-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆவியானவரின் வழி நடத்துதல் அற்புதமானது - Bro. D. அகஸ்டின்‌ ஜெபக்குமார்- ஊழிய அனுபவம்

 

Bro. D. Augustine Jebakumar

சுவிஷேச ஊழியம்

எங்கள் தலைவர் சகோ.திருத்துவதாஸ்; ஆவியானவரால் நடத்தப்பட்ட ஒரு தேவ மனிதர். அவருடைய வார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் எதிர்த்து நின்றதில்லை. சிலநேரம் கஷ்டமாக இருக்கும், ஆனால் அவரை நாங்கள் மிகவும் மதித்தோம். 3 நாட்கள் விடுமுறை ஒன்றில் திருத்தணி (ஆந்திரா) பகுதிகளுக்கு ஊழியம் செய்யச் சென்றோம். 


10 கிராமத்தில் பிரசங்கம் செய்த பின்னர் தான் சாப்பாடு

 நாங்கள் மொத்தம் 7 பேர், எங்களோடு சகோதரன் ஒருவர், அவருக்கு இரண்டு மணி நேரத்திற்குஒருமுறை ஏதாவது சாப்பிடவேண்டும். எனவே இரண்டு பை நிறைய முறுக்கு, மிக்சர் போன்ற தின்பண்டங்களைக் கொண்டு வந்திருந்தார், வாலிபர்களாக நாங்கள் அதனை இரண்டு நாட்களில் தீர்த்துவிட்டோம். மூன்றாம் நாள் காலை 4 மணிக்கு கிராமம் ஒன்றில் தங்கியிருந்த எங்களை எங்கள் தலைவர் எழுப்பிவிட்டார். குளித்து ஜெபித்து ஆயத்தமான எங்களை 6 மணி அளவில் கிராமத்து  டீ கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஒரு முறுக்கு மற்றும் "சிங்கிள் டீ" வாங்கித் தந்து இன்று 10 கிராமத்தில் பிரசங்கம் செய்த பின்னர் தான் சாப்பாடு என்று சொன்னபோது முன்னதாகவே களைத்துப்போயிருந்த எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடும் என் நண்பரின் முகம் மிகவும் வேறுபட்டது. 


ஆவியானவருக்குத் தெரியாதா?

11 மணி அளவில் 6 கிராமங்களில் தான் ஊழியம் செய்திருந்தோம். பசி அகோரமாய் இருக்க, களைத்தும் போனோம். ஓர் பெரிய சாலையில் சென்றுகொண்டிருந்த எங்களை, எங்கள் தலைவர் திடீரென்று பக்கத்தில் (4 கி.மீ தூரத்தில்) காணப்பட்ட ஒரு சிறு கிராமத்திற்குப் போக ஆவியானவர் சொல்கிறார் என்ற போது முறுமுறுப்பு குழுவில் பெருகிற்று. என் நண்பர் (பசியாளி) சொன்னார்: ஆவியானவருக்குத் தெரியாதா? பெரிய சாலையில் சென்றால் முறுக்கும் டீயுமாவது கிடைக்கும், இந்த கிராம சாலையில் என்ன கிடைக்கும்? ஆயினும் கீழ்ப்படியக் கற்றுக் கொண்டிருந்த நாங்கள் தலைவரைப் பின் தொடர்ந்தோம். போய் நின்று வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேஎன்ற பாடலைப் பாடத் தொடங்கியவுடன் 15 வாலிபர்கள் கம்போடு கூட எங்களை அடிக்க ஒடி வந்தார்கள். கிறிஸ்தவ நாய்களே இங்கே இருந்து ஒடுங்கள் என்று எங்களை விரட்டினார்கள். அன்று விசுவாசமும் அவ்வளவாக இல்லை, அவர்களுடைய சொந்த ஊரில் நாங்கள் என்ன செய்யமுடியும்? எனவே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினோம் விரட்டியவர்கள் பெரிய சாலையின் பக்கமாக துரத்தாமல் ஒரு வழிப்பாதை ஒன்றுக்கு நேராக துரத்தினபோது என் நண்பர் சொன்னார்: “மெயின் ரோடு பக்கமாக துரத்தினாலும் முறுக்காகிலும் கிடைக்கும், இவர்கள் நம்மை இன்னமும் குக்கிராமத்திற்குத் துரத்துகிறார்களே என்று. ஆயினும் வேறு வழியின்றி அடுத்த கிராமத்திற்கு விரைந்தோம்; அது 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

போகும் வழியில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவர் எங்களை வரவேற்கும் வண்ணம்ஸ்தோத்திரம் பிரதர் வாங்க வாங்க, நீங்க வருவீர்கள் என எனக்குத் தெரியும் என்று சொன்னபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. முந்தின ஊரார் துரத்தாவிடில் இங்கே வந்திருக்க மாட்டோமே? எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கேட்டபோது அவர் சொன்னார்: “ எனக்கும் திருநெல்வேலி மாவட்டம் தான்” (எங்களில் அனைவரும் அப்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே) வேலையின் நிமித்தம் நானும் என் மனைவியும் ஆசிரியர்களாக இங்கே வந்து நிலம் வீடு எல்லாவற்றையும் சம்பாதித்துக் கொண்டோம்.  எங்களுக்கு ஒரே மகள், அவளைப் பெண்பார்க்க இன்று என் மாப்பிள்ளை வீட்டார் வருவதாகக் கூறியிருந்தார்கள். எனவே மனைவி காலை 4 மணிக்கே எழுந்து சமைக்க ஆரம்பித்தாள், ஆனால் 11 மணி அளவில் செய்தி சொல்லிவிட்டார்கள், இன்று வசதியில்லை, அடுத்த வாரம் வருகிறோம் என்று. இது என் மனைவியைப் பாதிக்க என்னை அவள் திட்டித்தீர்த்துவிட்டாள். 15 பேருடைய சாப்பாடு என்னவாகும்? என்பது அவளுடைய கேள்வி. நான் ஆட்களைக் கொண்டு வருகிறேன் என்று புறப்பட்டபோது தேவனே உங்களை அனுப்பி வைத்துள்ளார். ஊழியம் செய்யும் உங்களுக்காகவே தேவன் ஆயத்தம் செய்தார் போலும். என்று கூறி எங்களைக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றார்.


ஆவியானவரின் வழி நடத்துதல் அற்புதமானது

பெரிய வாழை இலையில் ஏழு வகை பொரியல், பிரியாணி, வடை, பாயாசம் என்று உணவு பரிமாறப்பட்டபோது என் நண்பர் கூறினார்:  "ஆவியானவரின் வழி நடத்துதல் அற்புதமானது" என்று. அன்றைக்கு ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக் கொடுத்த வாழ்வின் நிறைவை நாங்கள் நன்றாகக் கற்றுக் கொண்டோம். இதைப்போன்ற அனுபவங்கள் எங்களை ஊழியத்தில் மிகவும். உத்வேகப்படுத்தியிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்