இன்றையச் சபையை மொத்தமாகக் கவனித்துப் பார்த்தால் அதன் லவோதிக்கேயா தன்மையை இன்னும் எத்தனைக் காலம் தேவன் தாங்குவார்? “வாந்தி பண்ணிப் போடுவேன்” என்ற எச்சரிப்பைச் செயல்படுத்தாது எதுவரையிலும் நம் பரிசுத்த தேவன் சகித்துக் கொண்டிருப்பார் என்றே கேட்டிடத் தோன்றுகிறது. சபையில் இது லவோதிக்கேயா காலம் --- அனைத்துப் பிரசங்கிகளும் ஆமோதிப்பது இது ஒன்றுதான்!
ஆனால் தலையின்மேல் பட்டயம் ஊசலாடிக் கொண்டிருக்கையில், விசுவாசிகளாகிய நாம், பதட்டமின்றி, பாசமின்றி, ஏனோதானோவென்று, சொகுசாய், சோம்பேறிகளாய்க் காலம் கடத்தி வருகிறோமே --- இதுமுறையா? இரக்கமுள்ள நம் தேவன் நமது அகத்தைப் பரிசுத்தமாக்கி, அக்கிரமத்தைப் பரிகரித்து, அறியாமைக்காய்ப் பரிதபித்தாலும், நமது வெதுவெதுப்பான இதயங்கள் அவருக்கு முன் எத்தனை அருவருப்பு என்பதை எண்ணிட வேண்டாமா? நாம் அனலாயிருக்க வேண்டும், அல்லது அணைந்தே போக வேண்டும்; எரிமலையாய் எரிய வேண்டும், இல்லையேல் எறிந்து விடப்பட வேண்டும்; உருக வேண்டும், அல்லது உறைந்து விட வேண்டும். கனலற்ற, கனிவற்ற நிலைமை கர்த்தருக்கு எத்தனைக் கசப்பு தெரியுமா?
“கிறிஸ்து இப்போது தமது “சிநேகிதரின் வீட்டில்” காயப்படுத்தப் பட்டிருக்கிறார் (சக 13:6). ஜீவனுள்ள தேவனின் பரிசுத்தப் புத்தகம் இன்று அதை எதிர்ப்பவர்களைவிட எடுப்பவர்களாலேயே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது!
வேத வசனங்களை விளையாட்டாய்ப் பயன்படுத்துகிறோம்; அவைகளை ஏற்றத்தாழ்வுடன் விளக்குகிறோம்; அவைகளிலுள்ள அளவற்ற ஐசுவரியத்தைச் சோம்பேறித்தனத்தினால் சுதந்தரிக்கத் தவறுகிறோம். வேதத்தின் தெய்வீகத் தூண்டுதலை ஆதரித்து, ஆர்வத்துடனும், ஆண்மையுடனும் உழைக்கும் திருவாளர் பிரசங்கியார் ஆவியில் வீறுகொண்டு வீரமுடன் வாய்ப்பந்தல் போடுவார். ஆனால் அடுத்த சில வினாடிகளில் வேதத்தின் அற்புதங்கள் கடந்த காலத்துக்குரியவையென்றும், “இந்த வசனம் இன்றைக்குரியதல்ல “ என்றும் சத்தற்ற வாதம் புரிவார். இவ்விதமாகப் பிரசங்கியின் அவிசுவாசக் குளிர்நீர் புதிய விசுவாசியின் வெப்பமான விசுவாசத்தின்மீது வார்க்கப்படுகிறது.
“இஸ்ரவேலரின் பரிசுத்தரை மட்டுப்படுத்துவது” சபையினால் மட்டுமே கூடும். இன்றையச் சபை இதைத் திறம்படச் செய்கிறது. மரணத்துக்கும் அளவுகளிருந்தால் அவைகளிலெல்லாம் மட்டமானதொன்றுண்டானால் அது, அபிஷேகமில்லாது ஆவியானவரைக்குறித்து பிரசங்கிப்பதாய்த்தான் இருக்கும்.
ஆவியானவரே, உமது கிருபையோடு வாரும், ஆனால் கிருபை வரங்களோடு வேண்டாம்” என்று ஜெபிக்குமளவிற்கு மன்னிக்க முடியா அசட்டுத் துணிச்சல் நமக்கிருக்கிறது.
அடிப்படைக் கொள்கை வட்டாரங்களிலுங்கூட ஆவியானவரைக் கட்டுப்படுத்தி, கடைசியிடத்தில் வைக்கும் காலமிது. யோவேல் 2ஆம் அத்தியாயம் நமக்குத் தேவையென்றும் அது நம்மில் நிறைவேறவேண்டுமென்றும் நாம் சொல்லுகிறோம். “மாம்சமான யாவர் மேலும் உம்முடைய ஆவியை ஊற்றும்” என்று கதறிவிட்டு அதே வேளையில், “ஆனால் எங்கள் குமாரத்திகள் தீர்க்கதரிசனம் உரைத்து விடக்கூடாது, எங்கள் வாலிபர் தரிசனம் கண்டு விடக்கூடாது” என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோம்.“ஆண்டவரே, எங்களுடைய வழக்கமான அவிசுவாசத்தினாலும் அரை குறை வேத அறிவினாலும், ஆவிக்குரிய வல்லமையினாலும் உம்முடைய பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தியிருந்தோமானால், இன்னும் துக்கப்படுத்திக் கொண்டேயிருக்கிறோமானால், எங்களை தம்முடைய வாயிலிருந்து தயவாய் வாந்தி பண்ணிப் போடும்! எங்களைக் கொண்டும், எங்கள் மூலமாகவும் உம்மால் எதையும் செய்ய முடியாவிடில், தேவனே, தயவுசெய்து எங்களையல்லாமல் எதையாவது செய்யும்! எங்களைக் கடந்து செல்லும்; இப்போது உம்மை அறியாத மக்களைத் தெரிந்து கொள்ளும்! அவர்களைத் தூக்கியெடுத்து, தூய்மையாக்கி, தூயாவியால் நிறைத்து அற்புதங்களைச் செய்யும்! உருக்குலைந்த சபையை உயிர்ப்பிக்க, உண்மையற்ற உலகை உலுக்க, ‘சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படை போல் கெடியுமுள்ளவர்களாய்’ அவர்களை அனுப்பும்!” (உன் 9:10).
இதைச் சிந்தியுங்கள்! இந்த உலகத்திற்கு இதற்குமேல் கொடுக்க தேவனிடம் ஒன்றுமில்லை. பாவிகளுக்காய்த் தமது ஒரே பேறான குமாரனைக் கொடுத்தார்;மானிடர் யாவருக்கும் வேதத்தைக் கொடுத்தார்; உலகை உணர்த்தவும் சபைக்குச் சாதனமாகவும், பரிசுத்த ஆவியைத் தந்தருளினார். இருந்தும், கையெழுத்திடப்படாத காசோலைப் புத்தகத்தின் பயனென்ன? அடிப்படைவாதிகளின் கூட்டமாயிருந்தாலும், ஜீவனுள்ள தேவன் பிரசன்னமாயிராவிட்டால் அதில் பயன் என்ன? சத்திய வசனத்தை நாம் சரியாகப் பகுக்க வேண்டும். “இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்” (வெளி 3:20) என்ற வசனம் பாவிகளையோ, காத்து நிற்கும் கர்த்தரையோ அடுத்ததல்ல; இல்லை! தமது ‘சொந்த’ லவோதிக்கேயா சபையின் வாசலருகே நின்று கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்கும் நமது ஆண்டவரின் பரிதாபக் காட்சியைத்தான் நாம் இங்கு காண்கிறோம். இதை எண்ணிப் பாருங்கள்!
பெரும்பாலான ஜெபக் கூட்டங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசனம்: “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்பதே. ஆனால் அநேகமாக அவர் “நடுவில்” இருப்பதில்லை; “நடுத்தெருவில் தான்” நிற்கிறார்! கீதத்தில் அவரை உயர்த்துகிறோம்; கிரியையிலோ அவரை உதைக்கிறோம். நமதருகிலுள்ள புத்தகக் குவியலும், வேதத்தின் ஓரக்குறிப்புகளும், மாறாத வேத வார்த்தையின் மகிமையினால் நாம் தகித்து விடாதபடி நம்மைத் தடுத்து விடுகின்றனவோ?
கல்லான இதயங்கொண்ட பாவிகளிடம் இன்று தேவன் நீடிய பொறுமையுடன் இருப்பதைக் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. குருடும் செவிடுமான ஒருவனிடம் நாமுங்கூட பொறுமையாயிருப்பதில்லையா? பாவிகளின் நிலையும் அதுதானே? அயர்ந்த நித்திரையில் அசமந்தமாய், அக்கரையின்றியிருக்கும் சபையிடம் தேவன் பொறுமையாக இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! கெட்டுப்போன உலகிலுள்ள கெட்டுப்போன சபை தான் தேவனுடைய உண்மையான பிரச்சனை.
ஐயோ, ஓட்டாண்டிகளாயிருந்தும் வறட்டுக்கவுரவம் அடித்துக் கொள்ளும் இன்றைய விசுவாசிகளின் குருட்டுத்தனத்தை என்னென்று சொல்ல! நாம் நிர்வாணிகள்தான், ஆனால் அதை நினைப்பதில்லையே. தனவான்களாயிருந்தும் (இன்றுபோல் என்றுமே சாதனங்களிருந்ததில்லை) தரித்திரராயிருக்கிறோம் (இன்று போல் குறைந்த வல்லமை என்றுமேயிருந்ததில்லை). நமக்குக் குறைவு ஒன்றுமேயில்லை (ஆனால் ஆதி அப்போஸ்தலத் திருச்சபைக்கிருந்த அனைத்திலும் அணுவளவும் நமக்கில்லை). இத்தகைய ஆவிக்குரிய நிர்வாணக்கோலத்தோடு நாணமேதுமின்றி நடனமாடிக் கொண்டிருக்கும் நமது “நடுவில்” அவர் நிற்பாரோ?
ஆ, அக்கினியின் தேவைதான் என்ன! பாவிகளை வெட்டி வீழ்த்தி பலிபீடங்களை நிரப்பும் ஆவியானவரின் வல்லமை எங்கே? ஜெபிக்கும் ஆவியில் நிரம்பவேண்டிய ஆலயங்கள் இன்று வெறும் குளுகுளு காற்றின் வசதியுடன் தான் மிளிர்கிறது! “நமது தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. “ தேவனையும் அக்கினியையும் பிரிக்க முடியாது. அப்படியே மனிதரும் அக்கினியும் கூட. நாம் ஒவ்வொருவரும் அக்கினியினூடே கடந்து செல்ல வேண்டியவர் – பாவிகளுக்குப் பாதாள அக்கினி, பரிசுத்தவானுக்கு பரிசோதிக்கும் அக்கினி! சபை பரிசுத்த ஆவியானவரின் அக்கினியை இழந்து விட்டதால் இலட்சோப லட்சங்கள் பாதாள அக்கினிக்கு விரைகின்றனர். பாவம்!
மோசே தீர்க்கதரிசி அக்கினியினால் அழைக்கப்பட்டான். எலியா அக்கினியை ‘அழைத்தான்’, எலிசா அக்கினியை உண்டு பண்ணினான். மீகா அக்கினியைத் தீர்க்கதரிசனமாய் உரைத்தான். யோவான் ஸ்நானன், “அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று உரக்கக் கூறினான். “நான் பூமியின் மேல் அக்கினியைப்போட வந்தேன்” என்று இயேசு முழக்கமிட்டார். தண்ணீர் ஞானஸ்நானத்தைத் தவறிவிட நாம் தயங்குமளவிற்கு அக்கினி ஸ்நானத்தைத் தவறிவிடத் தயங்கியிருப்போமானால் சுடர்வீசும் சபையையும் மற்றுமொரு பெந்தேகொஸ்தேயையும் நாம் கண்டிருப்போமே. தண்ணீர் ஞானஸ்நானத்திற்குள்ளும் ‘பழைய சுபாவம்’ சமாளித்துக் கொண்டாலும், அக்கினி ஞானஸ்நானத்தின் போதோ அது சமாதியாகிவிடும். ஏனெனில் அவர் “பதரை அவியாத அக்கினியினால் சுட்டெரித்து விடுவார்.” உயிர்த்தெழுதலின் மகிமையைக் கண்ட உத்தம சீடர்கள் அற்புதங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அக்கினி சுத்திகரிப்பிற்குள் செல்லும்வரை சிலுவைப் பணிக்கு அனுமதிக்கப்படவில்லையே!
“மேலறை” அனுபவமில்லாமல் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ ஊழியம் செய்ய இக்காலப் பிரசங்கிகளுக்கு என்ன உரிமை உண்டு? தீர்க்கதரிசனத்தைக் குறித்துப் பேசும் பிரசங்கிகளுக்கு இன்று பஞ்சமேயில்லை; ஆனால் தீர்க்கதரிசிகளான பிரசங்கிகளுக்குத்தான் மாபெரும் பஞ்சம். என்னே பரிதாபம்! ஆவிக்குரிய ஜோசியர்களும், உணர்ச்சிவசக் குறிகாரர்களும் இன்று நமக்குத் தேவையில்லை. இனி புதிய காரியங்களை “முன்கூட்டி” அறிவிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை, ஏனென்றால், தேவனுடைய சிந்தையை வெளிப்படுத்தும் முழுவேதம் நமக்குக் கிடைத்து விட்டது. ஆனால் இன்றையத் தேவை “முன் உணர்த்தி” அறிவிப்போரே! எந்த மனிதனும் ஆவியானவரை ஆதீனப்படுத்தவியலாது. ஆனால் ஆவியானவர் மனிதரை முழு ஆதிக்கம் செய்யமுடியும். அத்தகையோரே தீர்க்கத்தரிசிகள். எதிர்பார்ப்போ, அறிவிப்போ, அறிமுகப்படுத்தலோ அவர்களுக்குக் கிடையாது; வந்து சேர்ந்து விடுவார்கள். அவ்வளவுதான்! அவர்கள் அனுப்பப்பட்டவர்கள், அடையாளமிடப்பட்டவர்கள், அதிரச்செய்பவர்கள், யோவான் ஸ்நானன் அற்புதம் ஒன்றும் செய்யவில்லை–அதாவது சுகமடைவதற்காகத் திரள் கூட்டம் அவனைத் தொட்டுவிடவேண்டுமென்று அவன்மேல்வந்து விழவில்லை-ஆனால் ஆவிக்குரிய நிலையில் செத்திருந்த ஒரு தேசத்தையே உயிரோடே எழுப்பினான்! நாணமற்ற நற்செய்தியாளர்கள் சிலர் இப்படிச் சொல்வதுண்டு: இப்பொழுதுதான் ஒரு பெரிய எழுப்புதல் கூட்டம் நடத்திவிட்டு வந்தேன்; அதில் ஆயிரக்கணக்கானோர் ஒப்புக்கொடுக்க முன்வந்தனர் – இதோடு நிறுத்தமாட்டார்கள்; ஏனென்றால் வறட்டு அடிப்படைக் கொள்கைவாதிகளை ஆறுதல் படுத்த வேண்டுமே! – ஆனால் அங்கு உணர்ச்சி ததும்புதலோ, அசைவோ ஒன்றும் கிடையாது! என்றும் கூறிவிடுவர். இதுதான் வேடிக்கையானது! மக்களை அதிரச் செய்யாத பூகம்பத்தைக் கேள்விப்பட்டது யார்? நிலை குலைக்காத சூறாவளியும் உண்டோ? ஜான் வெஸ்லியின் ஊழியம் பெரும் பரபரப்பையும் தகிப்பையும் உண்டாக்கவில்லையா?
ஜான் வெஸ்லி- John Wesley |
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் "ஜான் வெஸ்லி" இவருக்கு எதிராக இங்கிலாந்து திருச்சபைகள் எல்லாக் கதவுகளையும் ஓங்கி அடைத்தன. ஆனால் இந்த மார்க்கப் பித்தர்களால் பரிசுத்த ஆவியின் எழுப்புதலின் அலைப்பிரவாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆட்டுக்குட்டியானவரிடம் மற்றவரை நடத்தும் அரும்பணியில் முற்றிலும் தோல்வியுற்ற இப்பாக்கியவான் வெஸ்லி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அவருக்கிருந்த அறிஞரின் அறிவுக் கூர்மையும், ஆர்வப் பித்தனின் ஆற்றலும், சொல்வல்லோனின் சொல்திறனும் அணுவளவும் இப்பணிக்குப் பயன்தரவில்லை. 1738 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் வந்தது. ஆம், அன்றுதான் ஆல்டர்ஸ் கேட் வீதியின் ஜெபக்கூட்டத்தில் ஜான் வெஸ்லி ஆவியினால் பிறந்தார். பின்பு ஆவியினால் நிரப்பப்பட்டார். அக்கினி அபிஷேகம் பெற்ற அம்மனிதன் பதிமூன்று ஆண்டுகளுக்குள் மூன்று நாடுகளை அசைத்துவிட்டார். அதுபோன்றே மத்திய இத்தாலியின் பிளாரன்ஸ் பகுதியை ஸ்வோனரோலா என்ற தேவ மனிதன் அசைத்தார். “பிதற்றும் பிட்சு” எனப்பட்ட இம்மனிதனின் முகத்தைக் கண்டு பிளாரன்ஸ் வாழ்மக்கள் நடு நடுங்கினர். மதவாதிகளோ பரிகசித்தனர்.
சகோதரரே, நியாயமான வெளிச்சத்தில் நோக்குமிடத்து, பிரசங்கிக்குரிய கவுரவங்களும் வேத சாஸ்திரப் பட்டங்களும் பெற்றும் நரகத்தால் நகைக்கப்பட்டும், ஆவிக்குரியவைகளல்லாதவைகளால் அச்சுறுத்தப்பட்டும் மடிவதைவிட யோவான் ஸ்நானனைப்போல் குமுறும் எரிமலையென, கொந்தளிக்கும் கடலென கொடூர பாவத்தைக் கண்டித்து, பாவத்தின் வல்லமையில் சிக்கித்தவிக்கும் தேசத்தைப் பிடுங்கி தேவன் பக்கம் திருப்பிவிட்டு ஆறே மாதங்கள் வாழ்ந்தாலும் போதுமே! குடிவெறியரைத் தாக்கிப் பேசி, ஊழல் நிறை அரசியல்வாதிகளுக்குச் சாபம் கூறினால்கூட நம் தலைக்குக் கத்தி வந்துவிடாது. இவ்விருதிறத்தாரையும் கண்டித்துப் பேசிக் கொண்டும் நம் தலையையும் பிரசங்க வாய்ப்புகளையும் காத்துக் கொள்ள முடியும். ஆனால் போலி மார்க்கத்தைத் திட்டவட்டமாய்க் கண்டித்த தீர்க்கதரிசிகளோ தீக்கிரையாக்கப்பட்டனர். நாமுங்கூட இப்போலி மதவாதிகள் மனிதரைப் பொய்ச் சொல்லி ஏய்ப்பதையும், நமது அன்புக்குரியவர்களை மரணத்திற்குக் கடத்திச் செல்வதையும், பாதிரிக்கும்பல் ஒன்று சிலுவைச் சின்னத்தின் மீது மனிதரைப் பாதாளத்திற்கு நடத்திச் செல்வதையும் காணும்போது பரிசுத்த வைராக்கியத்தால் பொசுங்கியேயாக வேண்டும். எரிமலைக் குழம்பென அவர்களுக்கெதிரே எரிந்து விழவேண்டும். அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டு சீர்த்திருத்தத்தை முன் நின்று நடத்துபவரென்பதால் இரத்தச் சாட்சிகளின் நெருப்பில் நாம் தகிக்கப்பட வேண்டியும் வரலாம்.
கண்களில் நீர் வழிய இவைகளைக் கவனியுங்கள்: ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள் புராட்டஸ்டண்டு சுவிசேஷகர்களுக்குப் புகழுரை தருவதை இன்றையத் திமிர்வாதம் பிடித்த புராட்டஸ்டண்டு மார்க்கம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் – இதே மதவாதிகள் ஒரு லுத்தரைப் புகழ்வதை, ஒரு ஸ்வோனரோலாவைப் பாராட்டுவதையோ நீங்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியுமோ? ஆ! கர்த்தாவே, பட்சிக்கும், பரிசோதிக்கும் தீர்க்கதரிசனப் பிரசங்கங்களை இந்நாட்களில் தர மாட்டீரோ? தப்ப முடியாத நியாயத்தீர்ப்பின் தரிசனத்தினால் இருதயக் கடினமானோருக்குக் காத்திருக்கும் நித்திய நரகைக் குறித்த நினைவால் அழுந்தி, அழுது, அடிபணிந்து, அர்ப்பணிக்கும் இரத்தசாட்சிக் கூட்டமொன்றை எழுப்பித்தர மாட்டீரா?
பிரசங்கிகள் புகழ்பெறச் செய்வது பிரசங்கப் பீடங்களை; தீர்க்கதரிசிகள் புகழ்பெறச் செய்வதோ சிறைக்கூடங்களை! தேவன் தாமே தீர்க்கதரிசிகளை அனுப்பித் தருவாராக – அடக்கிக்கொள்ளாமல், அலறிக் கூப்பிடும் அஞ்சாநெஞ்சர், நாடுகள்மேல் அபிஷேக ‘ஐயோ’க்களை அள்ளி வீசுபவர்கள், தாங்கமுடியா தழல் போன்றவர்கள், காதைக் கவரா கடின உபதேசிகள், இறுகப்பிடிக்கும் இரக்கமில்லாதவர்கள், இவர்களே இன்று நமக்குத் தேவை. ‘மெல்லிய வஸ்திரம் தரித்து’ அதனினும் மென்மையாக ஆற்றுப்பெருக்கென பேசினாலும், அன்னக் கரண்டியளவும் அபிஷேகமில்லாத பிரசங்கிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போய்விட்டது. இவர்கள் ஒப்புக்கொடுத்தலை விட ஒப்பிட்டுப் போட்டியிடுவதையும், முழங்கால் அனுபவத்தைவிட முன்னுக்குச் செல்வதையுமே நன்கு அறிந்துள்ளனர். இவர்கள் செய்வது பிரசங்கமல்ல, பிரச்சாரம்; இவர்கள் கவலைப்படுவது தங்கள் சபையின் பரிசுத்தத்திற்காக அல்ல, அதின் பரவசத்திற்காக.
ஐயகோ! புதிய ஏற்பாட்டுச் சபையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால்
அப்போஸ்தலருக்கும்,
அவர்தம் தரத்திற்கும்
எத்தனையாய்த் தாழ்ந்து போய்விட்டோம்!
நல்ல உபதேசம் அநேக விசுவாசிகளை நல்ல உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனென்றால், எழுத்து மட்டும் போதாதே. அது அனலேற்றப்படவேண்டுமே! எழுத்து அத்துடன் ஆவி, இரண்டும் இணைகையில்தான் “ஜீவன்” உண்டாகும். செம்மொழியில் செய்யப்பட்டாலும், பிழையின்றி, பிரசங்கிக்கப்பட்டாலும் அது வாய் நிறைய மணலைப்போல் ருசியற்றதாய் இருக்கக்கூடும். ரோமச் சபையைக் கொள்ளையிடவும், கம்யூனிசத்தை முடமாக்கவும் வேண்டுமானால் அக்கினி அபிஷேகம் பெற்ற சபை இன்று நமக்கு அவசியம் தேவை….. எரிந்து கொண்டிருக்கும் சபை உலகைக் கவரும். அப்பொழுதுதான் அதன் நடுவிலிருந்து அவர்கள் ஜீவனுள்ள தேவனின் சத்தத்தைக் கேட்க முடியும்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!
எழுப்புதல் தாமதிப்பது ஏன்?
லியோனார்டு ரேவன்ஹில்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்