-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

விசுவாசமில்லா விசுவாசிகள்?




இன்று யாரோ வேதப் புத்தகத்தை எடுத்து வாசித்து அதை அப்படியே விசுவாசிப்பதை நாம் கண்டால் நம்முடைய மனதுக்கு அது சங்கடமாய் இருக்கும். ஏனெனில் பரிசுத்த வேதாகமம் விளக்கப்பட வேண்டிய புத்தகம் என்றே நாம் சாதாரணமாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முதலில் விசுவாசிக்கப்பட வேண்டிய புத்தகம். விசுவாசித்து பின்பு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

“தேவனுடைய வேதத்தை அறிவதற்கும்,

வேதத்தின் தேவனை அறிவதற்கும்

பெரிய வேறுபாடு உண்டு”

    என்ற உண்மை இக்காலங்களில் என் உள்ளத்தில் அடிக்கடித் தோன்றுகிறது. கன்வென்ஷன்களில் பெரும்பாலும் பழைய காரியங்களே திருப்பி திருப்பிச் சொல்லப் படுவதை நாம் கேட்கிறோம் என்பதும், விசுவாசம் சற்றேனும் அதிகரிக்காமல் தான் கூட்டத்திலிருந்து திரும்புகிறோம் என்பதும் உண்மை அல்லவா?

“இன்றைய அறுவடையில்

கிடைத்த கிறிஸ்தவர்களைப் போல்

விசுவாசம் இல்லா விசுவாச சந்ததியை

தேவன் ஒரு போதும் கண்டிருக்க மாட்டார்.”

எவ்வளவு வேதனை தரும் காரியம். ஆவிக்குரிய செல்வத்தினால் நாம் வசீகரிக்கப்படிருக்கிறோமா? ஒரு வேளை காசு இல்லா கப்பல் ஓட்டி ஒருவன் கடலின் அடியில் கிடைக்கும் செல்வத்தைத் தனதாக்கிக் கொள்ளவேண்டுமென்ற எண்ணத்தினால் அலைக்கழிக்கப்படலாம். அவனுக்கு இடையில் இருப்பதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு மைல் ஆழமான தண்ணீரே. தேவன் கிறிஸ்தவனுக்குக் கொடுத்துள்ள காசோலைப் புத்தகமாகிய பரிசுத்த வேதாகமம் இப்படி கூறுகிறது.

“ எல்லாம் உங்களுடையதே;

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்;

கிறிஸ்து தேவனுடையவர் ”

இப்படி இருக்கும் போது நான் விசுவாசிகளாகிய நம்முடைய வறுமையை ஒத்துக்கொள்ள முடியவில்லை. பொதுவாக ஜெபக்கூட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தேவையைச் சொல்லி, ஆண்டவரே, இதைச் செய்ய உம்மால் ‘கூடும்’ என்று தான் சொல்லி கேட்கிறோம். ஆனால், இதுவா விசுவாசம்? இல்லை. இது ‘பொதுவாக’ தேவனை சர்வவல்லவர் என்று ஒத்துகொள்வது. தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றுவது அவருக்கு சாதாரண காரியமே! ஆனால் அவர் ‘தேவை இருந்தால் மட்டுமே’ தண்ணீரைத் திரட்சைரசமாக மாற்றினார். “அந்த நாளில்” நான் நடுங்கி வெட்கப்பட வேண்டியிராத வண்ணம் இப்போதே பல இலட்ச கணக்கான ரூபாய்களை, கொஞ்சம் கூட எனக்காக இல்லாமல், செலவழிக்கலாம்; அப்படியானால் உண்மையாகவே ஒரு தேவை இருக்கிறது என்று நான் உணருகிறேன் என்று பொருள்.

விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய இம்மூன்றில் விசுவாசம் பெரிதல்ல என்பது உண்மை தான். ஆனால் சிறியதையும் நாம் ஏன் விட்டு விட வேண்டும்? இந்நாட்களில் சுத்த விசுவாசம் எங்கே? உண்மையான விசுவாசத்தைப் பற்றி இப்போது எவ்வளவு போலியான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன! ‘இன்னும் பல புதிய T.V நிலையங்களில் ஒலிபரப்ப கர்த்தர் நடத்துகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்; அதற்கான தேவைகள் நிறைவேற்றப்பட நாங்கள் அவரையே நோக்கிக் கொண்டிருக்கிறோம்; அடுத்த வாரத்திற்குள்ளாக உங்கள் கடிதங்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள்; ‘என்று கூறப்படுவதெல்லாம் இன்று சர்வ சாதாரணம். இது ‘விசுவாசமும் குறிப்புகளும்.’ இது தேவனோடு மட்டும் அடைக்கப்பட்டிருப்பதல்ல.

“என் தேவன் உங்கள் குறைவை எல்லாம் (பிரமாதமான வார்த்தை!) நிறைவாக்குவார்” என்று கிறிஸ்தவர்களாகிய நாம் உள்ளத்தில் உண்மையின்றி, ஆனால் உரக்கக் கூறுகிறோம். உண்மையாகவே விசுவாசிக்கிறோமா?. ஆபத்தான இக்காலத்தில் உயிர்த்தெழுந்த, ஐசுவரிய சம்பன்னரான நமது ஆண்டவரைக் குறித்து மிகப் பிரமாதமாகப் பேசினாலும் விசுவாசிகளாகிய நாம் விசுவாசத்தில் வறியவர்களாக இருப்பதைக் குறித்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

“ஞானத்தையோ, தோற்றப் பொலிவையோ

தேவன் கனப் படுத்துவதில்லை.

தேவன் விசுவாசத்தைக் கனப் படுத்துகிறார்;

விசுவாசம் தேவனைக் கனப்படுத்துகிறது.”

விசுவாசம் தேவனை வைக்கும் எல்லா இடத்துக்கும் அவர் சொல்லுகிறார். ஒரு வகையில் சொல்லப்போனால் விசுவாசம் தேவனை குறிப்பாக ஓரிடத்திற்குக்கொண்டு வந்து விடுகிறது. இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

“விசுவாசம் நம்முடைய வல்லமையின்மையை

அவருடைய சர்வவல்லமையோடு பிணைக்கிறது”

விஞ்ஞான உலகம் ஒலியின் வரம்பைக் கடந்துவிட்டது. நம்மைச் சுற்றி உள்ள இச்சை நிறைந்த உலகம் மனிதன் பாவத்தின் வரம்பை மீறி விட்டான் என்று ஓலமிடுகிறது. தேவனே, இப்போது எளிய விசுவாசத்தின் மூலம் நாங்கள் சந்தேகத்தின் வரம்பை மீற எங்களுக்கு உதவிச் செய்ய மாட்டீரோ? சந்தேகம் தாமதிக்கச்செய்கிறது, விசுவாசத்தை அழிக்கிறது. விசுவாசம் சந்தேகத்தை அழிக்கிறது.” வேதத்தை உன்னால் விளக்கமுடியுமானால், விளக்குகிறவனுக்கு எல்லாம் கூடும்” என்று வேதம் கூறவில்லை. தேவனை காலத்தால் விளக்கமுடியாது. நித்தியத்திலும் அவர் தம்மையும் தம் வழிகளையும் முற்றிலும் விளக்க முயற்சிப்பார் என்றும் நாம் கூற முடியாது. அதின் ஆக்கியோனைப் போலவே என்றும் மாறாத வேதம் கூறுவதென்ன? – “நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் (தவிர்க்கமுடியாத இந்த வார்த்தை மீண்டும் வருகிறது) கூடும்.”

ஒரு வேலைக்குத் தாங்கள் மிகவும் பொருத்தமும் தகுதியுமானவர்கள் என்ற எண்ணத்தோடு இருந்தவர்களுக்கு அவ்வேலை கிடைக்காவிட்டால் உள்ளம் மிகவும் புண் பட்டவர்களாய் இவ்விதம் கூறுவார்கள்: ‘இந்தக் காலத்தில் நமக்கு என்ன தெரியும் என்பதல்ல, யாரைத் தெரியும் என்பதே காரியம்!’ சமூகத்துறையில் இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆவிக்குரிய உலகில் இது மிகவும் உண்மை என்று நான் நிச்சயமாய் அறிவேன். இக்காலத்தில் நாம் தேவனைப் ‘பற்றி’ அறிந்திருப்பது ஆழமற்ற புத்தகங்கள் ஆக வெளி வந்து நம்முடைய நூலகங்களை நிரப்புகின்றன (உண்மையான கல்வியையோ அல்லது பரத்திலிருந்து வரும் ஞானத்தையோ நாம் இங்கு இழுக்கவில்லை.) ஆனால் நாம் ‘எதை’ அறிந்திருக்கிறோம் என்பதும் ‘யாரை’ அறிந்திருக்கிறோம் என்பதும் வெவ்வேறு. பவுல் ஒன்றும் இல்லாதவனாய் இருந்தும் “எல்லாம்” உடையவனாக இருந்தான். பரிசுத்தமான முரண்பாடு! பாக்கியமான வறுமை! பாக்கியம் பெற்ற இவன் ஆவிக்குரிய ஐசுவரியவானாய் இருந்தான். கிறிஸ்துவுக்கு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டின போதும், கர்த்தரின் வார்த்தைகளை எழுதிய போதும் அவன் தன் நிதானத்தை இழக்கவில்லை. ஈடு இணையற்ற சாதனையைப் பவுல் செய்திருந்தாலும், பயணத்தின் முடிவில் இன்னும் அதிகம் செய்ய ஆர்வம் உள்ளவனாக இருப்பதை இக்கூற்றில் நாம் காண்கிறோம்: “இப்படி நாம் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும் அவருடைய மரணத்திற்கு ஒப்பான மரணத்திற்குள்ளாகி….”

    விசுவாசிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை மனிதருக்கு முன்பாக செயலாற்றிக் காண்பிப்பதற்குத் தடையாக இருப்பது நாசப்படுத்தும் ‘சுயம்’ என்பதே. பவுல் தன்னை முன்பு ஆண்டு வந்த ‘சுயம்’ எப்போது தன் இதய சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டது என்பதையும், அது சிலுவையிலறையப்பட்டதையும் எப்பொழுதும் நினைவில் வைத்திருந்தான் (கலாத்தியர் 2:20). அதன் பின்பு கிறிஸ்து சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். நாம் சுத்திகரிக்கப்பட்டு அவருடைய ஆளுகைக்குள் முற்றிலும் வந்து சேர சுய நாட்டம் சுய மகிமை, சுய நலம், சுய பரிதாபம், சுய நீதி, சுய முக்கியத்துவம், சுய முன்னேற்றம், சுய திருப்தி – இன்னும் சுயத்துக்கடுத்த அத்தனையும் – சாக வேண்டும். ஒரு மனிதன் “யாரை” என்பதோ, அவனுக்கு “என்ன” தெரியும் என்பதோ காரியம் அல்ல. ஆனால் அவன் அறிவுக்கெட்டா தேவனுக்கு “எப்படிப்பட்டவனாய்” இருக்கிறான் என்பதே காரியம். நாம் தேவனைப் பிரியப்படுத்தாது யாரைப் பிரியப் படுத்தினால் என்ன? தேவனைப் பிரியப்படுத்த யாரை பிரியப்படுத்தாவிட்டாலென்ன? கிறிஸ்துவுடன் நாம் எப்படி ஐக்கியமாய் “இருக்கமுடியும்” என்பது ஒன்று; ஆனால் எப்படி “இருக்கிறோம்” என்பது வேறு. என்னுடைய இப்போதைய நிலையில் எனக்குத் திருப்தி இல்லை. நீங்கள் ஒரு வேளை அடைந்துவிட்டீர்களென்றால், உங்களுடைய பலவீன சகோதரனாகிய எனக்காகப் பரிதபித்து ஜெபியுங்கள்.

இயற்கையான, புத்திக்கொப்பான, தர்க்கரீதியான விசுவாசமொன்றுண்டு. ஆவிக்குரிய விசுவாசம் வேறு. நாம் தேவ வசனத்தை பிரசங்கிக்கும் போது அவ் வசனம் விசுவாசத்தை உயிருள்ளதாக்க அதை கிளறி விடாவிட்டால் அவ்விதம் பிரசங்கிப்பதில் பயன் என்ன? “எழுத்து கொல்லுகிறது.” மரணத்தோடு நாம் மரணத்தைக் கூட்டுவோமா? சுய திருப்தியுள்ள, ஆனால் பாதிக்கப்பட்டுள்ள, புராட்டஸ்டன்டு இயக்கத்தின் மீது யார் தேவனுடைய மகத்தான வல்லமையைக் கொண்டு வருகிறாரோ அவரே இத்தலைமுறைக்குப் பெரிய நன்மை செய்தவராவார். “தங்கள் தேவனை அறிந்த ஜனங்கள் பலங்கொண்டு அதற்கேற்றபடி செய்வார்கள்” என்ற வாக்குத்தத்தம் மாறிப் போகவில்லை.

"நம்மில் யாராவது தேவனை அறிய வேண்டியபடி அறிவோமானால் சாத்தானுக்குச் சங்கடம் தான்".

-  லியோனார்டு ரேவன்ஹில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்