-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்?

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

பாவிகளை இரட்சிக்க உலகில் வந்த நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்?(எபி 2:4)  என வேதம் கூறுகிறது. தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து பரலோகை விட்டு பூமியில் மனுஷனாக வந்து, மனுமக்களை இரட்சிக்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். அந்த விலைமதிக்க முடியாத இரட்சிப்பைக்குறித்துக்  கவலையற்றிருப்போமானால் தண்டனைக்குத் தப்பவே முடியாது. அது என்ன தண்டனை? நித்திய அழிவாகிய (நரகம்அக்கினி கடல்) தண்டனை    (2 தெச 1;10) என்று வேதம் கூறுகிறது. எந்த மனிதன், இயேசு பாடுபட்டு இரத்தம் சிந்தி பலியாகி சம்பாதித்ததான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றவனாயிருக்கிறானோ, அவன், சாத்தானுக்கும் அவன் தூதனுக்கும் என்று ஏற்படுத்தப்பட்ட நரகமாகிய அக்கினி என்னும் நித்திய அழிவாகிய தண்டனைக்குத் தப்பவே முடியாது.

(1) தனக்கு உண்டாகும் இரட்சிப்பைக்குறித்து கவலையற்றிருக்கக்கூடாது

விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்’ (மாற் 16:16) என்று இயேசு கூறுகிறார். அப்படியானால் எந்த மனிதன், இயேசு தேவக்குமாரன் என்றும் என்னைப் பாவத்திலிருந்து மீட்க பிதா, தமது குமாரனை அனுப்பினார் என்றும், அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பத்தியானார் என்றும், பாவமே இல்லாது வாழ்ந்து, எனது பாவங்களைப் போக்கி என்னை மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் விசுவாசித்து, பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, தன் பாவங்களை எல்லாம் மறைக்காமல் அறிக்கையிட்டு, மன்னிப்பு கேட்டு, இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தினால் சுத்தமாக்கினார் என விசுவாசித்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறானோ, அவனை அவர் தமது பரிசுத்தமுள்ள இரத்தத்தினால் கழுவி பாவத்திலிருந்து மீட்கிறார். அப்படி பாவத்திலிருந்து மீட்கப்பட்டவன், ‘பாவமன்னிப்புக்கென்று  ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் (அப் 2:38). அப்படி பாவங்களிலிருந்தும் பாரம்பரியங்களிலிருந்தும் மீட்கப்பட்டு, ஞானஸ்நானம் பெறுகையில் இரட்சிக்கப்படுகிறான். இந்த விலையேறப் பெற்ற இரட்சிப்பைக்குறித்து, கவலையற்றிருப்பவன் எவனும் நித்திய அழிவாகிய (நரகம் எனும் அக்கினி கடல்) தண்டனைக்குத் தப்ப முடியாது. தேவனால் இரட்சிக்கப்பட்டவனை தேவன் சபையிலே சேர்க்கிறார் (அப் 2:47). 

(2) பெற்றுக்கொண்ட விலையேறப்பெற்ற இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருக்கக் கூடாது         

இன்று, இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம், பரிசுத்தாவியைப் பெற்று, சபைக்குள்ளிருக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக்குறித்து கவலையற்றவர்களாய் இருக்கிறார்கள். தான் பெற்றுக் கொண்ட விலைமதிக்கமுடியாத இரட்சிப்பைக்குறித்து கவலையற்றிருந்தால், இந்த இரட்சிப்பைப் பெற்றவனும் நித்திய அழிவாகிய (நரகம் என்னும் அக்கினிக்கடல்) தண்டனைக்குத் தப்பவே முடியாது.

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்’ (பிலி 2:12) என்று வேதம் கூறுகிறது. சாலொமோன் இராஜாவான காலத்தில் ஓர் சம்பவம் நடந்தது. அதாவது இரண்டு வேசிகள் ஒரே வீட்டில் குடியிருந்தனர். மூன்று நாட்கள் வித்தியாசத்தில், இருவரும் ஆண்குழந்தைகளைப் பெற்றனர். அதிலே ஒரு ஸ்திரீ தூக்கத்திலே தான் பெற்ற குழந்தை மீது புரண்டு படுத்ததினிமித்தம் செத்துப்போயிற்று (1 இராஜா 3:16-19). அருமையானவர்களே, 10 மாதம் கஷ்டப்பட்டுப் பாதுகாத்து பெற்றப் பிள்ளையைச் சாதாரண தூக்கத்தினிமித்தம் சாகடித்தாள். விலையேறப் பெற்ற குழந்தை நிர்விசாரத்தால் மரித்துப்போயிற்று. அதுபோல, கோடிக்கணக்கான மக்கள் இவ்வளவு பெரிதான, விலைமதிக்கமுடியாத இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாதிருக்கையில், இரட்சிப்பைப் பெற்ற அநேகர் அதின் மதிப்பு அறியாமல் நிர்விசாரமாய் வாழ்ந்து மறுபடியும் பாவம் செய்து அந்த இரட்சிப்பை இழந்து போய்க்கொண்டிருக்கின்றனர். விலைமதிக்கமுடியாத இரட்சிப்பைப் பெற்ற நாம் அந்த இரட்சிப்பை அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நிறைவேற்றப் பிரயாசப் படுவோம். ஏனெனில்,  முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்’ (மத் 24:12) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைப்படியே, முடிவுவரை பரிசுத்தமாய் வாழ்ந்து அந்த இரட்சிப்பைக் காத்துக் கொள்வோம். உதாரணமாக, தாவீதிடம், அவனது தகப்பன் ஈசாய் சில ஆடுகளை மேய்க்கும்படியான பொறுப்பைக் கொடுத்திருந்தார். அப்படி வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையில் உள்ள ஆட்டைப் பிடித்துக் கொண்டது. அவன் அவைகளைத் தொடர்ந்து போய், அவைகளை அடித்து, ஆடுகளை அவைகளின் வாய்க்குத் தப்புவித்தான். அவைகள் அவன் மேல் பாய்ந்த போது, அவன் அவைகளின் தாடியைப் பிடித்து, அவைகளை அடித்துக் கொன்று போட்டான்.(1 சாமு 17:34,35)

அவன் தனது உயிரையும் பெரிதாக மதிக்காமல் தகப்பன் தன்னிடம் கொடுத்த ஆடுகளை அத்தனை மேன்மையாக எண்ணி, காப்பாற்றுவானானால், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நமக்காக தம்மையே நொறுக்க ஒப்புக்கொடுத்து, இரத்தம் சிந்தி பலியாகி நமக்குக் கொடுத்த விலைமதிக்க முடியாத இரட்சிப்பை அதிக கவலையோடும் கரிசனையோடும் பாதுகாத்து, முடிவுபரியந்தம் அந்த இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட்டு முடிவுபரியந்தம் அந்த இரட்சிப்பில் நிலைநிற்போம். ஏனெனில் நமக்குக் கிடைத்த இவ்வளவுப் பெரிதான இரட்சிப்பைக்குறித்துக் கவலையற்று இருப்போமானால் நித்திய அழிவாகிய (நரகம் எனும் அக்கினிக் கடல்) தண்டனைக்குத் தப்பவே முடியாது.

இயேசு கிறிஸ்து ஒருவிசை பாவிகளை இரட்சிக்க வந்தார். இன்னொரு விசை வரப்போகிறார் தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாம்தரம் தரிசனம் ஆவார் (எபி 9:28) என்ற வசனப்படி சீக்கிரம் வரப்போகிறார். அவர் வரும் நாளை நாம் அறியாதிருக்கிறபடியால் விலையேறப்பெற்ற இரட்சிப்பைப் பெற்ற நாம், வரப்போகிற இயேசுவைப் பரிசுத்தம் இல்லாமல் தரிசிக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்து வரப்போகிற இயேசுவைச் சந்திக்க அவர் சிநேகிக்கிற பரிசுத்தத்தின்படியே வாழ்ந்து, அவருடைய வருகையில் உண்டாகும் இரட்சிப்பை அடைவோம். பத்து கன்னிகைகளிலே, ஐந்து பேர் தங்கள் தீவட்டிகளை அணையாமல் பாதுகாத்து, ஆயத்தமாய் இருந்து மணவாளனைச் சந்தித்து அவருடன் போனது போல, நாமும் நமக்கு கிடைத்த விலையேறப்பெற்ற இரட்சிப்பைப் பாதுகாத்து அவர் விரும்பும் பரிசுத்தத்தோடு காத்திருந்து, அவர் வரும் போது உண்டாகும் இரட்சிப்பை அடைந்து, அவருடனே பறந்து போவோம். ஆயத்தமில்லாத ஐந்து கன்னிகைகளைப் போல வரப்போகிற மணவாளனாகிய இயேசுவைச் சந்திக்காமல் போனால் தண்டனைக்கு (அந்திக் கிறிஸ்துவின்  ஆட்சிக்கு) தப்ப முடியாது.

(3) மற்றோரின் இரட்சிப்பைக் குறித்தும் கவலையற்றிருக்கக் கூடாது

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1 தீமோ 2:4)’ என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நாம் பாவத்தில் இருந்தும் பாரம்பரியத்தில் இருந்தும் இரட்சிக்கப்பட்டது போல எல்லாரும் இரட்சிக்கப்படவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம், இவ்வளவு பெரிதான இரட்சிப்பை குறித்துக் கவலையற்று இருப்போமானால் நாமும் (நித்திய அழிவாகிய நரகம் எனும் அக்கினிக் கடல்) தண்டனைக்குத் தப்ப முடியாது.

எந்த ஒரு விசுவாசி, தன்னுடைய ஆத்துமா மேல் கரிசனையாக இருக்கிறானோ, அவன் அடுத்த ஆத்துமா மேல் கரிசனையாக இருப்பான். ஆனால் எந்த ஒரு விசுவாசி, தன்னுடைய ஆத்துமா மேல் கரிசனை இல்லாது இருக்கிறானோ, அவன் மற்ற ஆத்துமா மேல் கரிசனை இல்லாது இருப்பான்.

தேவனை அறியாதவர்களுக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும் படிக்கும் …… அவர்கள் (தேவனை அறியாதவர்களும், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களும்) கர்த்தருடைய சந்நிதானத்தில் இருந்தும், அவருடைய வல்லமைப் பொருந்திய மகிமையில் இருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய  ( நரகம் எனும் அக்கினிக் கடல்) தண்டனையை அடைவார்கள் (2 தெச 1:7-10) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் சுவிசேஷம் கேட்டும் கீழ்ப்படியாது மரித்தால் அது கீழ்ப்படியாதவனுடைய குற்றமே. ஆனால் சுவிசேஷம் கேளாமல், தேவனை அறியாமல் மரித்தால் அந்த குற்றம் நம்மேல் அல்லவா சுமரும். ஆகவே விசுவாச சகோதர, சகோதரியே அழிந்து போகும் ஆத்துமா மீது கரிசனை உள்ளவர்களாகி அவர்களுக்கு சுவிசேஷம் கூறி, அவர்களை அக்கினியில் இருந்து இழுத்து தேவ இராஜ்ஜியத்தில் சேர்ப்போம். சுவிசேஷம் அறிவித்தல் நம்மேல் விழுந்த கடமையே. தேவனுக்கு முன்பாக பாரத்தோடு செய்வோம்.

நான்கு குஷ்டரோகிகள், … ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள், நாம் மவுனமாய் இருந்து, பொழுது விடியும் மட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் …… இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள் (2 இரா 7:3-9) என்று வேதம் கூறுகிறது. அப்படியே நாம் இந்த கடைசி நேரத்தில் வந்துள்ளோம், நாம் சுவிசேஷம் அறிவியாமல் இருந்தால் குற்றம் (இரத்தப்பழி) நம்மேல் சுமரும். இன்று, சுவிசேஷம் மற்றோருக்கு அறிவிக்கக் கூடாதபடிக்கு, பிசாசானவன் தேவ ஜனத்தைத் தங்கள் வேலைக்காகவும், குடும்பத்துக்காகவும் செயல்பட வைத்துள்ளான். ஆஸ்திகளையும் சுவிசேஷத்திற்காக செலவு பண்ண கூடாதபடிக்குத் தங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் செலவு பண்ணவும், சேர்த்து வைக்கவுமே செய்துவிட்டான்.

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்ப் போனால், அந்த துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியை விட்டுத் திரும்பாமற் போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய் (எசே 33:8,9) என்று தேவன் கூறுகிறார். தேவ ஜனமே நம்மைச் சுற்றி இருக்கும் அழிந்து போகும் மக்களின் இரட்சிப்பைக்குறித்து கவலையற்றிருப்போமானால் நித்திய அழிவாகிய தண்டனைக்குத் (அக்கினி கடலுக்கு) தப்ப முடியாது.

தேசம் இத்தனை பெரிய இரட்சிப்பை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன?

1. நாம் ஜெபிப்போம்.

2. நாம் சாட்சியாய் இருப்போம்.

3. நாம் சாட்சி சொல்லுவோம். 

4. நாம் சுவிசேஷம் சொல்லுவோம்.

5. நாம் ஆத்துமாக்களுக்காக நேரத்தைச் செலவிடுவோம்.

6. நாம் ஊழியம் செய்ய எழும்புவோம்.

7. நாம் ஊழியம் செய்வோரை எழுப்புவோம்.

8. நாம் ஊழியம் செய்வோரை ஜெபித்துத் தாங்கிடுவோம்.

9. நாம் ஊழியம் செய்வோரை கொடுத்துத் தாங்குவோம்.

10.நாம் நமது ஆஸ்தியை வடநாட்டு தென்னாட்டு ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணுவோம்.

இவ்வளவுப் பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலை உள்ளவர்களாகி தண்டனைக்குத் தப்புவோம். கர்த்தர் வருகிறார்; அவரைச் சந்திப்போம்.  

கர்த்தரின் வேலைக்காரன்

P. அற்புதராஜ் சாமுவேல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்