-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருமதி. எஸ்தர் வில்லியம்ஸ் - மிஷனரி வாழ்க்கை வரலாறு (Esther Williams - Missionary Biography in tamil)

 

திருமதிஎஸ்தர் வில்லியம்ஸ் அவர்களின் நினைவு இந்தியாவிலும் மற்றும் பல இடங்களில் உள்ளவர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது . தியாகமும் சேவையும் நிறைந்த இவர்களின் வாழ்க்கை அவருடைய பெயருக்கேற்ப மின்னும் நட்சத்திரம் போன்றிருக்கிறது .

அமெரிக்க ஐக்கிய நாட்டில் எஸ்தர் ஃபால்க்னர் என்ற பெயருடன் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். ஆஸ்பரி இறையியல் கல்லூரியில் படித்து ஆண்டவருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து, இந்தியாவிற்கு வந்த பின் இவருடைய வாழ்க்கை மிகவும் பிரசித்தம் அடைந்தது.

1948ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்த பின், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள ஹோஸ்கோட்டா என்ற சிறிய கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். எஸ்தர் போதிக்கும் மிஷனெரியாக (World Gospel Mission) உலக சுவிசேஷ இயக்கம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட இவர் இங்குள்ள மக்களைப் போல் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, கன்னட மொழியையும் கற்றுக் கொண்டு இந்திய மக்களைப்போல் வாழ்ந்தார் .

கன்னட மொழியை சரளமாகப் படிக்கவும் பேசவும் கற்றபின், மக்கள் மத்தியில் தன் பணியை ஆற்ற ஆரம்பித்தார்.  ஞாயிறு பள்ளி பாட திட்டங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்க எளிதாக இருந்தது. பிறகு பங்காரபேட்டை தென்னிந்திய வேதாகமக் கல்லூரியில் கன்னட மொழியில் புலமை பெற்றிருந்ததால் ஆசிரியராக சேர்ந்தார்கள்.

அவர்கள் எதைச் செய்தாலும் திறம்பட செய்து, ஓர் சிறந்த முன் மாதிரி ஆசிரியையாக இருந்தார். அவர்களுடைய உடை, பழக்கம் வழக்கம், அணுகுமுறை, மாணாக்கர்களிடம் வைத்திருந்த தொடர்பு, பயிற்றுவிப்பதில் உபகரணங்களைப் பயன்படுத்தும் விதம் போன்ற திறமைகள் அவர் ஓர் சிறந்த ஆசிரியை என்பதை உறுதி செய்தது. இடது கையால் எழதும் பழக்கம் உள்ளவர். வகுப்பறையில் உரை ஆற்றும்போதும் கல்லூரி சிற்றாலயத்தில் செய்தி கொடுக்கும்போதும் இவர் மிக மென்மையாகவும், எளிமையாகவும் பேசுவார் . இது அநேகருடைய உள்ளத்தை தொட்டது.

அவர் பணியாற்றிய தென்னிந்திய வேதாகமக் கல்லூரியின் ஆண்டு விழாக்களில் அருமையான நாடகங்களை முன்னின்று நடப்பித்து , அதன் மூலம் மிஷனெரி அறைகூவலை மாணவர்களுக்கு அளித்து வந்தார் . அந்த நாட்களில் மிஷனெரி ஜெபக் குழு அவர்களுடைய இறையியல் கல்லூரியில் ஒவ்வொரு வாரமும் கூடி வந்தது. Greasy the Robber என்ற ரஷ்ய கவிதையையும், பண்டித இரமாபாய் போன்ற நாடகங்களையும் மிகவும் திறம்பட இயக்கினார்.

SIBS-ல் நடைபெற்று வந்த மிஷனெரி ஜெபக்குழுவின் தாக்கத்தினால் மாணவர்கள் தாங்கள் பணி புரிந்த திருச்சபைகளில் மிஷனெரி சங்கங்களை ஆரம்பிக்க முடிந்தது. எஸ்தர் அம்மையாரிடம் படித்த அனேக மாணர்கள் கிறிஸ்துவுக்கு வாலிபர் இயக்கம் (YFC), சிறுவர் நற்செய்தி ஐக்கியம் (CEF), மற்றும் (Bible Centerd Ministry) ஊழியங்களில் பங்கு பெற்று, வேதாகமத்தை பயிற்றுவிக்கும் பணியினைத் தொடர்ந்தார்கள். வாலிபர்கள் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தும்படி எஸ்தர் அம்மையார் உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் உற்சாகப்படுத்தியதின் விளைவாக ஒரு மாணவன் Bible Reflection என்ற SIBS செய்தி மடலில் ஒழுங்காக படங்களை வரைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. விடுமுறை வேதாகமப்பள்ளி இயக்கத்தின் மூலம் சிறுவர்கள் மத்தியில் எஸ்தர் அம்மா அயராமல் உழைத்தார்கள். இதன் மூலம் அநேகர் தொடப்பட்டு , ஆண்டவருக்குள் வந்தனர். விடுமுறை வேதாகமப் பள்ளிக்காக மூன்று ஆண்டு பாடத் திட்டத்தை இந்திய சிறுவர்களுக்கு ஏற்றவாறு தயாரித்தார்கள். பிகினர், பிரைமரி மற்றும் ஜூனியர் ஆகிய மூன்று வயதினர்களுக்காக அருமையான பாடத்திட்டத்தை இவர்கள் எழுதினார்கள் .

இந்தப் பாடத்திட்டமானது மிஷனெரி தரிசனம் கொடுக்கும் வகையில் எழுதினார்கள். தொடக்க நிலையிலுள்ள பிகினர் சிறுவர்களுக்குக் கூட மிஷனெரி தரிசனத்தின் முக்கியத்துவம் மிகவும் மென்மையாக புகுத்தப்பட்டுள்ளது. முதல் பகுதியில்  கடவுளின் அன்பு உனக்குஎன்றும், இராண்டாவது பகுதியில்உன் அன்பு கடவுளுக்குஎன்றும் மூன்றாவது பகுதியில்போய் உன் நண்பர்களிடம் கடவுள் உன்னை நேசிக்கிறார் என்று சொல்என்றும் மூன்று படிகளில் எளிதில் புரிந்து செயல்படுத்தும் வகையில் எஸ்தர் அம்மையார் எழுதியுள்ளார்கள். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு, இந்திய அருட்பணி இயக்கம் போன்ற மிஷனெரி இயக்கங்கள் உருவாக்கப்பட இந்தப் போதனை வித்தாக மாறியது.

ஆஸ்பரி செமினரியில் எஸ்தர் படித்தக் கொண்டிருந்த பொழுது மேரி என்ற அறைத் தோழியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகும் இருவரும் நண்பராக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஓர் உடன்பாடும் இருந்தது. ஜக்கியம் தொடர வேண்டும் என்றும் விரும்பினார்கள் . சுவிசேஷகர் Rev. எட்வின் லாக்வுட் என்பவரை மேரி மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு 4 மகன்கள் பிறந்தார்கள். கடைசியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு தனது சினேகிதி ஞாபகார்த்தமாக எஸ்தர் என்று பெயரிட்டாள். அவர்கள் இளம் வாலிப வயதில் லூக்கேமியா என்ற இரத்தப் புற்று நோய் வந்து அதிகமாக ஜெபித்தும் கடைசியில் இறந்துபோனாள்.

இந்தக் குழந்தையின் நினைவாக அவளுடைய கதையை வண்ணப்பட கவிதை புத்தகமாக வடிவமைத்தார் எஸ்தர் அம்மையார். 1960-களின் இடைப் பகுதியில் இப்புத்தகம் சுமார் 4000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. இந்தக் கதை சிறுவர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, “எஸ்தர் சிறுமிஅனேகர் உள்ளங்களில் உயிருடன் இருக்கவும் வழி செய்தது. மேலும், பெங்களூரிலுள்ள ரிச்மண்ட் டவுண் மெதடிஸ்டு ஆலயத்தில் அவள் நினைவாக ஒரு ஜெப அறையை கட்ட உதவினார் எஸ்தர் அம்மையார்.

1971-ம் ஆண்டு எஸ்தர் ஃபால்கனர் Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களை மணம் முடித்தார் . இப்படியாக இவர் எஸ்தர் வில்லியம்ஸ் ஆக மாறினார். Rev. Dr. தியோடர் வில்லியம்ஸ் இந்திய அருட்பணி இயக்கத்தின் ஸ்தாபகராகவும், ரிச்மண்ட் டவுன் மெதடிஸ்டு சபைப் போதகராகவும் பணி புரிந்து வந்தார் . இந்த சமயத்தில் எஸ்தர் அம்மையார் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். உடன் மிஷனெரிகளின் தாயாக இருந்து செயல்பட்டார். எஸ்தர் அம்மையாரின் அடக்க ஆராதனையில் Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் எஸ்தர் அம்மாவைப் பற்றிஎனது வலது கரம் போன்றவர், என் ஆசிரியை, எனது கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் பிரசுரத்திற்குச் செல்லுமுன் எஸ்தர் அவர்கள் படித்து திருத்தி அனுப்புவார்; எந்தக் கட்டுரையும் அவர்கள் படித்து திருத்துவதற்கு முன் அச்சிட அனுப்பப்படவில்லைஎன்று குறிப்பிட்டார்கள் .

ஊழியத்தினிமித்தம் அநேக நாட்கள் வெளியூர் சென்று, திரும்பி வந்து ஓய்வு எடுக்கும்போது தன் கணவரை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வார் எஸ்தர் அம்மையார். உபசரிப்பதிலும், ஆலோசனை மற்றும் அறிவுரை கூறி ஆற்றுவதிலும் வல்லவர் இவர். Rev.Dr.வில்லியம்ஸ் மற்றும் அனேகருக்கு வழிகாட்டியாகவும் , உறுதுணையாகவும் இருந்தவர் .

அருமையாக சேலை அணிந்து இந்தியப் பெண்மணிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மேற்கத்திய நாட்டு உடையை அவர் அணிந்திருந்ததை யாரும் கண்டதில்லை . எல்லா சூழ்நிலைகளுக்கும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார். Sacrifice or Investment- என்ற நூலை எழுதி , அதில் IEM (Indian Evangelical Mission)- ன் வரலாறு மற்றும் 1965 முதல் 1990 வரையிலான அருட்பணி அனுபவங்களை எழுதியுள்ளார்கள் .

எஸ்தர் அம்மையார் தன் வாழ்வில் ஒருபோதும், குறிப்பாக தனது வாழ்வின் இறுதி நாட்களில் சில மாதங்கள் வேதனையின் வழியாக சென்றபோதும் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கவில்லை. தனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் ஆண்டவரையும், அன்புக் கணவரையும் அடையாளம் கண்டு கொள்ள மறக்கவில்லை. இவருடைய கணவரும், நெருங்கிய உறவினர்களும், IEM நண்பர்களும் இவர்களை இறுதி வரை அன்புடன் கவனித்து வந்தனர். இறுதியாக தனது 92-வது வயதை நிறைவு செய்தபின் 2009, மே 28-ம் தேதி, மறுமைக்குள் தேவசந்நிதியில் சென்றடைந்தார் இவர். அடுத்த நாள் இவரது ஞாபகர்த்த ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் ரிச்மண்ட் டவுண் மெதடிஸ்டு ஆலயத்தில் நடைபெற்றது. அப்பொழுது இவரது உறவினர் திருமதி. ஷாலினி ஹட்சன் இவ்வாறு கூறினார்கள். "எஸ்தர் பிரகாசமான நட்சத்திரம்; இந்த நட்சத்திரம் இந்திய தேசத்தில் உதித்து தன் வாழ்நாட்களில் அநேகருக்கு வெளிச்சமாக வாழ்ந்து அங்கேயே தன் வாழ்வை முடித்தது.

எஸ்தர் அம்மையாரின் வாழ்வும், ஊழியமும் நமக்கு ஓர் சவால் ஒரு முன்மாதிரி .

இந்தியாவின் பல நற்செய்தி இயக்கங்கள் தோன்ற அடித்தளம் அமைத்த திருமதி. எஸ்தர் வில்லியம்ஸின் சேவையை இந்தியர்கள் ஒருபோதும் மறக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் விடுமுறை வேதாகமப்பள்ளி பாடத்திட்டங்கள் எழுதிய இவ்வம்மையாருக்காகக் கர்த்தரைத் துதிப்போம் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்