-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

யார் கிறிஸ்துவினுடையவர்கள்?

 

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இந்த மாதத்தில் நாம் தியானிக்கப் போகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால்,

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.”   (1 கொரி 3:23)



 நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர். கிறிஸ்து தேவனுக்கு  உரியவர் என்றால் கிறிஸ்துவும் தேவனும் வேறு வேறு நபர்களா? ஆம். இன்றைக்கு அநேக சபைகளில் சத்தியம் புரியாமல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவரே என்று போதித்து வருகிறார்கள். பெந்தெகோஸ்தே சபைகளிலும் கூட பிதா குமாரனாய் வந்தார், குமாரன் பரிசுத்த ஆவியானவராய் வந்தார் என்று சொல்லிவரும் கூட்டத்தார் உண்டு. ஒரு முறை நான் பீஹாருக்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்த போது தமிழ்நாட்டின் இன்னொரு பகுதியிலிருந்தும் ஒரு ஊழியர் அங்கே வந்திருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்த போது நீங்கள் எந்த சபையில் போதகராய் இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு சபையின் பெயரைச் சொன்னார். அதுஇயேசுவின் நாமம்என்று சொல்லுகிற சபை என்பதைப் புரிந்து கொண்டேன். அப்பொழுது, நான் அவரிடத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவரா? என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படித்தான் என்றார். அப்படியானால் எப்படி என்று கேட்டேன். அதற்கு அவர், பிதா குமாரனாய் வந்தார், குமாரன் பரிசுத்த ஆவியாய் வந்தார் என்று கூறினார். இப்பொழுது பூமியில் இருப்பது பரிசுத்த ஆவியானவர் என்பது உண்மை. மூவரும் ஒருவர் என்றால்  இப்பொழுது  பரலோகத்தில் யாரும் இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் யாரும் இல்லை என்றார். அவர் போதகராயிருந்தும் வேதம் புரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பின்னர் நான் வசனத்தை விளக்கிக் கூறினேன். இம்மூவரும் ஒருவராயிருக்கிறார்கள் என்பதல்ல; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதே வேதம். (1 யோவான் 5:7).

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.” கிறிஸ்து தேவனுடையவர் என்றால், கிறிஸ்து என்று ஒருவர் உண்டு, தேவன் என்று ஒருவர் உண்டு. ஒருமுறை பிலிப்பு இயேசுவிடம், பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று கேட்டபோது (யோவான் 14:9) என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு கூறினாரே தவிர நான்தான் பிதா என்று கூறவில்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? பிதா என்ன தன்மை உடையவராய் இருந்தாரோ அதே தன்மை உடையவராய் இயேசு இருந்தார். தேவனுக்கு உடையவராய் இருந்த கிறிஸ்து, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்என்று சொல்லுமளவிற்கு தேவனைப்போல அப்படியே வாழ்ந்திருப்பார் என்றால், “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்என்று வேதம் சொல்வதால் கிறிஸ்துவுக்கு உடையவர்களாகிய நாமும்நம்மைக் காண்பவர்கள் கிறிஸ்துவைக் காண்பவர்களாககிறிஸ்துவைப் போல அப்படியே வாழ வேண்டும். கிறிஸ்துவின் தன்மை உடையவர்களாய் இருக்க வேண்டும்.

முதலாவதாக ஒருவர் எப்பொழுது கிறிஸ்துவினுடையவராக மாறுவார் என்றால், கிறிஸ்தவ மார்க்கத்தில் பிறந்ததினாலோ, அல்லது ஆலயத்திற்குச் செல்வதினாலோ அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாக மாறிவிட முடியாது. கிறிஸ்தவ பெயர் வைத்ததினாலும், காணிக்கை கொடுப்பதினாலும் கிறிஸ்திவினுடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இங்கே வேதம் சொல்கிறது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். அப்படியானால் யார் கிறிஸ்துவினுடையவர்கள்? எப்பொழுது கிறிஸ்துவினுடையவர்களாய் மாறுவார்கள்? 

வேதம் சொல்கிறது ,

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் “ (யோவான் 8:44)

எனவே பிசாசுக்கு உரியவர்கள் எப்படி இருக்கிறார்களென்றால்

1. அவன் இச்சிக்கிறவன் எனவே அவர்களும். ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ, அல்லது மாம்சத்திற்கு உரியவைகளையோ இச்சிக்கிறார்கள்.

 2. அவன் மனுஷ கொலை பாதகன். வேதத்தின் அடிப்படையில் சகோதரனைப் பகைப்பவன் மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான். எனவே அவர்களும் சகோதரனைப் பகைக்கிறார்கள்.

3. அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை. எனவே அவர்களும் சத்தியத்தின்படி வாழாதவர்களாய் இருக்கிறார்கள்.

4. அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான். எனவே அவர்களும் பொய் பேசுகிறார்கள்.

பிசாசினுடையவர்கள் அவனுக்கு உடையவர்களாய் இருப்பதினால் அவனுடைய தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப் பட்ட பிசாசினுடைய குணமுடைய மனுஷன் தேவனுடைய மனுஷனாய் மாறுவது எப்படி? ஆலயத்திற்கு வந்தவுடனே நான் வந்துவிட்டேன், மாறிவிட்டேன் என்றெல்லாம் சொன்னால் அது வேதத்திற்கு ஒத்துப்போக முடியாத காரியம். உண்மையில் எப்படி கிறிஸ்துவினுடையவர்களாய் மாறுவது?

ஆலயத்திற்கு வந்தவுடனே நான் வந்துவிட்டேன், மாறிவிட்டேன் என்றெல்லாம் சொன்னால் அது வேதத்திற்கு ஒத்துப்போக முடியாத காரியம். உண்மையில் எப்படி கிறிஸ்துவினுடையவர்களாய் மாறுவது? வேதம் சொல்கிறது:

 நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.” (எசேக்கியேல் 16:8)

அப்படியென்றால் பருவகாலமானபோது (சிறுபிள்ளையாய் இருக்கும்போது அல்ல) பெண் என்கிற ஸ்தானத்தையோ, புருஷன் என்கிற ஸ்தானத்தையோ அடைந்தபோது, உன் நிர்வாணத்தை மூடி; எப்படியென்றால், ஏதேன் தோட்டத்திலே ஆதி மனிதன் பாவம் செய்தபோது தேவனுடைய மகிமை என்னும் வஸ்திரத்தை  இழந்து நிர்வாணமாய் மாற்றப் பட்டதைப் போல, பாவத்தினால் நிர்வாணமாய் இருந்தபோது, என் வஸ்திரத்தை உன் மேல் விரித்தேன் என்று ஆண்டவர் சொல்கிறார். அது என்னவென்றால் இரட்சிப்பின் வஸ்திரத்தினால் உன் பாவத்தை மூடினேன் என்று ஆண்டவர் சொல்கிறார். வஸ்திரத்தினால் மூடினது மாத்திரம் அல்ல, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்றும் அப்பொழுது  நீ இவ்விதமாய் என்னுடையவளாய் ஆனாய் என்று ஆண்டவர் சொல்கிறார். எனவே பாவத்தோடு வாழ்பவர்கள் பிசாசினுடையவர்கள். பிசாசின் தன்மை உடையவர்களாய் இருப்பார்கள். அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் தன்மை உடையவர்களாய் மாற்றுவதற்கு முதலாவது இரட்சிப்பின் வஸ்திரத்தைப் போடுகிறார். எனவே நான் பாவி என் பாவங்களையெல்லாம் மன்னியும். நான் அநியாயக்காரன் எனக்காக மரித்தீரே, எனக்காக இரத்தம் சிந்தினீரே என்று எந்த மனிதன் பாவங்களை விட்டு வெளியே வருகிறானோ அவன் மேல் இரட்சிப்பின் வஸ்திரத்தைப் போடுகிறார்.

மன்னிப்பைப் பெற்று பாவங்களிலிருந்து வெளியே வந்தது மாத்திரம் அல்ல அவனோடு கூட உடன்படிக்கை பண்ணுகிறார். உடன்படிக்கை என்பது என்னவென்றால் வேதம் சொல்கிறது

ஞானஸ்நானமானதுமாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய  உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;”  (1 பேதுரு 3:21)

எனவே, ஞானஸ்நானத்தினால் அவரோடு கூட உடன்படிக்கை பண்ணும்போது அவருடையவர்களாய் மாறுகிறார்கள். எப்படி எங்கோ பிறந்த ஒரு பெண்எங்கோ பிறந்த வேறு ஒரு ஆணோடு திருமணத்திற்காக உடன்படிக்கை செய்யும்போது அவனுக்குச் சொந்தமான அவனுடைய மனைவியாக மாறுகிறாளோ அப்படியே பாவத்தில் வாழ்ந்தவர்களும் மனந்திரும்பி ஞானஸ்நானத்தைப் பெறும்போது கிறிஸ்துவினுடையவர்களாய் மாறுகிறார்கள்.

இப்படி கிறிஸ்துவினுடையவர்களாய் மாற்றினதற்கு காரணம் என்னவென்றால், அவரைப்போல நாமும் மாறுவதற்குத்தான் அவருடையவர்களாய் நம்மை மாற்றினார். கணவன் மனைவிக்குள் புருஷன்தான் தலை, மனைவி சரீரம். மனைவி புருஷனுடையவளாய் மாறின பின்பு புருஷன் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். புருஷனுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவி அதைச் செய்யமாட்டாள். இப்படியே ஒவ்வொன்றாய் செய்ய செய்ய மனைவியினுடைய குணம் புருஷனுடைய குணத்தைப் போல் மாறிவிடும். இப்படியே நாமும் அவரைப் போல, அவருடைய தன்மையைப் போல மாறுவதற்காகவே நம்மை கிறிஸ்துவினுடையவர்களாய் மாற்றினார்.   எனவே தான்,

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.”(லேவி 20:26)

என்று சொல்கிறார். மற்ற ஜனங்கள் என்பது பிசாசினுடைய ஜனம். அவர்களை விட்டு நம்மைப் பிரித்தெடுத்தார். எனவே கிறிஸ்துவினுடையவர்கள் என்று சொல்பவர்கள் கண்டிப்பாய் அவிசுவாசிகளை விட்டுப் பிரிந்துதான் வாழவேண்டும்..

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து பிரித்துக் கொண்டு வரும்போது, இங்கேயே ஆராதியுங்கள் என்று பார்வோன் சொன்னாலும்,  முடியாது என்று மோசே மூலமாய் தேவன் சொன்னார். போகும்போது செங்கடலை கடந்து சென்றனர். செங்கடல் ஞானஸ்நானத்திற்கு ஒப்பனையானது.(1 கொரி 10:2) அதைக் கடந்து வந்தபின்பு அவருடைய மனதிலிருந்த கட்டளைகளையும், கற்பனைகளையும் கொடுத்தார். ஏன் எகிப்திலிருந்து பிரித்துக் கொண்டுவந்து கட்டளைகளை கொடுத்தார். எகிப்திலேயே ஜனங்கள் இருப்பார்களென்றால் எகிப்தியரைப் போல வாழ்ந்துவிடுவார்கள். நாமும் இரட்சிக்கப்பட்ட பின்பும் உலகத்தாரைப் போல வாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரித்தெடுக்க விரும்புகிறார். இது மிகவும் முக்கியம். அதனால்தான்

மாறுபாடுள்ள சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்.  (அப் 2:40)

என்று வேதம் எச்சரிக்கிறது. உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என சிலர் சொல்வார்கள். இரட்சிக்கப்படாதவர்கள் பிசாசினுடையவர்கள், இரட்சிக்கப்பட்டவர்களோ கிறிஸ்துவினுடையவர்கள். இரட்சிக்கப்பட்டவர்களுக்குள்ளும் பிசாசின் குணம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவிசுவாசிகளை விட்டுப் பிரித்தெடுக்கிறார்.  எனவேதான் வேதம் சொல்கிறது:

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.அப்படிச் செய்தால் நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய் .(நீதி 22: 24,25)

எனவே அவிசுவாசிகளோடு சேரச் சேர அவர்களுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களுடைய ஆவி வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிரித்தெடுக்கிறார்.

இரட்சிக்கப்பட்டு விட்டேனே இது போதாதா என சிலர் நினைக்கலாம். நிச்சயமாய் இரட்சிக்கப்பட்டது மட்டும் போதாது. இரட்சிப்பு விலையேறப்பெற்றதுதான். ஆனால் அதைவிடப் பெரியது இரட்சிக்கப்பட்ட பின்பு வாழ்வது. எப்படியென்றால் பாவிகளை இரட்சிக்க முதல்விசை இயேசு வந்தார். இப்பொழுது மறுபடியும் எதற்காக வரப்போகிறாரென்றால், வேதம் சொல்கிறது:

 நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது (ஏசாயா 63:4)

ஆகவே அடுத்து இயேசு வரப்போவது அவருடையவர்களை மீட்பதற்காக. நாம் அவருடையவர்களாய் இருந்தால் மட்டுமே மீட்டுக்கொண்டு போவார். எனவே இரட்சிக்கப்பட்டது மட்டும் போதாது அவருடையவர்களாகவும் மாறி இருக்க வேண்டும். ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நீச்சல் தெரியாத நான் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டேன் என வைத்துக்கொள்வோம். நான் கதறும்போது ஒருவர் சத்தத்தைக் கேட்டு உள்ளே குத்தித்து என்னை காப்பாற்றி என்னை வெளியே கொண்டுவந்து விட்டார். இப்பொழுது நான் பிழைத்துக்கொள்வேனா? இல்லை பிழைக்க முடியாது. ஏனென்றால் முன்பு தண்ணீருக்குள் இருந்தேன் எனவே என்னால் பிழைக்க முடியாது. ஆனால் வெளியே வந்தபிறகும் நான் கிணற்றில் குடித்த தண்ணீர் எனக்குள் இருப்பதால் என்னால் பிழைக்க முடியாது. இதைப்போலவே முன்னர் சாத்தானுடையவர்களாய் பாவத்திற்குள் இருந்தோம் எனவே பிழைக்க முடியாது. ஆனால் இப்பொழுது அவனிடம் இருந்து மீட்கப்பட்ட பின்பு பாவத்தின் சுபாவம் நமக்குள் இருக்கிறது எனவே பிழைக்க முடியாது.

தண்ணீர் எனக்குள் இருக்கும்வரைக்கும் என்னால் பிழைக்கமுடியாது. அதுபோல பாவசுபாவம் எனக்குள் இருக்கும்வரைக்கும் அவருடையவர்களாய் இருக்கமுடியாது,  இப்பொழுது எனக்குள் இருக்கும் தண்ணீரை எடுப்பதற்கு என்னை குப்புற படுக்கவைத்து அமுக்கி அல்லது மிதித்து எப்படியாவது எனக்குள் இருக்கும் தண்ணீரை எடுக்க வேண்டும். அப்போதுதான் என்னால் பிழைக்க முடியும். அது போல இரட்சிக்கப்பட்டது  மாத்திரம் போதாது. ஆண்டவரிடத்தில் வந்தபோது பாவங்கள் மன்னிக்கப்பட்டது. ஆனாலும் நமக்குள் இருக்கும் பாவ சுபாவங்கள் மாறினால் தான் நாம் கிறிஸ்துவைப் போல மாற முடியும். அப்படி கிறிஸ்துவைப்போல் மாறினவர்களே கிறிஸ்துவினுடையவர்கள். அவர்களைத்தான் என்னுடையவர்கள் என்று ஆண்டவர் மீட்டுச்செல்வார். இதற்காகத்தான் உலகத்திலிருந்து பிரித்து அவரோடு சேர்த்துக்கொண்டுள்ளார்.

எனவே இரட்சிக்கப்பட்டால் மாத்திரம் பரலோகத்திற்குப் போய்விட முடியாது. தண்ணீர் வெளியேற்றப்படுவது போல் பாவம் எப்பொழுது ஒரு மனிதனை விட்டுப் போய் அவன் ஜீவன் உடையவனாய் மாறமுடியும் என்றால், வேதம் சொல்கிறது:

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” (1 யோவான் 5:12).

எனவே கிறிஸ்து ஒருவருடைய வாழ்வில் உள்ளே வர வர பாவ சுபாவங்கள் மாறும்போது மாத்திரமே ஜீவனுள்ளவர்களாய் மாற முடியும். எனவே கிறிஸ்து உடையவர்கள் மாத்திரமே ஜீவன் உடையவர்கள். ஜீவன் இருந்தால் தான் அவருடையவர்கள்.  ஆகவேதான் வேதம் சொல்கிறது:

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” (ரோமர் 8:9)

 இங்கே கிறிஸ்துவின் ஆவி என்பது பரிசுத்த ஆவி அல்ல. கிறிஸ்துவினுடைய சிந்தை. அவருடைய MIND. இயேசு என்ன சிந்தையுடையவராய் இருந்தாரோ அதே சிந்தை இருப்பவர்கள் மாத்திரமே அவருடையவர்கள் என்று வேதம் சொல்கிறது. கிறிஸ்துவின் ஆவி (அவருடைய சிந்தை) இல்லாதவர்கள் அவருடையவர்கள் அல்ல.

இதனால்தான் பவுல் சொல்கிறார்:

கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.” ( 1 கொரி 2:16)

என்று பவுல் சொல்லிவிட்டார் இப்பொழுது நாம் என்ன சொல்லப் போகிறோம்? நமக்குள் என்ன சிந்தை இருக்கிறது? ஒருமுறை இயேசு சமாரியாவிலிருக்கும்போது எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது  அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது, “ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறக்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: “நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்.” என்று அதட்டி மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். (லூக் 9:52-56) இங்கே பாருங்கள் மனுஷனுடைய ஆவிக்கும் அவர் ஆவிக்கும் வித்தியாசம் இருந்தது. அழிக்கவேண்டும் என்று அவர்களுடைய ஆவி நினைத்தது. ஆனால் இயேசுவோ, நான் அழிக்க வரவில்லை. இரட்சிக்க வந்தேன்.” என்றார். ஆகவே இயேசு எந்த ஆவியுடையவராய் இருந்தாரோ அதே ஆவியுடையவர்களாய்  நாமும் இருந்தால்தான் கிறிஸ்துவினுடையவர்கள்.

ஏனோக்கு 300 வருடம் தேவனோடு சஞ்சரித்து பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்டான். இந்த 300 வருடமும் தேவனோடு சேரச் சேர அவருடைய ஆவி அவனுக்குள் வந்து அவருடையவனாய்  மாறி எடுத்துக்கொள்ளப்பட்டான். ஆகவே நாமும் தேவனோடு சேரச் சேர அவருடைய ஆவி நமக்குள் வரும். எனக்கு 1975 ல் திருமணம் நடந்தது 39 ஆண்டுகள் ஆகிறது. இந்த 39 ஆண்டுகளும்  என்னோடு சேர்ந்து இருந்ததினால் என்னுடைய விருப்பம் என் மனைவிக்குள் வந்திருக்கிறது. எனக்கு விருப்பமில்லாத காரியங்கள் எல்லாம் என் மனைவியிடம் இருந்து போய்விட்டது. அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று தனக்குப் பிடித்த எத்தனையோ காரியங்களை மாற்றிக்கொண்டதினால் என்னுடைய ஆவி என் மனைவிக்குள் வந்துவிட்டது.

இதுபோல, அவரோடு இணைந்து அவருடைய ஆவி நமக்குள் வரும்போது மாத்திரமே அவருடையவர்களாய் மாற முடியும். அவருடையவர்களை மீட்கும் நாளில் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்பட முடியும். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று சொல்லுமளவிற்கு பிதாவின் தன்மையுடையவராய் இயேசு இருந்தபடியினால் கிறிஸ்து தேவனுடையவராயிருந்தார். நாமும் கிறிஸ்துவின் ஆவியுடையவர்களாய் வாழும்போது மாத்திரமே கிறிஸ்துவினுடையவர்கள் ஆகமுடியும். கிறிஸ்துவின் ஆவி எப்படி நமக்குள் வரும் என்கிற மூன்று முக்கியமான வழிகளை அடுத்த இதழில் உங்களோடு கூட பகிர்ந்துகொள்கிறேன்.

கர்த்தரின் வேலைக்காரன்

P. அற்புதராஜ் சாமுவேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்