லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். (அப் 14:8 - 10)
பிறந்தது முதல் சப்பாணியாயிருந்த ஒரு மனிதன் பவுலின் மூலமாக சுகமாக்கப்பட்டான். பிறந்தது முதல் அவனால் நடக்கமுடியாது, எழும்ப முடியாது, கால் ஊன்ற முடியாது, நிமிர்ந்து நிற்க முடியாது; என்றாலும், பவுலின் பிரசங்கத்தை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். இப்படிப்பட்ட மனிதர்களை உலகம் ஊனமானவர்கள் என்று சொன்னாலும், சரீரத்தில் ஊனமாயிருப்பவர்களை, தேவன் ஒருபோதும் வெறுப்பதில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, ஊனமாயிருப்பவர்களை அப்பம் கொடுப்பதற்கு வரவேண்டாம் என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். என்றாலும், அவர்களை தடைசெய்வதற்காக அல்ல, அவர்கள் மீதிருந்த அக்கரையினாலேயே அப்படிச் சொல்லியிருந்தார். ஆசரிப்புக் கூடாரத்திற்கு வரக்கூடாதிருக்கிற அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பங்குகளை, வீட்டிற்குச் சென்று கொடுக்கும்படியாகக் கட்டளையிட்டாரே- அவர்களுக்கு ஓய்வு கொடுக்கும்படியாகவும், யுத்தத்திற்கு வரவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். புதிய ஏற்பாட்டுக் காலத்திலோ, சரீரத்தில் ஊனமாக வந்த மனிதர்களை இயேசு கிறிஸ்து சுகமாக்கினார். சிலருக்கு சரீரத்திற்கு வெளியிலேயோ, சிலருக்கோ சரீரத்திற்கு உள்ளேயோ குறைபாடுகள் காணப்படக்கூடும்; என்றாலும், தேவனுக்கு அது ஒரு பொருட்டல்ல. சரீரத்தில் குறைபாடுகளோடு காணப்படும் மனிதர்களும், ஆத்துமாவில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டிருந்தால், பரலோகத்தில் துள்ளிக் குதித்து தேவனை மகிமைப்படுத்துவது நிச்சயம்.
என்றாலும், "ஆவிக்குரிய ஊனத்தைக் குறித்து" நாம் கவனமாயிருக்கவேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் அநேகரால், எழும்ப முடியவில்லை, கால் ஊன்ற முடியவில்லை, நிமிர்ந்து நிற்க முடியவில்லை. ஆண்டவருக்காக எழும்பி எதாவது செய்யவேண்டும் என்ற ஆசை அநேகரிடத்தில் இருக்கின்றது; ஆனால் எழும்பவோ இயலவில்லை. சிலரோ எழுந்து ஒரு அடி எடுத்துவைப்பதற்குள், இரண்டு அடி விழுந்துவிடுகிறார்கள். சிறிய பிரச்சனை வந்துவிட்டால் முறுமுறுத்துவிடுகின்றார்கள், சின்ன சோதனை வந்தால் அவர்களால் தப்பித்துக்கொள்ள இயலவில்லை; தேவனைப் பார்த்து ஏன்? என்று கேட்கிறார்கள். ஏதாவது குழப்பம் வந்துவிட்டால், வேதம் வாசிப்பதையும் மற்றும் ஜெபிப்பதையும் நிறுத்திவிடுகின்றார்கள். வருடத்தைத் தொடங்கும்போது சந்தோஷத்தோடு தொடங்குகின்றோம்; ஆனால், முடிக்கும்போதோ தோல்வியோடு முடித்துவிடுகின்றோம்.
ஐயோ, விழுந்துவிட்டேன், தவறு செய்துவிட்டேன் என்று மனசாட்சியிலே சில பிரச்சனைகளைச் சுமந்துகொண்டேயிருப்பதினால், சிலரால் நிமிர்ந்து நிற்க முடிவதில்லை. பிற மனிதர்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசும் தைரியத்தையும் இழந்து, குற்ற மனசாட்சியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலிருக்கும் மனிதர்கள் எழும்பி, காலுன்றி, நிமிர்ந்து நிற்பதையே தேவன் விரும்புகிறார். இம்மூன்றும் இல்லாத மனிதர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முடமானவர்களே. ஆண்டவருக்கென்று அர்ப்பணித்தவர்கள்தான், உழைப்பவர்கள்தான், ஆண்டவருக்கென்று ஏதாகிலும் செய்யவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள்தான்; என்றாலும், சிலருடைய வாழ்க்கையில் காணப்படும் ஊனங்கள், அவர்களை செயல்பட விடுவதில்லை. ஆவிக்குரிய வாழ்க்கையில் காணப்படும் ஊனங்களை அடையாளங்கண்டு, அவைகளைச் சரிசெய்துவிட்டால், நாம் ஆண்டவருக்காக எழுந்து, காலூன்றி, நிமிர்ந்து நின்று செயல்படமுடியும்.
சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர். (2 சாமு 4:4)
ராஜ குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளை, ஒரு தாதியை வைத்து வளர்ப்பார்கள். அவள்தான் குறிப்பிட்ட வயதுவரை பிள்ளையை வளர்க்கவேண்டும். சவுலும், அவனுடைய குமாரனான யோனத்தானும் மரித்துப்போனார்கள் என்ற செய்தி மேவிபோசேத்தை வளர்த்த தாதிக்கு எட்டியபோது, மேவிபோசேத்தை பட்டயத்திற்குத் தப்புவிக்கும்படி, அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள்; என்றாலும், ஓடிப்போகிற அவசரத்தில் விழுந்துவிட்டாள்; மேவிபோசேத்தின் வீழ்ச்சிக்கு இந்தத் தாதி காரணமாகிவிட்டாள். தாதி பின்நாட்களில் இதனை ஒருவேளை மறந்திருக்கக்கூடும்; ஆனால், மேவிபோசேத்தினால் மறக்க முடியாது. சிலர், தாங்கள் கீழே விழுந்ததை எவரும் பார்க்கவில்லையென்றால், உடனே எழுந்து போய்விடுவார்கள். ஆனால், மேவிபோசேத்துக்கோ இரண்டு காலும் முடமாகிவிட்டது, நடக்கவோ, காலூன்றவோ, நிமிர்ந்து நிற்கவோ முடியாது. ஐயோ! நான் குறைபாடுள்ளவன், என் சரீரத்தில் பெலவீனம், என் வாழ்க்கை விழுந்துபோனது, இனி நான் ஓட முடியாது, ஊனமானதினால் ராஜாவாக முடியாது, அழைப்பு முடிந்துபோனது, அரமனையில் வாழவேண்டிய நான் இப்படியாகிவிட்டேனே என்று மேவிபோசேத் யோசித்திருக்கக்கூடும்.
ஆவிக்குரிய வாழ்க்கையின் வீழ்ச்சியின் நிமித்தமாக நம்முடைய கால்கள் முடமாகியிருக்கலாம், சரீரம் பெலவீனமாயிருக்கலாம். அழைக்கப்பட்டவர்கள்தான், ஒரு காலத்தில் மான்களைப் போல துள்ளி ஓடினவர்கள்தான், எழுந்து, காலூன்றி, நிமிர்ந்து நின்றவர்கள்தான்; ஆனால், இன்றோ காலூன்ற முடியாமல், எங்கோ ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்கலாம். ராஜாவாகும் வாய்ப்பினை மேவிபோசேத் இழந்தான், எல்லாராலும் மறக்கப்பட்டான். மேவிபோசேத்தின் சகோதரனும் மரித்துப்போய்விட்டான். மேவிபோசேத்தோ தனிமையாக விடப்பட்டான். இன்றும் விழுந்துவிட்டேன் என்ற குற்றமனசாட்சி அநேகரை எழும்பவிடாமற் செய்துவிட்டது. விழாதவன் ஒருவனுமில்லை, வீழ்ச்சி வரலாம். எனினும், வீழ்ச்சியில் தங்குவது ஆபத்தானது; வீழ்ச்சி வரலாம், எனினும், விழாததைப்போல வாழ்வது ஆபத்தானது; வீழ்ச்சி வரலாம். எனினும் வீழ்ச்சியை நியாயப்படுத்துவது ஆபத்தானது. என்றைக்கு எழும்பப்போகிறோம்? எப்போது எழும்பப்போகிறோம்? நாம் விழுந்த இடம் எது? கண்டுபிடியுங்கள்.
எலிசாவின் நாட்களிலே தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் தங்களுக்கு கூடாரங்களை அமைத்துக்கொண்டிருந்தார்கள். ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ, என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, (2 இரா 6:5,6)
வெட்டுவதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட கோடரி, விழுந்துவிட்டது. வெட்டுகிறவன் நன்றாகப் பிடித்திருந்தால் நான் விழுந்திருக்கமாட்டேன், மரம் சரியில்லை அதனாலேதான் விழுந்தேன், அந்த இடம் சரியில்லை அதனாலே தான் விழுந்தேன் என்று ஒருவேளை அந்தக் கோடரி காரணங்களைச் சொல்லக்கூடும். காரணங்களைச் சொல்லிக்கொண்டு காலம் தாழ்த்தவேண்டிய வேளையல்ல அது, “எங்கே விழுந்தது" என்பதைக் காட்டவேண்டியதுதான் முக்கியம். ஒரு இடத்தில் விழுந்திருக்க, இன்னொரு இடத்தில் தேடுவது சரியானது அல்ல. விழுந்த இடத்தையே முதலில் சுட்டிக்காட்டவேண்டும். பல நேரங்களில், விழுந்த இடத்தை நாம் நியாயப்படுத்துகின்றோம். "இங்கேதான் விழுந்தேன்" என்று நாம் சொல்லுவோமென்றால், நாம் எந்த இடத்தில் விழுந்திருந்தாலும், அவர் நம்மை புறம்பே தள்ளுகிறவர் அல்ல, தூக்கி எடுக்கவும், நம்மை மிதக்கச்செய்யவும் கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். (வெளி 2:4-5)
முதலாவது எங்கே விழுந்தோம்? என்பதைக் காண்பிக்கவேண்டியது அவசியம். இரண்டாவதாக, இன்ன நிலையிலிருந்து விழுந்தோம் என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். இரட்சிக்கப்பட்டபோது, ஆண்டவருக்கென்று அர்ப்பணித்தபோது, ஆண்டவருக்காகவே வாழுவேன் என்று தீர்மானம் எடுத்தபோது, அவர் மீதிருந்த அன்பு வாழ்க்கையில் கொடிகட்டிப் பறந்தது. அந்த அன்பு நெருக்கி ஏவினதினாலேயே வாழ்க்கையையே அவருக்காகக் கொடுத்தோம், ஊழியத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுத்தோம். ஆனால், ஆதி அன்பு போய்விட்டது" என்று ஆண்டவர் கூறுகின்றார். ஆதியில் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எந்த நிலையில் இருந்தோம்? தொடக்க நாட்களில், நன்றாக வேதம் வாசித்து, ஜெபித்து, உபவாசித்து, ஊழியம் செய்த அநேகர், தங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தில் அமைதியாகிவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் முந்தின நாட்களில் தாங்கள் எப்படியாக ஊழியம் செய்தோம் என்று நினைத்துப் பார்த்து இவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால், ஆண்டவர் சந்தோஷப்படுவாரா? நாம் எந்த நிலையில் வாழ்ந்துகொண்டிருந்தோம்? நாம் எந்த நிலையிலிருந்து கீழே விழுந்தோம்? என்பதை நினைத்துப்பார்ப்பது அவசியமானது.
மூன்றாவதாக, என்ன விழுந்தது? என்பதையும்
நாம் அறிந்திருக்கவேண்டும். எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள்
பாவஞ்செய்தோமே (புல 5:16) என்று புலம்புகிறான் எரேமியா. நம்மிடத்திலிருந்து விழுந்தது
என்ன? ஜெப வாழ்க்கையா, பரிசுத்த ஜீவியமா, விசுவாச ஜீவியமா, ஊழியமா? விழுந்தது ஒன்று
தேடுவது வேறொன்றாக இருக்கக்கூடாது; என்ன விழுந்ததோ அதையே தேடவேண்டும். தேடினால், கண்டுபிடிக்க
முடியும். ஒரு வெள்ளிக்காசைத் தொலைத்தவள், இருக்கும் 9 வெள்ளிக்காசுகளில் திருப்தியாகவில்லை,
வீட்டைப் பெருக்கி, விளக்கைக் கொளுத்தி தேடினாள்; தொலைந்ததைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டாள்.
தேடுகிறவன் கண்டடைகிறான் (மத். 7:8). நாமும் தேடினால் கண்டடைவோம்.
அநேக நேரங்களில் நமது வீழ்ச்சிக்கு,
நாம் காரணம் கண்டுபிடிப்பதில்லை. காரணத்தைக் கண்டுபிடிக்காமல், அங்கிருந்து நம்மால்
எழும்ப முடியாது. ஒருவேளை நாம் எழும்பிவிடக்கூடும்; என்றாலும், காரணத்தைக் கண்டுபிடிக்காவிட்டால்,
மீண்டும் அந்த வீழ்ச்சி வர வாய்ப்பு உண்டு. சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும்
முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து
வருகிற போது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு
ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விருந்து மடவனானான்: அவனுக்கு மேவிபோசேக்
என்று பேர் (2 சாமு 4:4) கவனமாயிருப்பதினால், என்ன காரணத்தினால்
விழுந்தோம் என்பதை அறியாமல், உடனே எழுந்து அங்கிருந்து ஓடிவிடுகிறோம். "விழுந்துவிட்டேன்" என்ற உணர்வு உண்டு, "யாரும் பார்க்கவில்லை என்ற அறிவும் உண்டு; ஆனால், ஏன் விழுந்தேன்? என்று சிந்திக்கவில்லை, விழுந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்வதில்லை;
எனவே, நாளை மீண்டும் அதே இடத்திற்கு வரும்போது மீண்டும் விழவேண்டிய நிலை உண்டாகின்றது. அநேகர் மீண்டும் மீண்டும் விழுவதற்குக் காரணம், ஏன் விழுந்தேன்? என்று அறியாததே. ஏன் விழுந்தேன்? என்பதை அறிந்து கொண்டால், நம்மால் எழும்பமுடியும், கால் ஊன்றமுடியும், நிமிர்ந்து நிற்கமுடியும்.
மேவிபோசேத்தை எல்லாரும் மறந்துவிட்டார்கள், இரண்டு காலும் முடவனாகிவிட்டான்; என்றாலும், தேவன் அவனை மறக்கவில்லை. தாவீதுக்கு ஞாபகமூட்டினார். சவுலின் குடும்பத்தைக் குறித்து கேட்டறிந்தபோது, மேவிபோசேத்தைக் குறித்து ஜனங்கள் ஞாபகப்படுத்தினார்கள். மேவிபோசேத்தை தாவீது அரமனைக்கு வரவழைத்தான். தாவீதைக் கண்டதும், மேவிபோசேத் முகங்குப்புற விழுந்தான். விழுந்தவனுக்கு ஒரு வாய்ப்பு, விழுந்தவனுக்கு ஒரு அழைப்பு, விழுந்தவனுக்கு ஒரு வாழ்வு கொடுக்கப்படுகிறது. ராஜாவின் சமுகத்தில் போஜனம்பண்ண, சரீர குறைபாடு உள்ளவனுக்கு இடமில்லை; என்றாலும், தாவீது அவனை தன்னோடு போஜனம் பண்ணும்படிச் செய்தான். மேவிபோசேத்தின் வாழ்க்கையில் மாற்றம் உண்டானது.
நாம் எந்த இடத்தில் விழுந்திருந்தாலும், இனி யாரும் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற குற்றமனசாட்சியோடு, இனி நான் ஆண்டவருக்குப் பிரயோஜனப்படமுடியாது என்ற எண்ணத்தோடு ஒரு வேளை நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றாலும், பரலோகத்திலிருக்கிற ராஜா, விழுந்தவர்களுக்கு ஓர் வாய்ப்பு தருகிறார். அழைப்பு தருகிறார். வாழ்க்கை தருகிறார்.
அவர் மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர், இரக்கங்களின் தேவன். வா, இனி பாவஞ்செய்யாதே என்று தூக்கிவிடுகிறவர் அவர். அந்நாளிலே விழுந்து போன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்தது போல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் (ஆமோஸ் 9:12)
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்