-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பரிசுத்த பேதுருவின் வாழ்க்கை, ஊழியம், தலைகீழாய் சிலுவையில் அறையப்பட்டு மரணம் - வரலாற்று கட்டுரை

 

நான் உம்மை நேசிக்கிறேன் (யோவான் 21:17)

அப்போஸ்தலர் நடபடிகள் 12-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியங்களுக்குப் பின், பேதுரு 'வேறொரு இடத்துக்குப் போனான்' என்று கூறப்பட்டிருக்கிறது. (2. 17). இந்த இடம் எதுவென்று திட்டமாய்க் கூறக்கூடாத போதிலும், அது ஒரு வேளை அந்தியோகியாவாயிருக்கலாம் என்று யூகிப்பவர்களுண்டு. பெந்தேகோஸ்தே நாளில் மனந்திரும்பின கூட்டத்தாரில் சிலரால் அந்தியோகியாவில் கிறிஸ்து மார்க்கம் போதிக்கப்பட்டிருக்கவேண்டும். அன்று பிரிகியா, பம்பிலியா, எகிப்துசிரேனேப் பிராந்தியம், கிரேத்தா, அரேபியா, ரோமாபுரி முதலியவிடங்களிலிருந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் பாஷைகளில் அப்போஸ்தலர் தேவனுடைய மகத்துவங்களை விவரிக்கக் கேட்டார்கள் (அப். 2: 10, 11). அவர்களில் சீப்புருதீவாரும், சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள் (அப் 11:20). அந்தியோகியாவில் சபை உண்டானதும், அங்குள்ள சபையை ஸ்திரப்படுத்துவதற்காக எருசலேம் சபையார் பர்னபாவை அனுப்பினார்கள். அப்ட்டணத்தில் தான் 'கிறிஸ்தவர்கள்' என்கிற பெயர் முதல் முதலாவதாக விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது (. 22,26). இது கி.பி. (சுமார்) 42-ம் வருஷத்தில் நடைபெற்றது. செசரியாப் பட்டணத்தில் கொர்னேலியு மனந்திரும்பினது கி. பி. 40-ம் வருஷம். எனவே பேதுரு சிறைப்படுத்தப்பட்டதும் அதிலிருந்து கர்த்தருடைய தூதனால் விடுவிக்கப்பட்டதும் 40-ம் அல்லது 41-ம் வருஷமாயிருக்கலாம்.

அப். 12 : 17-க்குப்பின், பேதுரு நேராக அந்தியோகியாவுக்குச் சென்றார் என்று நாம் எண்ணிவிட முடியாது. ஏனெனில் 18:1-ல் அந்தியோகியாச் சபையின் ஊழியர் ஜாபிதாவில் பேதுருவின் பெயரில்லை. இந்த ஜாபிதாவின் காலம் 45-ம் வருஷம். இது முதல் அந்தியோகியா, பவுல், பர்னபா முதலானவர்களின் தலைமை ஸ்தானமாயிருந்தது என்று மட்டும் விளங்குகிறது. ஆனால் 50-ம் வருஷத்தில், அப். 15-ல் சொல்லப்பட்ட எருசலேம் சங்கம் நடந்த பின், பேதுரு அந்தியோகியாவிலிருந்து சபையைக், பாலஸ்தீனாவிலும் கண்காணித்துவந்தார் என்றறியலாம் (கலா. 2: 10, 11). ஆகவே, 45 முதல் 50 வரைக்கும் பேதுரு சுற்றுப் புறங்களிலும் யூதர்களுக்குள்ளே சுவிசேஷ வேலை செய்தார். அக்காலங்களில் அவர் யூதர், புறஜாதியர் விஷயத்தில் தாராள மனப்பான்மையுடையவராயிருந்தபோதிலும், அந்தியோகியாவின் கண்காணியாரானதிலிருந்து யூதர்களின் நியாயப் பிரமாண ஆசரிப்பை முக்கியப்படுத்திய "யூதக் கிறிஸ்தவர்களின்" கூட்டத்தில் சேர்ந்து, ' பர்னபாவையும் தன் பக்கமாக இழுத்து, பரி.பவுலின் கண்டனத்துக்கு ஆளானார்.

கி.பி. 50 முதல் 57 வரை பேதுரு அந்தியோகியாவின் கண்காணியாராகப் (அத்தியட்சராகப்) பணிவிடை செய்தார். பவுல், பர்னபா, மாற்கு, சீலா, முதலானவர்கள் ஊழிய நிமித்தம் அயலிடங்களுக்குப் போய்விட்டபடியால், அந்தியோகியாவிலுள்ள வளர்ந்து பெருகும் சபையின் பொறுப்பு அவருடையதாயிற்று. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருச்சபை வரலாற்றாசியரான யூசெபியஸ் 'பேதுரு அந்தியோகியா விலிருந்து பொந்து, கலாத்தியா, பிததினியா, கப்பதோக்கியா, ஆசியா (சின்ன ஆசியா) வில் சிதறியிருந்த யூதர்களுக்குச் சுவிசேஸத்தை அறிவித்தார்' என்று எழுதுகிறார் (Eusebius-Ecclesiastical History III : 1)

பிற்காலத்தில் அந்தியோகியாவில் பிரபல சிரேஷ்ட அத்தியக்ஷராயிருந்த கான்ஸ்டான்ஷியஸும் பேதுருவே அந்தியோகியாவின் முதல் அத்தியக்ஷரென்றும், அங்கிருந்து (சின்ன) ஆசியாவின் வடப்பாகத்தில் சிதறியிருந்த யூதர்கள் மத்தியில் அவர் சுவிசேஷ ஊழியம் செய்தார் என்றும் கூறுகிறார்.

கி.பி. 57-ல் அல்லது கான்ஸ்டான்ஷியஸ் போன்ற, சிலர் எண்ணுகிறபடி, "கி.பி. 53-ல் பேதுரு தனது அத்தியக்ஷச ஸ்தானத்தைத், தனது சீஷர்களில் ஒருவராகிய (Enodius) என்பவரிடம் ஒப்புவித்துவிட்டு, ஐப்பிராத்தில் நதியில் பிரயாணம் செய்து, பழைய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில் சிதறியிருந்த யூதர்களிடம் சென்றார். எனோதிய அந்தியோகியாவின் இரண்டாவது பிஷப். பேதுரு பாபிலோனியாவில் ஒரு சபையை ஸ்தாபித்து  கி.பி. 57 அல்லது 58 முதல், சுமார் 6 அல்லது 7 வருஷங்களாக அதன் அத்தியக்ஷராக ஊழியம் செய்தார் என்றும், அக்காலத்தில் தான் முதலாம் பேதுரு நிருபத்தை எழுதினார் என்றும் பலர் அனுமானிக்கின்றனர் (1 பேதுரு 5:13). பல வியாக்கியானிகள் பாபிலோன் என்பது ரோமாபுரியைக் குறிக்கிறது என்று கொண்டு, அவர் பாபிலோனுக்குப் போகவேயில்லை என்பர். ஆனால் அது இலகுவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ரோமாபுரி  பாபிலோன்என்று முதன்முதல் இகழ்ச்சியாக அழைக்கப்பட்டது

4-ம்,  5-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஜெரோம் என்றசபைப்பிதா' வினால் தான். மேலும், ரோமாபுரியிலிருந்து பேதுரு அந்நிருபத்தை எழுதியிருந்திருப்பாரானால் ரோமாபுரியை 'ரோமாபுரி' என்றே கூறலாமே. பாபிலோன் என்று இகழ்ச்சியாகக் கூற அவசியமில்லயே,

பாபிலோனில் அத்தியக்ஷராக சேவை முடிந்தபின் அவர் மேற்கே பிரயாணமாகி, சீரியா, ஆசியா நாடுகளிலும், எகிப்து, பாலஸ்தீனாவிலும் சுற்றியலைந்தார். அக்காலத்தில் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் கூடவேயிருந்து, அவருடைய ஊழியத்தில் உதவிசெய்தார்கள் என்று எண்ணப்படுகிறது (1 கொரி 9 : 5). பேதுருவுக்கு ஒரு மகளிருந்தாளென்பதும், அவள் பெயர் பெட்ரோனிலா (Petronilla) என்பதும், பல ஆண் மக்களிருந்தார்களென்தும், அவர்களிலொருவன்தான் நிருபத்தில் குறிக்கப்படுகிற மாற்கு (1 பேதுரு 5: 13) என்பதும் ஒரு பாரம்பரியம்.

பேதுரு அப்போஸ்தலனின் சீஷர்கள் பலர். அவர்களில் சிறந்தவர் சுவிசேஷனாகிய மாற்கு. மாற்கு யோவான் என்ற இவர் பர்னபாவின் இனத்தான். எருசலேம் வாசி (அப் 15 : 37; 12:12). அவர் பேதுருவின் மனைவியின் சகோதரனென்பது ஒரு பாரம்பரியம். பேதுரு சொல்லச் சொல்ல (மாற்கு) சுவிசேஷத்தை மாற்கு எழுதினார் என்பது பேப்பியஸ் (Papias) என்ற சபைப் பிதா எழுதிவைத்திருக்கும் தகவல்.

மற்றொரு சீஷன் ரோமாபுரி கிளமெந்து (பிலி 4: 3). இவர் எழுதிய Recognition என்ற ஒரு நூலிலிருந்து நாம் அறிவது பின்வருமாறு: பேதுரு பல தேசங்களில் சுற்றித்திரிந்து சுவிசேஷ ஊழியம் செய்து பாலஸ்தீனாவுக்கு வந்தபோது, ரோமனாகிய கிளமெந்து, பர்னபா என்ற ஒரு சீஷன் மூலமாய் எகிப்து தேசத்தில் கிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப்பற்றி இன்னமும் அதிகமாய் அறிய விரும்பி, பர்னபாவுடன் பாலஸ்தீனத்திலுள்ள செசரியாப்பட்டணம் வந்து, அங்கு பேதுருவைச் சந்தித்து, அவரிடத்தில் உபதேசம் பெற்றார். அக்காலத்தில் மாயவித்தைக்காரனாகிய சீமோன் ஏற்கனவே பேதுருவினால் கடிந்துகொள்ளப்பட்டதிலிருந்து (அப் 8 : 5-24, கிறிஸ்துவின் ஊழியத்திற்கு சுவிசேஷத்துக்குப் பகைஞனாகி, இடையூறு செய்வதிலேயே  கண்ணும் கருத்துமாயிருந்தான். இப்போது அவன் செரியாவுக்கு வந்து, பேதுருவுடன் மூன்று நாட்களாகத் தர்க்கம் செய்து, அவரால் தோற்கடிக்கப்பட்டு ஓடிப்போனான். அதன்பின் அவ்வூரில் சுமார் பதினாயிரம் பேருக்கு அப்போஸ்தலன் ஞானஸ்நானம் கொடுத்து, அப்பெருஞ் சபைக்கு சகேயு (இவர் சுவிஷேங்களில் கூறப்படும் சகேயுவாயிருக்கலாம்) என்னப்பட்ட ஒருவரை கண்காணியாராக (அத்தியக்ஷராக) நியமித்துவிட்டு, திரிப்போலி (Tripolis) பட்டணம் சேர்ந்து, அங்கு மூன்று மாதம் தங்கி ஊழியம் செய்து, அநேகரை விசுவாசிகளாக்கி, கிளமெந்துடன் அந்தியோகியாவுக்குப் பயணமானார். அப்பட்டணத்தில் நடந்தது சொல்லப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து அரது (Aradus) வழியாய் லவோத்திக்கேயா சேர்ந்தனர். அங்கும் மாய வித்தைக்காரனாகிய சீமோனோடே பேதுரு போராடவேண்டியிருந்தது. இத்தகவல்களைத் தரும் Recognition என்ற இந்நூலின் ஆக்கியோனாகிய கிளமெந்து பின்னால் ரோமாபுரியின் இரண்டாவது அத்தியக்ஷரானார்.

பேதுரு சுமார் 67-ம் வருஷத்தில் ரோமாபுரி சேர்ந்தார். அங்கு நீரோ (Nero) ராயன் கொடுங் கோலாட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவன் கிறிஸ்தவர்களைப் பகைத்து, அவர்களைத் துன்புறுத்தி, அநேகரைக் கொலை செய்துவந்தான். அந்நாட்களில் பரி. பவுல் இரண்டாம் முறையாக ரோமாபுரிக்கு வந்து, துன்பப்பட்ட சபையாரைத் தேற்றி, உற்சாகப்படுத்திக்கொண்டு தம் ஊழியத்தை நடப்பித்து வந்தார்.

மாய வித்தைக்காரனாகிய சீமோன் நீரோ (Nero) இராயனின் அரண்மனையில் கண்யமிக்கவனுயிருந்தான். ரோமர்கள் அவனைப் "பெரியவனாகப்" பாராட்டி மதித்துவந்தார்கள். ராஜாவும் அவனுக்குச் சிநேகிதன். ஒரு நாள் ராயனின் இனத்தானான வாலிபன் ஒருவன் மரித்துப் போனான். மாய வித்தைக்காரஞான சீமோன், சடலத்தின் பக்கத்திலிருந்துகொண்டு, தன் மாயா ஜாலவித்தைகளின் மூலம் சரீரத்தில் ஜீவன் உண்டானது போலத் தோன்றச் செய்தான். எல்லாரும் அவனைப் புகழ்த் தார்கள். "செத்தவனுக்குள் உயிர் வரச் செய்த மகான்என்று அவனைக் கொண்டாடினார்கள். அச்சமயத்தில் அவனுடைய விரோதியாகிய பேதுரு அங்கு வந்தார். சீமோனின் மாயாஜாலத்தை வெளிப்படுத்த எண்ணி கட்டிலிலிருந்து அவரை அப்புறப்படுத்தச் சொன்னார். சீமோன் கட்டிலை விட்டுத் தூரச் சென்றவுடன், அவனுடைய வித்தையின் பெலன் குன்றினமையால், உயிர்பெற்றது போலத் தோன்றின சரீரம் மறுபடியும் பொலிவிழந்து பிரேதமாயிற்று. அப்போது பேதுரு, மனதுக்குள் ஜெபித்து, "கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எழுந்திரு" என்று அந்த வாலிபனுக்குக் கட்டளையிட, மரித்துப்போனவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கி, ஆகாரம் புசித்தான்அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.

இதன் பின்பு சீமோன் தன் பெருமை குறைவதைக் கண்டு. மறுபடியும் அதை நிலைநாட்ட எண்ணி, ஒருநாள், தான் கோட்டையின் உப்பரிகையிலிருந்து குதித்து பறந்து போகப் போவதாக ஜனங்களுக் அறிவித்தான். குறித்த நேரத்தில் திரள் கூட்டம் ஜனங்கள் கோட்டை உப்பரிகைக்குக் சமீபத்தில் கூடினர். பேதுருவும் அக்கூட்டத்திலிருந்துகொண்டு, இம்மாயாஜாலங்களாலும், கண்கட்டி வித்தைகளாலும் ஜனங்களை ஏமாற்றி மோசம் போக்கின சீமோனுடைய அட்டகாசங்களுக்கு முடிவு வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு நின்றார். சகலருடைய கண்களும் மேல் நோக்கின. சீமோன் தனக்கு உண்டாக்கியிருந்த செட்டைகளை விரித்துக்கொண்டு, உப்பரிகையிலிருந்து குதித்தான். குதித்துக் கீழே விழுந்து இறந்தான்!

பயங்கர ராயனாகிய நீரோ தன் சிநேசிதனுக்கு நேர்ந்த அவமானத்தைப்பற்றிக் கேள்வியுற்றதும், கோபாவேசங்கொண்டு பேதுருவையும் அவருடைய மனைவியையும், பல சிலரையும் பிடித்துச் சிறையிலடைத்துவைத்தான். இத்தகவல்களை  ஹெகெஸிப்பஸ் (Hernrippus) என்ற  4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நூலாசிரியர் கொடுக்கிறார்.

பல சரித்திராசிரியர்கள் மரித்தோன் ஒருவனைப் பரி. பேதுரு உயிரோடெழுப்பினதை நம்புவதில்லை. ஏன் நம்பக்கூடாது? மரித்துப்போன யோப்பாப் பட்டணத்து தொற்காள் என்னும் தபித்தாளை  பேதுரு மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பவில்லையா? (அப் 9:36-42). துரோவாவில் 'மரித்தவனாய் எடுக்கப்பட்ட ஐத்திகுவைப் பவுல் உயிரோடெழுப்பவில்லையா? (அப். 20:9,10). ஆதிச் சபை சரித்திரத்தில் பக்தர்கள் மரித்தவர்களை உயிரோடெழுப்பினதாக வேறு அநேக சரித்திரங்களுமுண்டே.

பரிபேதுருவின் மரணத்தைப்பற்றியும் ஒரு பாரம்பரிய மூண்டு. நீரோ ராயன் அப்போஸ்தலரைக் கொலைசெய்யத் தீர்மானித்திருக்கிறான் என்று அறிந்த விசுவாசிகள், பல தடவைகள் பேதுருவினிடத்திலும் பவுலினிடத்திலும் வந்து, தப்பியோடி விடவேண்டுமென்று ஆலோசனை கூறினார்கள். பக்தர் மறுத்தார்கள். ஆனால், பேதுரு கடைசியில் இணங்கிவிட்டார். ஓரிரவு அவர் தன் சிறைச்சாலைச் சுவரின் மீதேறிக் குறித்துத், தப்பி, பட்டணத்தை விட்டு வெளியேறினார்.

இருளில் அவருக்கு முன்னால் ஒரு ஆள் வருவது தெரிந்தது. அவர் கண்ட காட்சி என்ன ? முன்னால் வந்தது யார்? ………… அவருடைய ஆண்டவர் அல்லவா! "கர்த்தாவே எங்கே போகிறீர்? போகிறீர்?" என்று கேட்டார் பேதுரு. அதற்குத் கர்த்தர் 'இரண்டாம் தடவையாகச் சிறுவையிலறையப்பட ரோமாபுரிக்குப் போகிறேன்" என்றார். பேதுருவின் மனம் உடைந்தது. தான் பல வருஷங்களுக்கு முன் கர்த்தரை மறுதலித்த இருண்ட இரவை எண்ணினார். உடனே திரும்பினார். சிறைக்குள் புகுந்தார்.

நீரோ ராயன் குறித்த நாள் வந்தபோது. பக்தர் மூவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். பேதுருவின் மனைவி முதலாவது சிரச்சேதம் செய்யப்பட்ட பின், (ரோமப் பிரஜா உரிமை பெற்ற) பவுல் சிரச்சேதமானார். கடைசியில் பரிசுத்த பேதுரு (தான் கேட்டுக் கொண்டபடியே தலைகீழாய்ச் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். இது கி. பி. 68ம் வருஷம் ஜூன் 29-ம் நாள் நடந்தது.

பரி. பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்படும் காட்சி

மார்செலினஸ் என்ற ஒரு கிறிஸ்தவ குரு பரிசுத்த பேதுருவின் சடலத்தை எடுத்து, வாட்டிகன் (Vatican) குன்றில்வெற்றிவாசலின்சமீபத்தில் நல்லடக்கம் செய்தார்.

சீமோனோ சேவல் கூவுங்கால்

மனங் கசந்து அழுதான்;

கற்போல நின்று பாசத்தால்

கர்த்தாவைச் சேவித்தான்.

                          ‌‌     ‌‌                                              -பாமாலை 153 : 3

கருத்துரையிடுக

0 கருத்துகள்