-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அதோனிராம் ஜட்சன் - மிஷனரி வாழ்க்கை வரலாறு (Adoniram Judson - Missionary Story Tamil)


ஒரு குருவானவர் வீட்டில் சிறுவர் குழு ஒன்று  “என்னுடைய சுவிசேஷத்தைப் போய் பிரசங்கி என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தது. அது ஒரு ஞாயிறு பள்ளியோ? சிறுவர்களுக்கான கூட்டமோ அல்ல. பாடலுக்குப் பின் நான்கு வயதுபையன் ஒருவன் நாற்காலியின் மீது ஏறி நின்றான். அந்தக் கூட்டத்திற்கு மிகவும் பக்தி வினயமாக அருளுரை ஆற்றினான்.

இந்தச் சிறு பிள்ளைகள் "சபை விளையாட்டு" விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் குருவானவரின் மகனான அதோனிராம் ஜட்சன் அருளுரை ஆற்றினான்.

அதோனிராம் ஜட்சன்

இளமைப் பருவம்

அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கினார்.

அறிவும் திறமையும் கொண்ட மாணவன்

மூன்று வயதிலேயே இவர் தெளிவாகப் படிக்க கற்றுக் கொண்டார். வேதப் புத்தகத்தின் ஒரு முழு அதிகாரத்தையும் ஒரு நாள் இவர் வாசிக்கக் கேட்ட இவர் தந்தை பெரும் வியப்புக்குள்ளானார். கணிதத்தில் அவருக்குப் பெருவிருப்பம் உண்டு. பத்து வயதிலேயே ஒரு கணித மேதையாக விளங்கினார். மேலும் அவர் லத்தீன், கிரேக்க மொழிகளில் கருத்துள்ள இறையியல் புத்தகங்களையும் படித்தார் . கிரேக்க மொழியில் இவருக்கு இருந்த திறமை குறிப்பிடத்தக்கது. 16-ம் வயதில் ப்ரௌன் பல்கலை கழகத்தில் இவர் அடி எடுத்து வைத்து 19 -ம் வயதில் தன் வகுப்பில் முதல்வராகப் பட்டம் பெற்றார். தன்னுடைய கல்லூரி நாட்களில் தன்னைப் போன்ற திறமையான ஒரு நண்பனைக் கண்டார்.

ஆனால், அந்த நண்பனோ ஆண்டவரை விசுவாசியாதவனாக இருந்தான். அந்த இளைஞன் வேதாகமத்தையோ அல்லது வேத அற்புதங்களையோ நம்பவில்லை. அந்த நண்பனாலே கவரப்பட்ட அதோனிராம் ஜட்சன் தானும் வேதத்தை நம்பாத ஒருவனாக மாறியதால், கடவுளை ஒருவன் தனிப்பட்ட முறையிலே அறிந்து கொள்ள முடியாது என்று கூறினார். இதனால் அவருடைய பெற்றோர் மிகவும் புண்பட்டார்கள். ஜட்சன் தன்னுடைய பட்டப்படிப்பிற்குப் பிறகு தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக ஆசிரியராக வர வேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டார். ஆகவே, அவர் நியூயார்க் பட்டணத்தில் உள்ள ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார் .

கடவுளை கண்ட முறை

இளைஞரான அதோனிராமின் வாழ்க்கையில் எந்தவிதமான குறிக்கோளும் இல்லாததினால் அவர் மிகவும் நிம்மதி அற்றவராகக் காணப்பட்டார். நாடகக் குழுவில் சேர்ந்தும் அவர் திருப்தி அடைய முடியவில்லை. கிறிஸ்து அற்ற ஒரு மனிதனின் பாடுகளையும், வேதனைகளையும் அவர் அனுபவித்தார். ஒரு இரவிலே தான் தங்கியிருந்த ஒரு கிராமப் புறத்து விடுதியில் தன் அறையின் பக்கத்திலே மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் அவலக்குரலைக் கேட்டார்.  இரவு விழித்திருந்து மனக்குழப்பத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை வேளையில் அவர் யார் என்று விசாரித்தபோது ப்ரௌன் யூனிவர் சிட்டியிலே தன்னுடைய இணைபிரியாத தோழனாக வாழ்ந்த அந்த மனிதனே இப்படி இறந்தான் என்றுகேட்டு அதிகமாகப் பீதியடைந்தார்.

அந்த மனிதன் மரிப்பதற்கு ஆயத்தமாக இல்லை என்பதை உணர்ந்தார் . இந்த உணர்வு இவரை மேலும் சிந்திக்கச் செய்தது . நிம்மதி இன்றி தவித்தார். ஆறு வாரங்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதன்பின் ஆழ்ந்த நிம்மதியைக் கண்டடைந்தார்.

கடவுளின் அழைப்பு

தன்னுடைய வாழ்க்கையிலே மாற்றம் கண்டபிறகு இனி கடவுளைப் பிரியப்படுத்துவது மட்டுமே தன்னுடைய விருப்பமாகக் கொண்டார். "இது கடவுளைப் பிரியப் படுத்துமா?" என்ற வாசகத்தை தன்னுடைய அறையின் எப்பக்கமும் எழுதி வைத்தார். இவர் தன் வாழ்க்கையில் இதுவரை கொண்டிருந்த ஆசைகளை விட்டுவிட்டு இனிமேல் தன் எதிர்கால வாழ்க்கையில் கடவுளைப் பிரியப்படுத்துவதே தன் வாழ்க்கையில் விருப்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் வாசித்த ஒரு புத்தகம் அவருடைய சிந்தனைகளை மிஷனெரிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள திசை திருப்பிற்று. அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது "உலகம் எங்கும் புறப்பட்டுப் போங்கள்" என்று பாடிய பாடல் அவரை அதிகமாகக் கவர்ந்து பற்றிக் கொண்டது. அதுமட்டுமல்ல, இவர் விருப்பமெல்லாம் தான் ஒரு வெளிநாட்டு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்பதாக மாறிவிட்டது. அவரை அனுப்புவதற்காக மிஷனெரி சங்கம் அமெரிக்காவில் அந்த நாட்களில் இல்லாதபடியால் எப்படிச் செல்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. இதுபற்றி அவர் மளக்கமாக ஜெபித்தார். மிஷனெரி பற்றிய தன்னுடைய ஆழமான கருத்துக்களை அருட்பணி வாஞ்சை நிரம்பிய தனது நான்கு நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு ஐந்து பேருமாக சேர்ந்து இதற்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதில் அளித்தார். 1870-ம் ஆண்டு அமெரிக்க அருட்பணி இயக்கம் எற்படுத்தப்பட்டது. இலண்டன் மிஷனெரி சங்கம் அமெரிக்காவின் மினெரிகளைத் தாங்குவதற்கு முன்வருமா என்பதை அறிவதற்காக, ஜட்சன் இலண்டன் மாநகரத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. ஆகவே, ஜட்சன் பயணம் செய்த கப்பல் எதிரிகளால் பிடிபட்டது. அவர் ஒரு பாழடைந்த சிறிய அறைக்குள் கைதியாகத் தள்ளப்பட்டார். தன்னைக் கைதியாக்கினவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்வதற்கு தனக்கு பிரஞ்சுமொழி தெரியவில்லையே என்று ஜட்சன் அதிகமாக வேதனை அடைந்தார். முன்பின் அறியாத ஒர் அமெரிக்கன் ஒருநாள் ஜட்சன் அடைக்கப் பட்டிருந்த சிறைக்கு வந்து ஜட்சனை ராணுவ உடைகளினாலே மறைத்து அவரை வெளியே கொண்டு வந்து விட்டு விட்டார். அவர் இலண்டன் அருட்பணி செயற்குழுவிற்குக் கொண்டு சென்ற பரிந்துரைகளை அது எற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் இங்கிலத்தை அடைந்ததும் கண்டறிந்தார். என்றாலும் அமெரிக்க அருட்பணியின் செயற்குழு அவரைத் தாங்க முன்வந்தது.

முன்பின் அறியாத பூமியில்

அதோனிராம் ஜட்சன் & ஆன் ஹா செல்டின்

அதோனிராம் ஜட்சன், ஆன் ஹா செல்டின் என்ற அம்மையாரை 1812-ம் ஆண்டு மணந்தார். பிறகு மிஷனெரிப் பணி செய்யும் பொருட்டாக இந்தியா நோக்கிப் பயணமானார். ஆனால் அவருக்கான கடவுளுடைய திட்டங்கள் அவரை இன்னொரு தேசத்திற்கு நேராகத் திசை திருப்பியது. அக்காலத்தில் அதிகாரத்திலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியாவில் மிஷனெரி பணி நடைபெறுவதை விரும்பவில்லை. ஆகவே, நான்கு மாத நெடுங்கடல் பயணத்திற்கு பிறகு இந்தியா வந்திறங்கிய ஜட்சன் தம்பதியரை அவர்கள் உடனே அமெரிக்கா திரும்பிச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டனர். இது அவர்களை அதிகமாகச் சோர்ந்து போகச் செய்தது. கடவுள் அவர்களை மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்று அழைக்க வில்லையா? ஆகவே, அவர்கள் இந்தியாவிலேயே தங்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆயினும் பர்மாவில் உள்ள ரங்கூன் சென்று இறங்கும் வரைக்கும் அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கட்டாயமாகக் கப்பல் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்படியாக கடவுள் அவர்களுக்கென்று தெரிந்தெடுத்த இடம் பர்மாவாக மாறியது.

அந்நாட்களில் பர்மா

அந்நாட்களில் பர்மா, சர்வாதிகாரியான ஒரு மன்னனால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது . மக்கள் அவனுக்கு அடிமைகளாகவே இருந்தனர். மிஷனெரிகளுக்கு அவன் ஓர் எதிரியாகவே விளங்கினான். புத்தமதம் பர்மாவின் தேசிய மதமாக இருந்தது. அது பெரும் அளவில் அங்கு பரவியிருந்தது. ஒரு கிறிஸ்தவன்கூட பர்மாவில் கிடையாது. கிறிஸ்துவைப் பற்றி அங்கு ஒருவரும் ஒருபோதும் கேள்விப் பட்டதே கிடையாது. கிறிஸ்து தங்கள் உள்ளங்களில் இல்லாதபடியினால் துக்கம் நிறைந்த முகத்தோடும், பாரம் நிறைந்த இருதயத்தோடும் அங்குள்ள மக்கள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்து கொண்டிருந்தார்கள். இவ்விதமான மக்களைப் பார்த்த ஜட்சனும் அவரது மனைவியாரும் அதிகமாக வேதனை அடைந்தார்கள். அந்த மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும் வாய்ப்பிற்காக அவர்கள் மிகவும் அதிகமாக சிரத்தை எடுத்து அந்த நாட்டு மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜட்சனின் மனைவி இந்தியாவில் உள்ள சென்னைக்கு மருத்துவ உதவிக்காகச் சென்றார். அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எட்டுமாத காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தை இறந்து விட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வேதனை அடைந்தனர்.

கடுமையான உழைப்பு

பர்மியர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே கடவுளுடைய வார்த்தை கிடைக்கும் என்றால் அவர்களால் இரட்சிப்பை கண்டடைய முடியும் என்பதை அதோனிராம் நம்பினார். ஆகவே, அவர் ஒருநாளில் 14 மணி நேரம் வரை பர்மிய மொழியை ஆழமாகக் கற்று வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஒரு சிறிய அச்சிடும் கருவியை வைத்துக் கொண்டு அதன்மூலம் அவர் துண்டுப் பிரதிகளையும் வேதாகமத்தின் பகுதிகளையும் அச்சிடத் துவங்கினார். அச்சிடும் தொழில் அறிந்திருந்த திரு. ஹாக் என்னும் புதிய மிஷனெரி தன்னுடைய மனைவியோடு அங்கு வந்து சேர்ந்தார். எனவே, மத்தேயு எழுதின நற்செய்தி நூல் வெகுவிரைவாக அச்சிடப்படுவதற்கான வேலைகள் துவக்கப் பட்டன. இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்.

பிறகு ஒருநாள் ஜட்சனிடம் ஒருவர் வந்து தனக்குப் படிப்பதற்கு இன்னும் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் தேவை என்று கேட்டார். மத்தேயு நற்செய்தி நூலில் ஐந்து பக்கங்கள் மட்டுமே அச்சமயம் ஆயத்தமாக இருந்தது. அந்தப் பகுதியினை ஜட்சன் அவருடைய கரத்தில் கொடுத்தார். பொதுமக்கள் கூடுவதற்கென்று ஓர் இடத்தை ஜட்சன் அமைத்து அதில் அவர் பர்மிய மொழியில் பிரசங்கம் பண்ணினார். இரவு நேரங்களில் அவர் அதிக நேரம் மக்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார். இவர் பேசுவதைக் கேட்பதில் அநேகர் அக்கறை காட்டினார்கள். அவர்களில் ஒருசிலர் புத்தமத குருக்களாகவும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் வந்து இறங்கி ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே "மௌங் நவ்" என்ற மனிதன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள முன் வந்தான். துன்பம், மரணம் வரினும் தான் தைரியமாக அதை ஏற்றுக்கொள்ள முன் வந்தான். படிப்படியாக இன்னும் சிலர் முன்வந்தார்கள். ஆக, ரங்கூன் நகரத்தில் உண்மையான பதினெட்டு கிறிஸ்தவர்கள் தோன்றினார்கள். அந்த நாட்களிலே, ஆன் அதிகமாக சுகவீனம் அடைந்ததினாலே சிகிச்சைக்காக அமெரிக்க தேசத்துக்கு அனுப்பப்பட்டார்.

ஜட்சன் தன்னுடைய போதனைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தொடர்ச்சியாக செய்து கொண்டு வந்தார். இவர் இறுதியாக புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். அப்போது புதிய சக்ரவர்த்தி ஒருவர் பதவி ஏற்றார். தனது வேலைக்கு அனுமதி பெறும்படி அந்த சக்கரவர்த்தியைக் காணச் சென்றார்.

சிறைக்கூடத்தில் ஜட்சன்

சக்கரவர்த்தி இருந்த இடமாகிய ஆவா பட்டணத்திற்கு ஜட்சனும் அவர் மனைவியும் சென்றபோது அவர்கள் அங்கே சரியான முறையில் வரவேற்கப்படவில்லை. பிரிட்டனுக்கும், பர்மாவுக்கும் இடையே யுத்தம் நடந்தபடியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லாரும் ஒற்றர்களாக எண்ணப்பட்டார்கள். ஜட்சன் கைது செய்யப்பட்டு 17 மாதங்களாக சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டார். சிறைக்கூடம் எல்லாவிதமான கொடுமைகளுக்கும், அசுத்தமான நிலைகளுக்கும் உரியது. ஜட்சனுடைய கால்கள் விலங்கிடப் பட்டன. நடுவே நீண்ட கோல் ஒன்று செலுத்தப்பட்டு தூக்கி வைக்கப்பட்டபடியினாலே அவர் தலை, தோள் ஆகியவை மட்டுமே தரையில் படத்தக்கதாக வைக்கப்பட்டார், சங்கிலிகள் அவர் கால்களில் உள்ள சதையை அதிகமாகக் கிழித்தபடியினாலே வலியின் வேதனையால் துன்பப்படுத்தப் பட்டார். அவருக்கு எந்தவிதமான ஆகாரமோ தண்ணிரோ கொடுக்கப்படவில்லை. காலையில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே அவர் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும், உடற்பயிற்சிக்கென்றும் சிறைக்கூடத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படுவார்.

சிறிது நேரம் கழித்து மறுபடியுமாக சிறைக்கூடத்தில் அடைத்து விடுவார்கள். இவ்விதமான சங்கடமான நிலையில் அவர் வைக்கப்பட்டார். அவருக்கு உணவையும், தண்ணீரையும் ஆன் அம்மையார் கொண்டு வந்தார்கள். அனுதினமும் அதிகாரிகளைப் பார்த்து தன் கணவனை விடுவிக்கும்படியாக அதிகமாக மன்றாடினார்கள். இறுதியாக ஜட்சன் ஒரு திறந்த கூடத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மனைவி ஆன் அம்மையார் தினமும் இருள் கவ்வும் வேளையில் அவரைச் சந்தித்து வந்தார். அவர்கள் இதுவரையும் மொழிபெயர்த்திருந்த வேதாகமப் பகுதிகளை பர்மிய அரசாங்கம் அழித்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனவே, ஆன் அம்மையார் அந்த மொழிபெயர்ப்பு பிரதிகளை எல்லாம் சேர்த்து ஒரு தலையணைப்போல் தைத்து சிறைச்சாலைக்குக் கொண்டு வந்து ஜட்சனிடம் கொடுத்தார். மிகக் கவனத்துடனும், பொறுப்புடனும் ஜட்சன் தன் தலைக்குச் சீராக இதம் அளிக்கும் தலையணைபோல் இரவு பகலாகப் பத்திரமாக அதை வைத்துக் கொண்டார். ஆன் அம்மையாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அருமையாக தான் பெற்றெடுத்த அக்குழந்தையை அதன் தந்தை காண சிறைக்கூடத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், ஜட்சன் காவல் நிறைந்த இருளான சிறைக்கூடத்துள் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கூடத்தின் கதவுகள் அல்லது அங்கே உள்ள சிறிய இடைவெளியின் வழியாக வரும் காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலையில் இருந்தார். சிலநாள் கழித்து அவரும் அவரோடு இருந்த சிறைக் கைதிகளும் திடீர் என்று சற்று தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்திற்குக் கொண்டு போகப்பட்டார்கள். காய்ச்சலினாலும், நோயினாலும் ரத்தம் வடியும் கால்களோடும் இருந்த இவர்கள் மிகவும் வேதனையோடு நடந்தே சென்றனர். ஆன் அம்மையாரும் தன் குழந்தையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தார். அந்தக் கிராமப்புறத்தில் இருந்த ஒரு தானியக் கூடத்தில் ஆன் அம்மையார் தங்க அனுமதிக்கப்பட்டார்.

பாடுகளின் தொடர்ச்சி

இருபது மாதங்கள் பெரும்பாடுபட்ட பிறகு ஜட்சன் பர்மிய அரசின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். ஆறு வாரங்கள் அவர் இந்தப் பணியைச் செய்தபிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் வீடு சென்றபோது அவருக்குக் காத்திருந்த காட்சி அவர் மனதை அதிகமாக உருக வைத்தது . வீட்டின் ஓர் அறையிலே ஒரு பர்மியப் பெண் அரை பட்டினியாகக் கிடந்த ஒரு பிள்ளையோடு இருந்தாள். அடுத்த அறையிலே ஆன் அம்மையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப் பட்டவராகப் படுத்திருந்தார். ஆன் அம்மையார் குணம் அடைந்த பின்னர், குடும்பமாக ஆம்கஸ்ட்டு என்ற இடத்திற்கு மாறிச் சென்றார்கள். அங்கே அம்மையாரை விட்டுவிட்டு ஜட்சன் பிரிட்டிஷ் கமிஷனர் அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆவா பட்டணத்திற்குச் சென்றார். ஜட்சன் அங்கு இருக்கும்போது ஆன் அம்மையார் இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. மனைவியின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியாத நிலையினை எண்ணி ஜட்சன் துக்கப்பட்டார். சில மாதங்களுக்குள் தன் அருமையான பெண் குழந்தையையும் இழந்தார்.

இந்நிகழ்ச்சி அவருடைய துக்கத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவே இருந்தது. துக்கத்தாலே பாரம் அடைந்த அவர் தன் சரீரத்திலேயும் அதிகமாகத் தொய்ந்து போனார். இந்நிலைமையில் இருந்த ஜட்சன் மக்கள் கூட்டத்திலிருந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு அண்மையில் இருந்த காட்டில் ஒரு சிறிய குடிசை அமைத்து அதில் சில காலம் தங்கியிருந்தார். இச்சூழ்நிலையிலும் நடந்த எல்லாக் காரியங்கள் மூலமாக தன்னை ஆண்டவர் தமது அருகில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஏற்படுத்தி இருக்கிறார் என்று ஜட்சன் உணர்ந்தபடியால், அவர் ஆண்டவருடைய அழைப்பையோ அவர் தனக்குச் செய்த காரியங்களைப் பற்றியோ கேள்விகள் கேட்கவில்லை . அதன்பிறகு அவர் மௌல்மீன் என்ற ஊரில் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் தொடர்ந்து ஆண்டவருடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். பின்பு சபையும் அங்கே உண்டானது. 1834-ம் ஆண்டு முழு வேதாகமமும் பர்மிய மொழியில் வெளிவந்தது. 1840-ம் ஆண்டு அது முழுவதுமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், 100க்கும் அதிகமான மக்களுக்கு கானஸ்நானமும் அளிக்கப்பட்டது. கடுமையான உழைப்பினால் அவர் பலம் முழுமையும் குன்றி, காசநோயினால் பாதிக்கப்பட்டார்.

இறுதி ஓட்டம்

33 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே ஜட்சன் தனது தாய்நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார், என்றாலும் அவர் அங்கே அதிகநாள் தங்கியிருக்க விரும்பவில்லை. மீண்டும் அவர் பர்மாவுக்குத் திரும்பினார். திரும்பியவர் திரும்பவும் தன் தாய்நாட்டைக் காணவே இல்லை. அவர் பர்மிய மொழியில் ஒரு சொல்லகராதியை அமைத்து முடித்தார். தனக்கு சுகம் கிடைப்பதற்காக அவ்வப்போது கடல் யாத்திரை செய்தார். அவ்விதமாக, 1850ஆம் ஆண்டு செய்த கடபயணப் ஒன்றில் அவர்பவித்தார் "இந்த பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டுச் செல்வது இல்லை" என்று இளைஞனாக இருக்கும் போதே வைராக்கியமாகத் தீர்மானித்து இருந்தார்அதன் பயனாக 30 ஆண்டுகள் கழிந்த பிறகு பர்மாவில் 63 ஆலயங்களும், 163 அருட்பணியாளர்களும் ஊழியர்களும், ஆண்டவரை ஏற்றுக்கொண்ட 7000-க்கும் மேலானவர்களும் இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையிலே சொந்த இரட்சகராக ஏற்காதவர்கள் நித்திய தண்டனைக்கு உட்பட்டவர்கள் என்பதை ஜட்சன் பூரணமாக நம்பினார். ஆகவே, அவர் தனக்கு இருந்த மேலான வசதிகள், தன்னுடைய  இலட்சியங்கள், தனக்கு அருமையானவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு, துன்பம், வேதனை, கொடுமைகள் இவைகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். பர்மிய மக்களுக்கு இயேசு கிறிஸ்துவை எடுத்துரைப்பதற்கு முன்வந்தார். "நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன், ஏற்றுக் கொண்டவள்" என்று அறிக்கை செய்கிற நீ, உன்னுடைய நண்பர்கள் நடுவிலே, இன்னும் பிற நாடுகளிலே உள்ள மக்கள் மத்தியிலே ஆண்டவரை அறியாதவர்களாய் இருப்பவர்களைப் பற்றிய ஒரு கரிசனை நிறைந்த நிலைமையிலே இருக்கிறாயா? ஆண்டவரை அறியாத மக்கள் இருக்கும் ஓர் இடத்திற்கு, ஒரு நாட்டிற்கு நீ செல்ல வேண்டும் என்று ஆண்டவர் உன்னைத் திட்டமாக அழைத்தால் நீ அங்கு செல்ல ஆயத்தமா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்