-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

அதிசீக்கிரத்தில் வருகிறவராகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும். மெய்யாகவே, மெய்யாகவே அவரது வருகை மிக சமீபமாகிவிட்டது, எப்படி என்றால் அவர் வரும்போது என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்று சொன்னாரோ அவைகளெல்லாம் அப்படியே நடந்துகொண்டிருக்கின்றன. இயேசு வாசலருகே வந்துவிட்டார். இதை அறிந்த நாம் அதற்கு ஏற்றாற்போல் வாழவேண்டும். ஏதோ ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்குப் போனேன், ஆராதித்தேன், மறுபடி திங்கள் கிழமை பழைய வாழ்க்கை என்று வாழக்கூடாது. ஞாயிற்றுக் கிழமை என்றால் அனலாக மாறுவது, திங்கள் கிழமை முதல் குளிராக வாழ்வது என்று இருந்தால், இயேசு Sunday வந்தால் பறப்போம், Monday வந்தால் இருப்போம் என்ற நிலையாகிவிடும். ஆனால் ஆண்டவருக்கென்று வெறிபிடித்து வாழ்கிற கூட்டமாக மாற வேண்டும். இப்படி உங்களை உருவாக்குவதற்காகவே இந்த பாதைக்கு வெளிச்சம் ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. எனவே அவருடைய வருகைக்கு நீங்கள் வைராக்கியத்தோடு காத்திருக்கும்படியாக ஆண்டவர் கொடுத்த வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஆண்டவர் சொல்கிறார்:- அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள் (எசே 44:23) பரிசுத்தம்  என்றால் என்ன, அசுத்தம் என்றால் என்ன பரிசுத்தம் உள்ளவன் எப்படி நடப்பான்? அசுத்தம் உள்ளவன் எப்படி நடப்பான்? என்கிற வித்தியாசத்தை அவருடைய ஜனத்திற்கு தெரியப்பண்ணக் "கடவர்கள்" என்று கட்டளையிடுகிறார். எனவே ஆண்டவர் எனக்குச் சொன்னதை நான் உங்களுக்கு இந்த இதழ் மூலம் தெரியப்பண்ணுகிறேன். வேதம் சொல்கிறது. "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளி 1:6) நீங்கள்  இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள்தானா? இந்த கேள்வியை கேட்டவுடனே உங்களுக்குள் சந்தேகம் உண்டாகிறதா? திருமணமான ஒருவரிடம் உனக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டால், அவர் அதற்கு தனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என யோசித்துக் கொண்டிருக்க மாட்டார். இதைப் போலவே அநேகருக்குச் சந்தேகம், நான் கழுவப்பட்டவனா இல்லையா என்று.

உங்களுக்கு நிச்சயத்தை கொடுக்கும் சத்தியத்தைச் சொல்கிறேன். பாவமன்னிப்புக்கு என்று ஞானஸ்நானம் என வேதம் தெளிவாய் சொல்கிறது. எனவே நீங்கள் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றிருந்தால் உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள். M.A படித்த ஒருவரிடம், நீ S.S.L.C கூட படிக்கவில்லை என்று சொன்னால் உடனே அவர் தனது சர்டிபிகேட்டை காண்பித்துவிடுவார். அப்படி காண்பித்தால் அவர் M.A படித்தவர் என்று ஊருக்கே தெரியும். அதைப் போலவே நீங்கள் மனம் திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் பெற்றிருந்தால் நீங்கள் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி கழுவப்பட்டவர்களைத் தான் இராஜாக்கள் மற்றும் ஆசாரியர்கள் என்று வேதம் சொல்கிறது. பார்ப்பதற்கு வேண்டுமானால் நீங்கள் இராஜாவைப் போல் இல்லாமல் இருக்கலாம். சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கலாம். பெரிய உத்தியோகம் இல்லாமல் இருக்கலாம். பரம ஏழையாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் இராஜாக்களே.

இயேசுவும் கூட கட்டப்பட்ட நிலையில் இருந்தபோது, பிலாத்து ஒவ்வொரு கேள்வியாய் கேட்கும் போதும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது நீ யூதருடைய இராஜாவா என்று கேட்டபோது, ஆம் நீ சொல்லுகிறபடி தான் என்றார். அவருடைய நிலைமையோ கட்டப்பட்ட நிலை. ஆனாலும் இராஜா என்று சொல்கிறார். அப்படியே நீங்களும் எந்த நிலைமையில் இருந்தாலும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருந்தால் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இராஜாக்களே.

அப்படி இராஜாக்களாய் வாழ்ந்த இருவருக்கு இடையே உள்ள வித்தியாசத்தை நான் உங்களுக்கு காண்பித்துக் கொடுக்கப் போகிறேன். ஒருவன் பரிசுத்தமுள்ளவன், மற்றவன் அசுத்தமானவன். ஒருவன் தகப்பன் மற்றவன் அவன் பிள்ளை. ஒருவன் தாவீது மற்றொருவன் அவனுடைய பிள்ளை அப்சலோம், இந்த இருவருக்கும் இடையே உள்ள, தேவன் காண்பித்துக் கொடுத்த வித்தியாசத்தை இப்போது பார்க்கலாம்.

முதல் வித்தியாசம்

கர்த்தர் சாமுவேலை நோக்கி:     இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான் (1 சாமு 16:1,13) தாவீதை இராஜாவாக கர்த்தரே அபிஷேகம் பண்ணினதை இங்கே நாம் பார்க்கிறோம். பரிசுத்தமுள்ளவனின் வாழ்வில் இப்படித்தான் நடக்கும்.

எனவேதான் இயேசு நீங்கள் என்னை தெரிந்துகொள்ளவில்லை நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று சொன்னார். அப்படி யாரை அவர் தெரிந்து கொண்டாரோ அவர்களோடுதான் உடன்படிக்கையும் செய்துள்ளார். எனவே ஞானஸ்நானம் பெற்றவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அப்படியென்றால் அவரால் இராஜாவாக ஆக்கப்பட்டவர்கள். மனந்திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் பெற்றவர்கள் மனிதர்களால் அல்ல, தேவனாலே இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். இப்படி இருப்பவன் பரிசுத்தமுள்ளவன்.

தேவனால் இராஜா ஆக்கப்படுதல் 
 

இப்பொழுது பரிசுத்தம் இல்லாதவன் எப்படி இருக்கிறான் என பார்க்கலாம் அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான் (2 சாமு 15:10) இப்படியாக ஜனங்களால் அப்சலோம் இராஜாவாக ஆக்கப்பட்டான்.

இங்கே அப்சலோமை இராஜா என்று ஜனங்கள்தான் சொன்னார்களே தவிர, தேவன் சொல்லவில்லை. இந்த ஜனங்களும் கூட எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களென்றால் "எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்" என்று அடுத்த வசனம் சொல்கிறது.

இதைப் போலவே இன்றைக்கும் கூட தேவனால் அல்ல, தாங்களாகவே, நாங்களும் இராஜாக்கள்தான் நாங்களும் இரட்சிக்கப் பட்டவர்கள்தான் என்று அநேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றால், குழந்தையிலேயே ஞானஸ்நானம் பெற்றவர்கள்.

மனிதர்களால் இராஜா ஆக்கப்படுதல்

பெற்றோரால், ஊராரால், ஐயரால் இராஜாவாக ஆக்கப்பட்டவர்கள் அப்சலோமைப் போல் பரிசுத்தமில்லாதவர்களே. இவர்கள் தேவனுடைய பார்வையிலே இராஜா அல்ல.

இது பரிசுத்தம் உள்ளதற்கும் பரிசுத்தம் இல்லாததிற்கும் இடையே உள்ள முதல் வித்தியாசம்.

இரண்டாம் வித்தியாசம்

இரண்டாவது வித்தியாசம் என்ன என்றால் ஆண்டவரின் வார்த்தை சொல்கிறது "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன்" (சங் 32:8) பரிசுத்தமுள்ளவர்கள் தங்களுடைய பிரச்சனைகளிலே, போராட்டங்களிலே, சூழ்நிலை எதிராய் இருக்கும்போது தேவனிடத்தில் ஆலோசனைக் கேட்பார்கள். பரிசுத்தமுள்ள தாவீது என்ன செய்கிறான் பாருங்கள் "இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது." (1 சாமு 23:1) தாவீது பெரிய இராஜாவாக இருப்பவன். இது மாத்திரமல்ல பதினாயிரம்பேருக்கு சமமானவன். பராக்கிரமசாலி, பெலிஸ்தர் கொள்ளையிடுகிறார்கள் என்று அறிந்தவுடன் தாவீது என்ன செய்திருக்க வேண்டும். உடனே தன் இராணுவத்தை கூட்டி, தன் தளபதிகளை அழைத்து யுத்தத்திற்கு சென்றிருக்கவேண்டும். ஆனால் அவன் என்ன செய்கிறான் பாருங்கள். அப்பொழுது தாவீது: நான் போய் அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார். (1 சாமு 23:2) தாவீது யுத்தத்தில் வல்லவன்தான், ஆனாலும் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலை மத்தியில் கர்த்தரிடத்தில் போய் ஆலோசனைக்காக ஆண்டவரிடத்தில் நிற்கிறான்.

என மனிதர்களை தேடாமல் தேவனிடத்தில் போய் வேதத்திலிருந்து தேவ ஆலோசனையைத் தேடுவான் நீங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது யோசியுங்கள். நீங்கள், உங்களுக்கு எதிரான சூழ்நிலைகளின் மத்தியில் யாரிடம் போய் நிற்கிறீர்கள். ஒருவேளை இந்த அனுபவத்தில் வளராதவர்களாய் இருந்தால், உங்களால் வேதத்தில் இருந்து ஆலோசனை பெற ஆரம்பத்தில் கடினமாக இருந்தால், வேதத்தில் தேறின பரிசுத்தவான்களிடத்தில் கேளுங்கள். பரிசுத்தமுள்ளவர்கள் ஒருபோதும் உலகத்து மனிதர்களின் பின்னே போக மாட்டார்கள்.

ஆனால் அசுத்தமுள்ளவனின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்" (2 சாமு 16:20) இங்கே அப்சலோம் அகித்தோப்பேலிடம் ஆலோசனை கேட்கிறான். இந்த அகித்தோப்பேல் யார் தெரியுமா? இவன் ஒரு துரோகி. அப்சலோமின் அப்பா தாவீது இராஜாவாக இருக்கும்போது தாவீதுடன் இருந்தவன். பின்னர் அவனது பிள்ளை அப்சலோம் இராஜாவாக வந்தவுடன் தாவீதை விட்டுவிலகி சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று, தனக்கு ஒரு POSTING கிடைத்தால் போதும் என்று எண்ணி அப்சலோமோடு சேர்ந்து கொண்டவன். இப்படிப்பட்ட அகித்தோப்பேலிடம்தான் அப்சலோம் ஆலோசனை கேட்கிறான். ஆனால் தாவீதோ தேவனிடம் கேட்கிறான். இதுதான் பரிசுத்தமுள்ளவனுக்கும் பரிசுத்தமில்லாதவனுக்கும் உள்ள வித்தியாசம்.



அடுத்ததும் அப்சலோம் என்ன செய்கிறான் என்று பாருங்கள். "ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்" (2 சாமு 17:6) இங்கேயும் அப்சலோம் ஊசாய் என்னும் மனிதனிடத்தில்தான் மறுபடியும் ஆலோசனைக்காக நிற்கிறான். காரணம் இவன் அசுத்தமுள்ளவன். எனவே அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய சூழ்நிலைகளில் நீ ஆலோசனைக்காக நீ தேவனிடத்தில் போகிறாயா? அல்லது உலக மனிதனிடத்தில் போகிறாயா? என்பது நீ பரிசுத்தமுள்ளவனா? அல்லது அசுத்தமுள்ளவனா? என்ற வித்தியாசத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.

மூன்றாம் வித்தியாசம்

மூன்றாவதாக பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பார்க்கலாம். கர்த்தர் சொல்கிறார் "நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்" (சங் 105:15) கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்களுக்கு விரோதமாக, அவருடைய ஊழியர்களுக்கு எதிராக செயல்படக்கூடாது என்பதே தேவனுடைய வார்த்தை.

பரிசுத்தமுள்ளவன் தாவீதின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். "அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி, தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்து போனான்." (1 சாமு 24:6,7) தாவீதினுடைய கூட்டத்தார் சவுலைக் கொலை செய்துவிடலாம் என்று சொன்னபோது, தாவீதோ அதற்கு மறுத்துவிட்டான். சவுல் தாவீதுக்கு எதிராய் செயல்படுகிறவன்தான். இப்பொழுதும் அவனிடத்தில் பரிசுத்த ஆவி இல்லைதான், அசுத்த ஆவியில் நிறைந்தவன்தான். ஆனாலும் கர்த்தர் முதலில் சவுலை இராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்ததினாலே அவனுக்கு விரோதமாக என் கையை போடமாட்டேன் என்று மறுத்துவிட்டான். ஆண்டவர் வேண்டுமானால் சவுலை அடிக்கட்டும் நான் அப்படி செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டான். இதுதான் பரிசுத்தமுள்ளவனின் குணம்.

இங்கே அசுத்தமுள்ள மனிதன் என்ன செய்கிறான் பாருங்கள் "பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்து கொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன்; இப்படிச் செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது". (2 சாமு 17:1-4) அப்சலோமோ தாவீதை தேவனே அபிஷேகம் பண்ணியிருந்தபோதும் அவனைக் கொலைச் செய்யும் ஆலோசனைக்கு உடன்படுகிறான்.. அருமையான சகோதரனே சகோதரியே தேவன் அபிஷேகம் பண்ணின ஊழியர்களுக்கு விரோதமாக ஒருநாளும் செயல்படாதீர்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள் அது போதும். ஆண்டவர் பார்த்துக்கொள்வார். ஆனால் நீங்கள் எதிராய் செயல்பட்டு உங்களுக்கு நஷ்டத்தை வரவழைத்துக்கொள்ளாதீர்கள்

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒருமுறை காஞ்சீபுரத்தில் ஒரு ஊழியர் சபை நடத்திக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருப்பவர்களில் சிலர் அவருக்கு மிகவும் தொந்தரவு செய்துகொண்டிருந்தார்கள். ஒருநாள் அந்த தொந்தரவு செய்தவர்களின் முக்கியமானவர் இந்த ஊழியர் சபை நடந்துகொண்டிருக்கும்போது நேரே உள்ளே வந்து ஓங்கி கன்னத்தில் அடித்துவிட்டார். ஆனால் ஊழியரோ எதுவும் பேசாமல் அமைதியாய் சகித்துக் கொண்டார். நடந்தது என்னவென்றால் அடுத்த சில மாதங்களுக்குள் அடித்த நபர் கேன்சரால் பாதிக்கப்பட்டுவிட்டார்.

இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். நான் இரட்சிக்கப்பட்ட புதிதில் சுவிசேஷம் சொல்வதற்காக எனது நண்பர்களுடன் செல்வேன்.வசனம் சொல்ல தெரியாது, அதனால் யாரைப் பார்த்தாலும் சினிமா பார்க்காதீர்கள். ஆண்களாக இருந்தால் சாராயம் குடிக்காதீர்கள், சிகரெட் குடிக்காதீர்கள் இப்படித்தான் சொல்வோம். ஒருநாள் எங்கள் ஊரில் உள்ள ஆசிரியரிடம் சினிமா பார்க்காதீர்கள் என்று சொன்னோம். அவர் கிறிஸ்தவர்தான் ஆனாலும் உடனே எங்களிடம் சண்டைபோட்டார் அப்படி எங்கே வசனம் சொல்கிறது என்றார். அது மட்டுமல்லாமல் நாங்கள் சென்ற சபையின் பாதிரியாரிடமும் சொல்லிவிட்டார். பாதிரியார் ஆலயத்தில் செய்திகொடுக்கும்போது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களெல்லாம் சினிமா பார்க்காதே என்று சொல்கிறது. ஆனால் அப்படி வசனம் இல்லை நீங்கள் சினிமா பாருங்கள் ஆனால் பக்கத்தில் இயேசு இருப்பதாக நினைத்துக்கொண்டு பாருங்கள் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கோ வெட்கமாய் போய்விட்டது. அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்றால் அவரோ பிள்ளைகளுடன் இரவு இரண்டாவது காட்சி சினிமாவுக்குச் செல்பவர். ஒருநாள் ஒரு சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஒருவன் அடியாட்களை வைத்து மாலை 4:30 மணிக்கு அவரை அடிக்க திட்டம் போட்டிருந்தான்.

ஆனால் நடந்ததோ 3:30 மணிக்கு அவனுக்கு பயங்கர கண்வலி வந்து மிகவும் துடித்தான் அவனது அடியாட்களெல்லாம் அவனைக் காப்பாற்ற வந்துவிட்டார்கள். பாதிரியார் தப்பித்துவிட்டார் அவனோ வாழ்நாளெல்லாம் கண் பாதிக்கப்பட்டவனாய் மாறிவிட்டான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பாதிரியார் அபிஷேகம் பெறாதவர்தான், சினிமா பார்ப்பவர்தான், ஆனாலும் அவர் ஆண்டவருடைய ஊழியக்காரராய் இருப்பதினால் அவருக்கு எதிராய் செயல்பட்டதினால் இந்த விளைவு. எனவே ஒருநாளும் அப்சலோமைப் போல தேவன் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாய் கையைப் போட நினைக்காதீர்கள். தாவீதைப் போல ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள். இதுதான் வித்தியாசம்.

நான்காம் வித்தியாசம்

நான்காவதாக பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பார்க்கலாம். வேதம் சொல்கிறது "ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" (1 கொரி 10:31) கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். (1 கொரி 6:20) நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பரிசுத்தமுள்ளவன் எதைச் செய்தாலும் அதிலே தேவன் மகிமைப்படவேண்டும் என யோசிப்பான். நீங்கள் எந்தவொரு காரியத்தையும் எப்படி எதற்காக செய்கிறீர்கள். காலையில் எழுந்தது முதல் உடை உடுத்துவது, அலங்கரிப்பது, சாப்பிடுவது, இவைகளெல்லாம் எதற்காக, 4 பேர் உங்களை மதிக்க வேண்டும், உங்களை மேன்மையாக எண்ணவேண்டும் என்று செய்வீர்களானால் அது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கும். பரிசுத்தமுள்ள தாவீது என்ன செய்தான் பாருங்கள் "சாலமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்" (1 நாளா 22:7) தேவனுடைய நாமத்திற்கு, அவருடைய மகிமைக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என யோசிக்கிறான். ஆனால் அப்சலோமோ செய்தது என்னவென்றால் சாமு "அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்கு தன் பேரைத் தரித்தான்; அது இந்நாள் வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்" (2 18:18) இதுதான் அசுத்தமுள்ளவன் செய்வது. தன் பேரை நினைக்கும்படி, தனக்காக தூணை நிறுத்தினான். பரிசுத்தமுள்ளவன் ஒன்றையும் ஒருநாளும் தனக்கென்று செய்யமாட்டான். தேவனுக்கென்று அவருடைய மகிமைக்கென்று எதைச்செய்வது என்றுதான் யோசிப்பான். சவுலும் கூட தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பத்தை நாட்டினான். அவனுடைய முடிவு நான்றுகொண்டு செத்தான். தனக்கென்று எதைச் செய்தாலும் முடிவு இப்படித்தான் இருக்கும்.

என்னுடைய சபையிலே யார் எவ்வளவு கொடுத்தாலும் ஒருநாளும் யாருடைய பெயரையும் சொல்வதில்லை. 50 ரூபாயாக இருந்தாலும், கோடி ரூபாயாக இருந்தாலும் ஒரு சகோதரன் கொடுத்தார், ஒரு சகோதரி கொடுத்தார் என்றுதான் சொல்வேனே தவிர பெயரை சொல்வதில்லை. ஆனால் சில இடங்களில் ஒரு பேன் வாங்கி கொடுத்துவிட்டால் அதில் உபயம் என்று பெயரை போட்டு, கடைசியில் பேன் ஓடினால் பெயர் தெரியவில்லை என்பதற்காக பேனை ஓடாமலே வைத்துவிடுவார்கள். தன்னை நினைக்க வேண்டும் என்று எதைச் செய்தாலும் அது அசுத்தமே. தலைக்கு டை அடிப்பது, நகத்துக்கு பாலீஷ் போடுவது இப்படியெல்லாம் செய்து 60 வயதில் 30 வயது போல் தெரியவேண்டும் என நினைத்தால் அது தன் மகிமைக்காக செய்வதே. இது தேவனுடைய பார்வையில் அருவருப்பு. இது வரை தெரியாமல் செய்திருந்தால் உன்னை மாற்றிக்கொள். ஏனென்றால் வேதம் சொல்கிறது. "உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்." (யோபு 13:12) சாம்பல் என்பது மாட்டின் கழிவு சாணம், அந்த சாணத்தையும் எருவாட்டியாக்கி அதையும் எரித்து பின் ஒன்றுக்கும் உதவாததுதான் சாம்பல். இதைப் போல தன்னை நினைக்கும் படி எதைச் செய்தாலும் சாம்பலைப் போல ஒன்றுக்கும் உதவாததாகிவிடும்.நான் சிறுவனாக இருந்தபோது 2 குடிசையில் இருந்தோம். பெரிய இடம் இருந்தது. நன்றாகத்தான் இருந்தோம். பின்னர் அந்த இடத்தில் 9 ரூம் உள்ள பெரிய வீட்டைக் கட்டினார்கள். ஆனால் அதற்குப் பெயர் வைத்தபோது ஐசக் காட்டேஜ் என பெயர் வைத்துவிட்டனர். ஐசக் எனது அப்பாவின் பெயர். எனது அப்பாவிற்கு தெரியுமா இல்லையா என எனக்குத் தெரியாது. நான் சிறுவனாக இருந்தேன். ஆனால் இன்றைக்கோ 9 ரூம் இருந்த அந்த வீடு இன்றைக்கு தரை மட்டமாகிவிட்டது. இன்றைக்கும் இப்படித்தான் தங்கள் பெயரை நினைக்கும்படி வீடுகளுக்குப் பெயர் வைக்கிறார்கள், சாம்பலுக்குச் சரியாய் மாறிவிடும்அப்சலோம் அசுத்தமுள்ளவனாய் இருந்தபடியினாலே, தன்னை நினைக்கும்படி தூணை நிறுத்தினான். ஆனால் தாவீதோ தேவன் மகிமைப்படவேண்டும் என்று ஆலயத்தைக் கட்ட நினைத்தான். இதுதான் 4 வது வித்தியாசம்.

ஐந்தாம் வித்தியாசம்

ஐந்தாவதாக "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1 சாமு 16:7)  நம்முடைய தேவன் இருதயத்தைப் பார்க்கிறவர். எனவே நாம் இருதயத்தில் நம்முடைய எண்ணத்தில் பரிசுத்தமுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரமே தேவனைச் சந்தோஷப்படுத்த முடியும். சிந்தையில் சுத்தமுள்ளவர்களே தேவனுக்குப் பிரியமானவர்கள். இப்போது தாவீது எப்படிப்பட்டவனாய் இருக்கிறான் பாருங்கள். "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்" (அப் 13:22) தேவனே சாட்சி கொடுக்கும் அளவிற்கு, தாவீது அவருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டவனாய் இருந்தான்.

ஆனால் அசுத்தமுள்ள அப்சலோமின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள் "எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி, முத்தஞ்செய்வான். இந்தப் பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான்." (2 சாமு 15:5) ஜனங்கள் தாவீதினிடத்தில் நியாயம் விசாரிப்புக்காக வரும்போது இவன் இடையிலேயே நின்று அவர்களைக் கட்டித் தழுவி மனிதர்களின் இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். அருமையான சகோதரனே சகோதரியே இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள்? சிகரெட் குடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மனைவிக்கு தெரியக் கூடாது என்பதற்காக கடலை மிட்டாய் தின்பது எதற்காக, மனைவிக்கு தெரியாமல் மனைவியின் இருதயத்தைக் கவர்வதற்காக. கணவன் மனைவியிடம் அவரது அப்பா வீட்டுக்கு போகக் கூடாது என்று சொல்லியிருந்தும் கணவனுக்குத் தெரியாமல் அப்பா வீட்டுக்கு போய்விட்டு, கணவனிடம் இந்த பூனையும் பால்குடிக்குமா என்பதுபோல் நடிப்பது எதற்காக, கணவனின் இருதயத்தைக் கவர்ந்து கொள்வதற்காக, இன்னும் எத்தனையோ விசுவாசிகள் போதகரின் இருதயத்தைக் கவர்வதற்காக பயங்கர நடிகர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ போதகர்கள் விசுவாசிகள் இருதயத்தைக் கவர்வதற்காக தங்களை பரிசுத்தமாக காட்டுகிறார்கள். அசுத்தமுள்ளவர்கள்தான் மனிதருடைய இருதயத்தைக் கவர வேண்டும் என நினைத்து செயல்படுவார்கள். ஆனால் சுத்தமுள்ளவர்களோ தேவனுடைய இருதயத்தைக் கவருமளவிற்கு வாழ்வார்கள்.

ஆறாம் வித்தியாசம்

ஆறாவதாக பரிசுத்தமுள்ளவனுக்கும் அசுத்தமுள்ளவனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால். வேதம் சொல்கிறது "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி 28:13) இப்பொழுது இந்த வசனத்திற்கு தாவீது எப்படிப்பட்டவனாய் இருக்கிறான் பாருங்கள்.

51 வது சங்கீதத்தின் தலைப்பு இப்படிச் சொல்கிறது "பத்சேபாளிடத்தில், தாவீது பாவத்திற்கு உட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவன் பாவத்தை உணர்த்தின போது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்." இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் பாடினான் என்பது இதன் தலைப்பிலிருந்தே விளங்கும். தீர்க்கதரிசி அவன் பாவத்தை உணர்த்தும் போது கதறுகிறான், ஐயோ தேவனே என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்ததினால் இப்படிச் செய்துவிட்டேன். நீர் என்னை ஈசோப்பினால் கழுவும் என்று செய்த தவறுக்கு அழுது மன்னிப்புக் கேட்கிறான். தன் பாவங்களை மறைக்கவில்லை. அதன்பிறகு பாவம் செய்யவில்லை.

ஆனால் அசுத்தவானின் நிலையைப் பாருங்கள். "அப்படியே அப்சலேமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்." (2 சாமு 16:22) தாவீது தப்பிப் போகும் போது அவனுடைய மறுமனையாட்டிகளில் பத்துபேரை வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்றுவிட்டான். ஆனால் அப்சலோமோ இவர்களிடத்தில் பிரவேசித்தான் அவன் வருந்தி மன்னிப்பு கேட்கவே இல்லை

நீங்கள் எப்படி என்று யோசித்துப் பாருங்கள். அப்சலோமைப் போல தவறு மட்டுமல்ல ஒரு சின்ன "பின்" எடுத்தால் கூட மனது அடித்துக் கொள்ளவேண்டும். சிறு சிறு பிழையானலும் கூட வருந்தி மன்னிப்புக் கேட்பவன் தான் பரிசுத்தமுள்ளவன். இப்படி நீங்கள் இருந்தால் "YOU ARE RIGHT" ஆனால் அசுத்தமுள்ளவனோ மனம் வருந்தாமல் தவறு செய்வதில் துணிகரமாகிவிடுகிறான். தவறு செய்யும் போது உங்கள் மனது எங்கோ குத்தவில்லை என்றால் "SOMETHING WRONG". உணர்ந்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

கடைசியாக பரிசுத்தமுள்ளவனின் முடிவும் அசுத்தமுள்ளவனின் முடிவும் என்ன ஆனது என்று பாருங்கள். "இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான். அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான். அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.(1 நாளா 29:26,27,28) இதுதான் பரிசுத்தமுள்ளவனின் முடிவு நல்ல ஆசீர்வாதமான முடிவு.

அப்சலோம் முடிவு எப்படி இருந்தது என்றால் "அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறுகழுதை அப்பாலே போயிற்று." - "ஆதலால் யோவாப் மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான். அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்" - அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்;. (2 சாமு 18:9,14,15,17) இராஜாவின் ஸ்தானத்தில் இவனை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை.

பரிசுத்தமுள்ளவனுக்கும் அசுத்தமுள்ளவனுக்கும் உள்ள று   வித்தியாசங்கள்

பரிசுத்தமுள்ளவன்

அசுத்தமுள்ளவன்

1

தேவனால் இராஜாவாகுபவன்

மனிதனால் இராஜாவாகுபவன்

2

தேவ  ஆலோசனை கேட்பவன்

மனித ஆலோசனை கேட்பவன்

3

ஊழியருக்கு தீமை செய்யாதவன்

ஊழியருக்கு தீமை செய்பவன்

4

தேவ மகிமை தேடுபவன்

சுய மகிமை தேடுபவன்

5

தேவனை கவர்பவன்

மனிதனை கவர்பவன்

6

பாவத்தில் வருந்துபவன்

பாவத்தில் துணிகரமானவன்

அருமையான சகோதரனே, சகோதரியே, பரிசுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும், பரிசுத்தவானின் வாழ்க்கைக்கும் அசுத்தனின் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை தேவன் காண்பிக்கச் சொன்னார். காண்பித்துவிட்டேன். இயேசு சொன்னார் "அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." (வெளி 22:11,12) சபையில் இருப்பவர்களைப் பார்த்துத்தான் இப்படிச் சொல்கிறார். பரிசுத்தம் எது என்பதை அறிந்த நாம் இன்னும் பரிசுத்தமாவோம். அசுத்தமுள்ளவனின் வாழ்க்கை என்பதை அறிந்த நாம் நம்மை மாற்றிக் கொள்வோம். இதோ சீக்கிரமாய் வருகிறார். பரிசுத்தமுள்ளவர்களாய் அவரைச் சந்திக்க தேவன் நமக்குக் கிருபை தருவாராக."

கர்த்தரின் வேலைக்காரன்

P. அற்புதராஜ் சாமுவேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்