதிதாகப் பிறந்த இக்குழந்தையைப் பார்த்துப் பரபரப்படைந்தோர் “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ ?”என்று யோர்தானில் கேட்டார்கள். “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான் ”என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது (லூக்கா1:66,15)
“பெரியவன்” என்ற வார்த்தையை இன்று பெரும்பாலும் நாம் தவறாகவே பயன்படுத்துகிறோம். ஏனென்றால், பிரபலத்தைப் பிரதானம் என்று எண்ணிவிடுகிறோம். அந்நாட்களில் ஆசாரியர்களையோ, பிரசங்கிகளையோ தேவன் தேடவில்லை. அவர் தேடியது மனிதரையே. இன்றுபோல் அன்றும் நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஒரு பெரிய பணிக்கு ஒரு பெரிய மனிதன் தேவனுக்குத் தேவைப்பட்டான்! ஆசாரியத்துவத்துக்குரிய தகுதி யாதும் ஒருவேளை யோவான் ஸ்நானனுக்கு இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு தீர்க்கதரிசி ஆவதற்குரிய 400 ஆண்டுகளாக தீர்க்கதரிசன ஒளிக்கதிர் ஒன்று கூட இல்லாமலிருந்தது. “கர்த்தர் உரைக்கிறார்” என்ற தொனியில்லாத நானூறு அமைதி ஆண்டுகள் --- ஆவிக்குரிய காரியங்கள் நெடுகவே சீர்குலைத்து வந்து கொண்டிருந்த நானூறு ஆண்டுகள் --- தன் பலிபீடங்களில் பாவ நிவிர்த்திக்கென மிருகங்களின் இரத்தம் ஆறெனப் பெருகிட்டாலும், கொழுத்த ஆசாரியத்துவத்தைத் தனக்கு நடுநிலையாகக் கொண்டிருந்த இஸ்ரவேல் சடங்காச்சாரத்திலும், பலியிலும் , விருத்தசேதனத்திலுமே அமிழ்ந்து கிடந்தது.
"ஆசாரியர் பட்டாளம்
நானூறு ஆண்டுகளில்
செய்ய முடியாத காரியத்தை,
தேவனால் அனுப்பப்பட்ட,
தேவனால் அலங்கரிக்கப்பட்ட,
தேவனால் அபிஷேகிக்கப்பட்ட,
தேவனால் அனலூட்டப்பட்ட
மனிதனான யோவான் ஸ்நானன்
ஆறே மாதங்களில் செய்து முடித்தான்."
ஒரு பிரசங்கியை உருவாக்க தேவனுக்கு இருபது ஆண்டுகள் ஆகின்றது என்று பக்தன் இ.எம். பவுண்ட்ஸ் கூறுவதை நான் ஒத்துக்கொள்கிறேன். தேவனுடைய அமைதிப் பல்கலைக் கழகத்தில் யோவான் ஸ்நானன் பயற்சி பெற்றான். தமது பெரிய மனிதர் யாவரையும் தேவன் அங்குதான் எடுத்துச் செல்லுகிறார். பேரறிவும், பெருமையும், பாரம்பரியமும் உள்ள நியாயப்பிரமாணத்தின்படி நடந்த, பரிசேயனாகிய பவுலுக்கு தமஸ்குவின் வீதியில் கிறிஸ்து நேரடிச் சவால் விட்டபோதிலும், அவன் தன்னை வெறுமையாக்கவும், கற்றிருந்ததைக் கலைத்துவிடவும் அரேபியாவில் மூன்று ஆண்டுகள் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. அதன்பின்னரே “ தேவன் என்னில் தம்மை வெளிப்படுத்தினார்” என்று அவன் சொல்ல முடிந்தது. வெறுமையாக்கப் பல ஆண்டுகள் பிடிக்கலாம் ; அதை நிரப்பிவிடவோ தேவனுக்கு ஒரு நொடி போதும், அல்லேலூயா!
“புறப்பட்டுப் போங்கள் என்ற இயேசு
தரித்திருங்கள் என்றும் கூறினார்.
அப்பமும் தண்ணீரும் மட்டும் புசித்தும்
வேதப்புத்தகத்தைத் தவிர
வேறெந்தப் புத்தகமும் இல்லாமல்,
பரிசுத்த ஆவியானவரைத் தவிர
வேறெவரும் சந்திக்க வராமல்
எவனாவது ஓர் அறையில் ஒரு வாரம்
தனியாகத் தரித்திருக்கட்டும்----
அவன் ஒன்று உடைந்து வருவான்,
அல்லது உடைக்க வருவான்."
அதற்குப் பின்பு, பவுலைப் போல, நகரத்திலும் அவனைத் தெரிந்துவிடும். தன்னைக் காண்பிக்கும் நாள் வரைக்கும் யோவான் ஸ்நானன் தேவனுடைய அமைதிப் பள்ளியாகிய வனாந்தரத்தில் இருந்தான். உணர்வின்றிக் கிடந்த தேசத்தை உறக்கத்திலிருந்து உலுக்கிவிட, நியாயத்தீர்ப்பின் காலை போன்ற முகங்கொண்ட, வெயிலில் வாட்டப்பட்ட, அக்கினியால் அபிஷேகிக்கப்பட்ட , வனாந்தரத்தில் வளர்க்கப்பட்ட, ஆண்டவரால் அனுப்பப்பட்ட, தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானகனைவிடப் பொருத்தமானவன் வேறு யார்? அவனுடைய கண்களிலிருந்தது தேவனுடைய ஒளி, அவனுடைய குரலிலிருந்தது தேவனுடைய அதிகாரம், அவனுடைய ஆத்துமாவிலிருந்தது தேவனுடைய தாகம்! நான் கேட்கிறேன் ---- யோவான் ஸ்நானகனை விடப் பெரியவன் யார் ?
"ஆம், அவன் அற்புதம் ஒன்றும் செய்யவில்லை
அதாவது, மரித்துப்போன
யாரையும் அவன் எழுப்பவில்லை;
ஆனால் அதற்கும் அதிகமகிமையானதை
அவன் செய்தான்
மரித்துக் கிடந்த
ஒரு தேசத்தையே எழுப்பினான்!"
வார்க்கச்சையைக் கட்டிக் கொண்டிருந்த தீர்க்கதரிசி தனக்குக் கொடுக்கப்பட்ட குறைந்த ஊழியக் காலத்தில் அவ்வளவு அழகாக எரிந்து பிரகாசித்தான்.
"அவனுடைய அனல் நாவின்,
அகம் குமுறும் செய்தியைக் கேட்டோர்
தாங்கள் சரிவர மனந்திரும்பும்வரை
தங்கள் இல்லங்களில்
தூக்கமில்லா இரவுகளைக்
கழிக்க வேண்டியதிருந்தது."
என்றாலும் யோவான் ஸ்நானன் உபதேசத்தில் விநோதமானவன். பலி கிடையாது, சடங்கு கிடையாது, விருத்தசேதனம் கிடையாது; உணவில் விநோதமானவன். மதுவருந்துதல் கிடையாது, விருந்துண்ணல் கிடையாது; உடையில் விநோதமானவன். வேதபாரகரின் அணி கிடையாது, பரிசேயரின் அங்கி கிடையாது. ஆனால், யோவான் பெரியவனாயிருந்தான்! பெரிய கழுகுகள் தனியாகப் பறக்கும்; பெரிய சிங்கங்ள் தனியாக வேட்டையாடும்; பெரிய ஆத்துமாக்கள் தனியாக நடப்பார்கள் ---- தேவனோடு! இப்படிப்பட்ட தனிமையி்ல் தேவன் கூட இராவிட்டால் அது சகிக்கக் கடினமானதும், அனுபவிக்க இயலாததுமாக இருக்கும்.
மெய்யாகவே இங்கு யோவானுடையது, பெருஞ்சாதனைதான். மூன்று விதத்தில் அவன் பெரியவன்;
1. பிதாவானவருக்கு முன்பாக பயபக்தியில் பல்லாண்டு பயிற்சி, ஒரு சிலமாதங்கள் ஊழியம்;
2. ஆவியானவருக்கு அடிபணிவதில் - பெற்ற கட்டளைப்படி முன் சென்றான், முடித்தான்;
3. குமாரனைப் பற்றிய அறிக்கையில் - தான் முன் ஒருபோதும் பார்த்திராத இயேசுவை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று அழைத்தான் .
யோவான் ஒரு 'சத்தம்!' அநேக பிரசங்கிகள் வெறும் எதிரொலிகளே! அவர்கள் பேசுவதை நன்கு கவனித்தால் சமீபத்தில் அவர்கள் எந்த புத்தகத்தைப் படித்திருக்கிறார்களென்றும், வேதப்புத்தகத்திலிருந்து எவ்வளவு குறைவாக எடுத்தாளுகிறார்கள் என்றும் நன்கு அறிந்து கொள்ளலாம். திரள் கூட்டங்களைச் சந்திக்கத் தேவையானது ஒரு 'சத்தம்' பிரசங்கிகளுக்குப் பிரசங்கிக்கப் பரத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி! நொறுங்கிய மனிதரே, மனிதரை நொறுக்க முடியும். சகோதரரே, நம்மிடம் அம்பு, அபிஷேகம் கிடையாது; சிலுசிலுப்பு உண்டு, சிருஷ்டிப்பு கிடையாது; ஆர்வம் உண்டு, ஆவி கிடையாது; உலுக்கல் உண்டு, உயிர்மீட்சி கிடையாது; பிடிவாதம் உண்டு, பிடிப்பு கிடையாது! ஒவ்வொரு யுகமும் உருவெடுப்பது அக்கினியாலேயே;
"ஒவ்வொரு வாழ்க்கையும்
பிரசங்கியாயிருந்தாலும் வேசியாயிருந்தாலும்
முடிவடைவது அக்கினியாலேயே
சிலருக்கு அது
நியாயத்தீர்ப்பின் அக்கினியாயிருக்கும்,
மற்றவர்க்கு அது நரகத்தின் அக்கினியாயிருக்கும்!”
'ஏழை ஆத்துமாக்களை அக்கினியினின்று காப்பாற்றி, அவர்கள் கொள்ளிகளை இயேசுவின் இரத்தத்தில் தணியுங்கள்' என்று வெஸ்லி பாடினார். சகோதரரே நமக்கு ஒரே வேலைதான். ஆத்துமாக்கள இரட்சிப்பது, ஆனாலும் அவர்கள் மடிகின்றனரே! ஐயோ, சிந்தித்துப்பாருங்க்கள்! இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் ---- அவர்களுக்கு இயேசு தேவை. நித்திய ஜீவனின்றி அவர்கள் அழிகிறார்கள்! ஐயோ, அதின் அவமானம்! அதின் பயங்கரம்! அதின் பரிதாபம்! 'ஒருவரும் கெட்டுபோவது கிறிஸ்துவினுடைய சித்தமில்லை.' பிரசங்கிகளே, பரிசுத்த ஆவியின் அக்கினியை நாம் இழந்துவிட்டதால் இலட்சங்கள் பாதாள அக்கினி நோக்கி விரைகின்றன. இத்தலைமுறைப் பாவிகளுக்கு, இத்தலைமுறைப் பிரசங்கிகளே பொறுப்பு. நமது ஆலயங்களை அடுத்தே ஆயிரங்கள் ஆதாயப்படுத்தப்படாமலிருக்கின்றனர். ஆதாயப்படுத்தப்படாததற்குக் காரணம் அறிவிக்கப்படாததே; அறிவிக்கப்படாததற்குக் காரணம் அன்புகூரப்படாததே. அயல் நாடுகளில் செய்யப்படும் மிஷனரிப் பணிகளுக்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என்றாலும், தெருக்களில் அழிந்துகொண்டிருக்கும் நமது அயலகத்தாரைப்பற்றி, சற்றும் கவலைப்படாமல், அயல்நாட்டவரைக் குறித்துப் பெரிதும் கரிசனை கொள்ளுவது சற்று விநோதமாகத்தானிருக்கிறது ! நாம் மா திரள் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தியும் நமக்குக் கிடைக்கும் ஆத்துமாக்களின் எண்ணிக்கை சில நூறுகளே. ஆனால் ஓர் அணுகுண்டு விழட்டும்---- அது ஆயிரங்களை நரகத்துக்கு அனுப்பி வைத்துவிடும்.
இன்றுபோல் என்றும் பாவம் பெருகியதில்லை என்பது ஆதாரமில்லாத கூற்று. ‘’ நோவாவின் காலத்தில் எப்படி நடந்தோ அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்தில் நடக்கும்‘’ என்று இயேசு சொன்னார்! நோவாவின் காலம் ஆதியாகமம் 6:5 இல் தெளிவாகச் சித்திக்கப்பட்டுள்ளது. ‘’மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றம் எல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு…" விதிவிலக்கு இல்லாமல் பொல்லாப்பு--- "எல்லாம்" இடைவெளி இல்லாமல் பொல்லாப்பு- "நித்தமும்" கலப்படம் இல்லாம் பொல்லாப்பு--- "அதே" அன்று எப்படியோ அப்படியே இன்று!
பாவத்துக்கு இன்று பகட்டும், புகழும்--- ஆலயத்துக்கு வருபவர்களுக்குப் பிரசங்கங்களால் களைப்பு, போதனைகளால் சலிப்பு---- வந்தபடியே தரிசனமின்றி, தாகமின்றி வெளிச் செல்லுகிறார்கள்!
“தேவனே, அழியும் இத்தலைமுறைக்கு
அரசியலிலும், ஆலயத்திலுமுள்ள
உள்நாட்டு, அனைத்து நாட்டுப்
பாவ மூடல்களையும் கிழித்தெறிய--
பத்தாயிரம் யோவான் ஸ்நானகர்களைத்
தரமாட்டீரோ?”
எரியும் முட்செடி மோசேக்கு எப்படியிருந்ததோ அப்படியே ஒரு நாட்டுக்கும் எரிந்து பிரகாசிக்கும் ஒரு மனிதன் இருப்பான்! அக்கினியினாலேயே தேவன் சந்திக்கிறார்.
“பிரசங்கபீடத்தில் அக்கினி அதிகரிக்க,
பாதாளத்தில் அக்கினி அவியத்துவங்கும்.”
புதிய செய்தியுடைய புதிய மனிதனே யோவான் ஸ்நானன். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனைக் ‘’குற்றவாளி’’ என்று நீதிபதி தீர்ப்பளிக்கும் போது, அவனது உடல் நடுங்கி, முகம் வெளிறிப்போவதைப் போல், மனந்திரும்புங்கள்! என்ற யோவானின் குரல் கேட்டோரின் உள்ளத்தை நடுங்கச் செய்து சிந்தையைக் கலக்கி, மனச்சாட்சியை வளைத்து, பாவவுணர்வடையச் செய்து, மனந்திரும்புதலுக்கும், ஞானஸ்நானத்திற்கும் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது! ஆவியின் அக்கினி அபிஷேகம் பெற்ற பேதுரு, பெந்தெகொஸ்தே நாளில் செய்த பிரசங்கம் அங்கு கூடியிருந்த மக்களை அசைத்து, ‘’சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?‘’ என்று ஒரே மனிதன் அலறுவது போல அவர்களை அலற வைத்தது. பாவவுணர்வடைந்த இம்மக்களிடம், ‘’அட்டையில் கையெழுத்திடுங்கள் போதும்! ஆராதனைக்கு ஒழுங்காக வாருங்கள்! தசம பாகத்தைத் தந்துவிடுங்கள்!‘’ என்று யாராவது பதில் கூறுவதை உங்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியுமா? இல்லை, இல்லை! இல்லவே இல்லை! ஆவியின் அனலில் ‘’மனந்திரும்புங்கள்!‘’ என்று யோவான் கத்தினான். அவர்கள் அப்படியே செய்தார்கள்! மனந்திரும்புதல் என்பது வெறும் உப்புக் கண்ணீர் வடிப்பதல்ல. அது வெறும் உணர்ச்சிவசமோ, துக்கமோ, சீர்திருத்தமோ அல்ல. பரிசுத்தரையும், பாவத்தையும், பாதாளத்தையும் பற்றி சிந்தையில் மாற்றங் கொள்ளுவதே மனந்திரும்புதலாகும்!
காற்றும் நெருப்பும் இயற்கையின் இருபெரும் விசைகளாகும். பெந்தெகொஸ்தே நாளில் இவையிரண்டும் இணைந்தன. இவ்விதமாக, காற்றையும் நெருப்பையும் போல் பாக்கியம் பெற்ற ‘’மேலறைக் குழு‘’ தடுக்கப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ, நிதானிக்கப்படவோ முடியாதவர்களாய், மாறிவிட்டனர். அவர்களுடைய அக்கினி, மிஷனரிப் பணி அக்கினியை உண்டாக்கியது, அக்கினியின் உக்கிரத்தைத் தணித்தது, இரத்த சாட்சி அக்கினியை ஏற்றி வைத்தது, எழுப்புதல் அக்கினியைத் துவக்கியது! 200 ஆண்டுகளுக்கு முன் சார்லஸ் வெஸ்லி இவ்விதம் பாடினார்: பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அழிக்கிறது, சுத்திகரிக்கிறது, அனலுண்டாக்குகிறது, கவருகிறது, வல்லமைப்படுத்துகிறது. தாங்கள் எப்பொழுது இரட்சிக்கப்பட்டோம் என்று சில கிறிஸ்தவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் அபிஷேகிக்கப்பட்டு அது எப்போது தன் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்று கூற முடியாமலிருக்கும் ஒரு மனிதனை இதுவரை நான் கண்டதில்லை. ஆவியினால் பிறந்து, ஆவியினால் நிறைந்து, ஆவியினால் வாழ்ந்து, ஆவியினால் நடந்த வெஸ்லியைப்போல் ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்களும் தேவனுக்காகத் தேசங்களை அசைப்பார்கள் இயந்திரப் பொருத்தியில் நெருப்பு படும்வரை மோட்டார் வண்டி இயங்காது. அதுபோலவே சில மனிதர் அசையாமலும், அசைக்காமலும் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு எல்லாம் இருந்தும் அக்கினி இல்லை.
அருமைச் சகோதரரே, பிரசங்கிகளுக்கு ஒரு தனி நியாயத்தீர்ப்பு இருக்கப்போகிறது. அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் யாக்கோபு3:1. மனிதர் நியாயாசனத்துக்கு முன்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாய் நிற்கும்போது அவர்கள் ஒருவரைப் பார்த்து, "பிரசங்கியாரே, நீர் பரிசுத்த அக்கினியுடையவராய் இருந்திருந்தால் நாங்கள் இப்போது பாதாள அக்கினிக்குச் செல்ல வேண்டியதிருக்காதே” என்று சொல்ல நேரிட்டால்….?"
எழுப்புதல் தாமதிப்பது ஏன்?
லியோனார்டு ரேவன்ஹில்
1 கருத்துகள்
ஆழமான வெளிப்பாடு கள்
பதிலளிநீக்குஅருமை யான விளக்கம் அய்யா
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்