-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வல்லமை மேல் வல்லமை!- Bro. R. ஸ்டான்லி

 


மனிதனுக்குக் கடவுள் தாமாகவே கொடுத்த மிகப் புராதனமானதும் புகழுடையதுமான வெளிப்பாடுகளில் ஒன்றுநான் சர்வ வல்ல தேவன்!” என்பதாகும். இது சிறப்பாகஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுஆகியோருக்குக் கிடைத்தது (ஆதி 17:1; யாத் 6:3). "EL SHADDAI” எனும் எபிரேயச் சொல்லே இவ்விதம் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. திரு வெளிப்பாட்டுப் புத்தகத்தில் இறைவனின் இப்பெயர் விண்ணகப் பாடலொன்றில் தொனிக்கிறது: “அல்லேலூயா! சர்வ வல்ல தேவனாகிய கர்த்தர் ஆட்சி செலுத்துகின்றார்!” (வெளி 19:6). திருப்பாடகன் தாவீதுக்கு இது திரும்பத் திரும்ப எதிரொலிக்கும் சத்தியமாய்க் கேட்டது. அவன் எழுதியது: “வல்லமை கடவுளுக்கே உரியது என்று கடவுள் ஒருமுறை மொழிய நான் இருமுறை கேட்டேன்!” (சங் 62:11).

சர்வ வல்ல தேவனைத் தொழுவோரது வாழ்வில் வல்லமை இல்லாதிருப்பது முரண்பாடு. ஆனால் அதுதான் இறுதிக்கால மார்க்கத்தின் ஓர் அடையாளமாய் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. விசுவாசத்தை விட்டு விலகிப்போன இவர்களுக்கு இறைப்பற்றின் தோற்றம் இருக்கும், ஆனால் அதின் வல்லமை இராது (2 தீமோ 3:5). வல்லமையற்ற இவ்விதக் கிறிஸ்த வத்தை உதறித்தள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

விளையாட்டுப் பந்தய உலகில் Power Shoes என்பது பிரபலம். ஆடையுலகில் Power Dressing என்று விளம்பரம். நவீன வாகனங்களில் Power Steering என்பது சாதாரணம். இவையெல்லாம் இப்படியிருக்க, தமது மக்கள் மட்டும் வல்லமை யின்றித் தரித்திரராயிருப்பதைக் கடவுள் சகிப்பாரோ? கடவுளது வல்லமையை அனுபவிக்க நாம் விரும்பு வதைவிட நம்மிலும் நம் மூலமாகவும் தமது வல்ல மையை வெளிப்படுத்த அவர் வாஞ்சிப்பது அதிகம். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை வெளிக்காட்டும்படி, கர்த்தருடைய கண்கள் உலகெங்கும் சுற்றிவருகின்றன” (2 நாளா 16:9). சொந்த ஞானத்தினாலும் வெறும் உடல் பலத்தினாலும் மட்டும் வாழ்ந்தால் அவ்வாழ்வு அர்த்தமில்லாமல் முடிவடையும். தெய்வீக வல்லமையைச் சார்ந்து வாழ்வதோ மகிமையாய் நிறைவுறும். இயேசுகடவுளின் வல்லமையினால் உயிர் வாழ்கிறார்” (2 கொரி 13:4). நாமும் அந்த வல்லமையினாலேயே உயிர்வாழ வேண்டும்.

நமது இரட்சிப்பின் துவக்கத்திலிருந்து கிறிஸ்து வின் இரண்டாம் வருகை வரையுள்ள நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நமக்காகக் கடவுளின் வல்லமை எவ்விதம் அருளப்படவுள்ளது என்று இங்கு படிப்போம். தேவன் நமக்கருளுவதை நாம் சரிவர ஏற்றுக்கொண்டு அனுபவிப்போமானால் நமது கிறிஸ்தவ வாழ்வு முழுவதும்வல்லமை மேல் வல்லமைஎன்றே இருக்கும்.

1. நற்செய்தியின் வல்லமை

சுவிசேஷத்தின் வல்லமையே நமது கிறிஸ்தவ வாழ்வைத் துவக்கி வைக்கிறது. “சுவிசேஷமானது விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கடவுளின் மீட்பளிக்கும் வல்லமையாய் இருக்கிறதுஎன்று அன்றைய உலகின் அரசியல் தலைநகராம் ரோம் மாநகர மக்களுக்கு வெட்கப்படாமல் பவுல் அறிவித் தான் (ரோ 1:16).

மார்க்க பக்தியுள்ள யூதனோ, அறிவு பெருத்த கிரேக்கனோ, கல்லாத பழங்குடியினனோ எவருக்கும் எவ்வித வேறுபாடுமின்றி அவ்வல்லமை செயல்படும் (வச 14). எவ்வளவு புனிதமான மார்க்கச் சடங்காயினும், எவ்வளவு தத்துவரீதியான விவாத மாயினும், எவ்வளவு பழமையான பாரம்பரியமாயினும் அது மனிதரை இரட்சிக்காது. மக்களை நித்திய மீட்புக்குள் கொண்டுவர கடவுள் பயன்படுத்தும் ஒரே வல்லமை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமே.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் சரிதையானது வெறும் சரித்திரச் சம்பவமல்ல. அது வல்லமை நிறைந்த செய்தி. மிகக் கொடிய பாவியையும் நொடிப்பொழுதில் மாற்றிவிடும் அது! சுவிசேஷம் என்பது வெறும் அறிவிப்பல்ல. அது ஒரு நபர். அதுதான் கிறிஸ்து வானவர். இரட்சிப்புக்குக்கிறிஸ்து கடவுளின் வல்ல மையாய் இருக்கிறார்” (1 கொரி 1:24). சிலுவையின் செய்தி நம்மை மீட்டெடுக்கும் இறைவன்மையாய் இருக்கிறது (1 கொரி 1:18).

சுவிசேஷத்தைத் திருத்தூதுவர் பேதுரு அழியா வித்து என்றழைக்கிறார். அதற்குள் உயிரும் வலிமை யும் நிறைந்துள்ளது. நமது புதுப்பிறப்பிற்குக் காரண மான வித்து இதுவே (1 பேது 1:23). உன்னதமான வரின் வல்லமை மரியாள் மீது நிழலிட்டபோது அவளது கர்ப்பத்தில் இயேசு உருவானார் (லூக் 1:35). கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு மனிதரால் கூடாதது. “ஆனால் கடவுளால் கூடாதது ஒன்றுமில்லை” (லூக் 1:37). மீட்கப்படமுடியாத அளவு பாவமுள்ள பாவி எவருமில்லை. மிகமிகக் கடினமானதொரு நிலைமையை மனதில் வைத்து, கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடம், “அப்படியானால் யார்தான் மீட்புப் பெறமுடியும்?” என்று வினவினர். அதற்கு அவர் மரியாளுக்குக் காபிரியேல் கொடுத்த பதிலையே கொடுத்தார் (மத்19:25,26).

இரட்சிப்பு என்பது ஒரு விடுதலை. அது சாத்தானின் பிடியிலிருந்து பிடுங்கப்படுவதாம். நற்செய்தியே விடுதலைப் பிரகடனம். அது விடுதலை பெறுபவனைச் சிறையிலிருந்து சிம்மாசனத்திற்கு நடத்திச் செல்கிறது. அது பாவியானவனைப் படு பாதாளத்திலிருந்து தூக்கியெடுத்து பரத்திற்கு உயரக்கொண்டுபோய்க் கிறிஸ்துவோடு அவனை விண்ணில் அமரச் செய்கிறது. இவ்வித அறிவினால் தான் சகரியா மீட்பைக் குறித்துப் பாடுகையில்இரட்சண்யக் கொம்பைஆண்டவர் உயர்த்தினார் எனப் பூரித்தான்! (லூக் 1:68,69).

2. கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை

வல்லமை உண்டு, உண்டு

அற்புத வல்லமை

இயேசுவின் இரத்தத்தால்...

இயேசுவின் திரு இரத்தத்தினால்...

.....என்ற பல்லவியைப் பாடாமல் முடிவடையும் நற் செய்திக் கூட்டங்கள் சொற்பம்.

கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை நாம் அளவுக்கு மீறி மதிப்பிட்டுவிட முடியாது. அதுநமது பாவங்களைக்கழுவியகற்றுவதோடு நில்லாதுநம்மையேதூய்மைப்படுத்துகிறது. சிலபாவங்களை' என்றல்ல, எல்லாப்பாவத்தையும்நீக்குகிறது! (1 யோ 1:7). கறையேதும் விட்டுவைக்கப்படுவ தில்லை.

நாம் பாவமே செய்யாதவர்கள்போல் கடவு ளுக்குமுன் நம்மை நிற்கச் செய்யுமளவு சலவைச் சக்தி இயேசுவின் இரத்தத்திற்கு உண்டு! “உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும் அவை உறைந்த பனிபோல வெண்மையாகும்; அவை இரத்த நிறமாய்ச் சிவந்திருந்தாலும் பஞ்சைப்போல் வெண் மையாகும்என்ற வாக்குடன் கடவுள் நம்மை அழைக்கிறார் (ஏசா 1:18,19). திருத்தூயகத்திற்குள் நுழையும் பரிசுத்தத் துணிவைக் கிறிஸ்துவின் இரத்தம் நமக்களிக்கிறது (எபி 10:19). தயக்க மென்பதற்கே இடமில்லை!

பாவத்தின் உடனடி, தவிர்க்கமுடியா விளைவு குற்றவுணர்வு. அதுதான் நமது முதல் பெற்றோரைத் திருப் பிரசன்னத்திற்கு மறைந்து ஓடச்செய்தது. குற்றவுணர்விலிருந்து விடுபட காலாகாலமாய் மனிதர் மதங்கள் வாயிலாகவும் மற்ற வழிகளிலும் எவ்வளவோ முயன்றும் தோல்வியடைந்துவிட்டனர். மனோ தத்துவம் நிரந்தர விடுதலையல்ல, தற்காலிக விடுவிப்பையே தருகிறது. அவரது திருக்குமாரனின் இரத்தத்திற்காய் இறைவனைப் போற்றுவோம்! “உயிருள்ளதேவனைச் சேவிக்கும்படியாக அது நமது மனச்சாட்சியைச்செத்த" செயல்களிலிருந்து தூய்மைப்படுத்துகிறது (எபி 9:14). இதுதான் பிசாசுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காதது. தனது அனுபவ ஞானத்தின் மூலம் எப்படியாவது நம்மைத் திரும்பவும் குற்றவுணர்வின் கட்டுக்குள்ளும் கனத் திற்குள்ளும் கொண்டுவர முயலுவான். அதற்கு முக்கியமாக அவன் பயன்படுத்தும் ஆயுதம் குற்றம் சுமத்துதலாகும். எனவேதான் அவனது பெயரே இறை மக்கள்மீதுகுற்றம் சுமத்துகிறவன்என்றிருக்கிறது (வெளி 12:10). “அல்லும் பகலும்அவனுக்கு இதே வேலைதான். இயேசுவின் இரத்தத்திற்கு மட்டுமே அவன் பயப்படுகிறான். இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாம் அவனுக்குப் பதில் கொடுக்கத் துவங்கியதும் அவனது குற்றஞ்சாட்டுதல் நின்று விடும் (வச 11).

ஒருபோதும் பாவம் செய்யாதிருக்கும் பரிசுத்த வான் எவருமில்லை. நாம் பாவம் செய்யாத நாளும்  ஒன்றுமில்லை. கழுவிக் கறைநீக்கும் இம்மானுவேலின் இரத்த வெள்ளம் நமக்குமேல் எப்பொழுதும் ஒடிக்கொண்டேயிருக்கிறது. தண்ணீருக்கடியில் கூழாங்கற்கள் கிடப்பதுபோல நாம் இயேசுவின் சுத்தம்பண்ணும் இரத்தத்தின்கீழ் இருக்கிறோம். இக்கருத்தைப் பாடகன் எப்படி எழுதுகிறான் பாருங்கள்-

இம்மானுவேலின் இரத்தத்தால்

நிறைந்த ஊற்றுண்டே;

எப்பாவத் தீங்கும் அதினால்

நிவர்த்தியாகுமே!

நினைத்ததெல்லாம் நடந்துவிடும்போது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வது எளிது. ஆனால் 'சோதனை மேல் சோதனை, போதுமடா' என்ற நிலை உருவாகும் போது நமது சிந்தனைகளை அவிசுவாசமில்லாமலும், நமது சொற்களை முறுமுறுப்பில்லாமலும், நமது செயல் களைப் போனபோக்கில் விடாமலும் காத்துக்கொள் வது கிட்டத்தட்ட முடியாதது. இவ்விதக் கடினச் சூழல்களில்தான் கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை அபாரமாய்ச் செயல்படுகிறது. தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கடவுளை ஆராதிக்கும் அனைத்துலகத் திரள் கூட்டமொன்றை அப்போஸ்தலன் யோவான் தரிசன மாய்க் கண்டான். “அழகாய் நிற்கும் யார் இவர்கள்?” என அவன் ஆர்வமாய்க் கேட்டபோது மூப்பர்களில் ஒருவர் கொடுத்த பதில்: “இவர்கள் கொடிய வேதனை யிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடை களை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்" (வெளி 7:14).

3. திருவசனத்தின் வல்லமை

உலகங்கள் யாவும் கடவுள் பேசிய வார்த்தையால் உண்டாக்கப்பட்டன (எபி 11:3). கடவுள், “ஒளி தோன்றுக!” என்றவுடன் ஒளி தோன்றிற்று. அவர், “மரங்கள் உண்டாகட்டும்என்றவுடன் அப்படியே ஆயிற்று. கடவுளின் வார்த்தைக்கு இன்றும் அதே வல்லமை உண்டு. அது மாறவே இல்லை. படைப்பு யாவும் அழிந்துபோனாலும்ஆண்டவரின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்” (1 பேது 1:24,25).

தேவனுடைய வார்த்தையின் வல்லமை வேதப் புத்தகத்தில் பல்வேறு வகைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது. தேவன்தாமே தமது மக்களைப் பார்த்து, “என் வார்த்தை தீயைப் போலவும், கன்மலையை தேவனுடைய வார்த்தையின் வல்லமை வேதப் புத்தகத்தில் பல்வேறு வகைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது. தேவன்தாமே தமது மக்களைப் பார்த்து, “என் வார்த்தை தீயைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலவும் இருக்கிறதல்லவோ?" என்று சவாலிடுகிறார் (எரே 23:29). திருவாக்கினன் எரேமியா சாட்சியிட்டது: “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல் என் இருதயத்தில் இருந்தது (எரே 20:9). திருவசனத் தீ நமது வாழ்விலுள்ள குப்பைக் கூளங்களை எரித்து சுத்தமான தங்கம்போல் நம்மை மாற்றுகிறது. அறிவாற்றல் நிறைந்த தர்க்கங்களும் செய்யக் கூடாததைத் திருவசனம் நம்மில் இலகுவாய்ச் செய்துவிடும். நாம் அதற்கு முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும், அவ்வளவுதான்.

கர்த்தருடைய குரல் வல்லமையுள்ளது; கர்த்த ருடைய குரல் மாட்சி மிக்கது. கர்த்தருடைய குரல் கேதுரு மரங்களை முறிக்கின்றது... கர்த்தருடைய குரல் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும். கர்த்தருடைய குரல் பாலைவனத்தை அதிரப்பண்ணும் என்று தாவீது பாடினான் (சங் 29:3-8). திருவசனத்தால் தீர்க்கமுடியாத பிரச்னை எதுவும் நம் வாழ்வில் இருக்க முடியாது. நித்தியத்தின் இக்கரையில் நமக்குப் பதில் கிடைக்கவேண்டிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் வேதத்தில் உண்டு.

உடல் நலமின்மை யாவருக்கும் உண்டு. இன்று நமக்கிருக்கும் மருத்துவ உதவிகளுக்காய்க் கடவுளுக்கு நன்றி. ஆனால் அவற்றின் வரம்பை நாம் நன்கறிவோம். கடவுளுடைய அற்புத சுகமளிக்கும் வல்லமையை நம்பும் யாவரும் அதை அனுபவிக் கலாம். இஸ்ரவேலரின் பாலைவனப் பயணத்தைக் குறிப்பிட்டு, “கடவுள் தமது வசனத்தை அனுப்பி அவர்களைச் சுகமாக்கினார் என்று எழுதப்பட்டுள்ளது (சங் 107:20). இயேசுவிடம் உதவி நாடி வந்த நூற்றுவர் தலைவன் ஒருவன் அவரைப் பார்த்து, “ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமடைவான் என்றபோது, இயேசு “இத்தகைய விசுவாசத்தை நான் கண்டதில்லை என்று பாராட்டினார் (மத் 8:8-10). இயேசுவின் சுகமளிக்கும் ஊழி யத்தைக் கவனித்துக்கொண்டிருந்த மத்தேயு, “அவர் அசுத்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, எல்லா நோயாளர்களையும் குணமாக்கினார் என்றெழுதுகிறான் (மத் 8:16). திருவசனத்தைத் தவறாது தியானிப்பவர்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, உடலிலும் ஆரோக்கியமாய் இருப்பார்கள் (நீதி 4:20-22).

கிறிஸ்தவர்களில் பலரும் வளர்ச்சி குன்றியிருப்பது போதுமான அளவு கடவுளுடைய வார்த்தையை உட்கொள்ளாததினாலேயே. சிசுக்களைப்போல நாமும் திருவசனமெனும் பாலுக்காய் ஏங்கவேண்டும் (1 பேது 2:2). நிலத்திற்கு மழை எப்படியோ, விதைப்பவனுக்கு விதை எப்படியோ, சாப்பிடுகிறவனுக்கு ஆகாரம் எப்படியோ அப்படியே திருவசனம் நமக்கிருக்க வேண்டும் (ஏசா 55:10). அது நமக்குப் புத்துயிரும், புத்துணர்வும் தரும். வேத வசனத்தை இவ்விதம் பசி தாகத்தோடு தியானித்தால், தேவன் அதை நமக்கு எழுதித் தந்த நோக்கம் நம்மில் முழுவதும் நிறைவேறும். “என் வசனம் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை என்கிறார் ஆண்டவர் (வச 11).

ஆன்மீகத் துறையிலென்றாலும் சரி, பலவித அலுவல்கள் நடுவிலென்றாலும் சரி, அவசரப்படாமல் நிதானமாய்த் திருவசனத்தைத் தியானிக்க முடியாத அளவு நமக்கு நேர நெருக்கடி ஏற்படுமானால் அது ஆபத்து. பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டலாம், அல்லது திட்டங்களைத் தீட்டலாம். இவை ஏதும்ஆண்டவரைக் கவர்ந்துவிடாது. அவரது வசனத்திற்கு முன் நடுங்குகிறவனை நோக்கியே அவரது கண்கள் விரையும் (ஏசா 66:1,2). அதாவது, தமது வார்த்தையை மதிப்பவர்களையே ஆண்டவர் மதிப்பார். அவர்கள் செய்வதெல்லாம் சித்திபெறும் (சங் 1:2,3). தேவ வசனத்திலிருந்து கிடைக்கும் ஆன்மீக வல்லமை இல்லையேல் சிந்தனா சக்தியும் உடல் பலமும் அதிகக் காலம் தாக்குப்பிடிக்காது. எனவேதான் தாவீதரசன் அடிக்கடி “உமது வசனத்தின்படி என்னைப் பலப் படுத்தும் என்று ஜெபித்தான் (சங் 119:28).

4. தேவப் பிரசன்னத்தின் வல்லமை

சர்வ வல்ல தேவன் சர்வ வியாபியுமாவார் (சங் 139:7-9). அவர் எங்கும் “இருக்கிறார்.” ஆனால் தமது மக்கள் நடுவில் “தங்கியிருக்கிறார்.” “இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயராலே எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்கள் நடுவிலே நான் இருக்கிறேன்" என்று இயேசு உறுதியாய் வாக்க ளித்தார் (மத் 18:20). இறை மக்களின் நகருக்குப் பெயரே “யேகோவா ஷம்மா என்பதுதான்! அதாவது, “ஆண்டவர் அங்கு இருக்கிறார் எனப் பொருள் (எசேக் 48:35). அப்படியே சங்கீதங்களில், “அதின் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருக்கிறார் என வாசிக்கிறோம் (சங் 46:5; 48:3).

நாம் புதிய உடன்பாட்டிற்குள் கடந்து வரும்போது, கிறிஸ்துவின் சபையே கடவுளின் நகராகிறது. அது கிறிஸ்துவை மூலைக்கல்லாய்க் கொண்டு, திருத் தூதுவர்கள் (அப்போஸ்தலர்) மற்றும் இறைவாக்கினர் கள் (தீர்க்கதரிசிகள்) ஆகியோராகிய அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. விசுவாசிகளென்னும் “உயிருள்ள கற்களால் மேற்கட்டிடம் கட்டப்படுகிறது. அது ஓர் ஆவிக்குரிய இல்லம். அது பரிசுத்த ஆவியான வரின் ஆலயம் (எபே 2:20-22; 1 பேது 2:4,5). தமது ஒவ்வொரு பிள்ளையோடும் தமது பிரசன்னம் இருக்கு மெனக் கடவுள் வாக்குப்பண்ணியிருந்தாலும், தமது பிள்ளைகள் ஒன்றாய்க் கூடிவரும்போதுதான் அவர் தமது மாட்சிமையைச் சிறப்பாய் வெளிப்படுத்துகிறார். இறை மக்களோடு சேர்ந்து தியானிக்கும்போதுதான் அவரது அன்பை அகலமாய், நீளமாய், உயரமாய், ஆழமாய் உணர்ந்து அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுகிறோம் (எபே 3:18). உடலிலிருந்து துண்டித்து விடப்படுமானால் எந்த உறுப்பும் தலையானவரின் ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியாது (எபே 4:15,16). உடன் விசுவாசிகளோடு ஐக்கியப்படவேண்டியதின் அத்தியாவசியம் இங்குதான் தெளிவாகிறது. தனிக் காட்டு இராஜா போன்ற விசுவாசிகள் வஞ்சகம் எனும் வியாதியில் சாவது திண்ணம் (எபி 3:12,13).

தமது பிரசன்னம் எவ்வளவு வல்லமையானது என்பதைப் போதிக்கவே கடவுள் பலமுறை தமது மக்களுக்கு நெருப்பில் தோன்றினார். கர்த்தருடைய தூதர் மோசேக்குத் தீப்பிழம்பில் தோன்றினார் (யாத் 3:2). இரத்த சாட்சியாய் உயிர்விடும் தருவாயில் ஸ்தேவான் இதைக் குறிப்பிட்டுச் சொன்னான் (அப் 7:30). ஆண்டவர் தாவீதை அவனது எதிரிகள் அனைவரிடமுமிருந்து தப்புவித்தபோது அவன் இவ்விதம் பாடினான்: “அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது (2 சாமு 22:1,9). எசேக்கியேலுக்குக் கிடைத்த தரிசனத்திலும் ஆண்டவரைச் சுற்றி நெருப்பு சூழ்ந்திருந்தது

(எசேக் 1:27). கடவுளின் முன்னிலை யிலிருந்து “அக்கினி நதி" ஒன்று புறப்பட்டு ஓடியதைத் தானியேல் கண்டான் (தானி 7:10அ). பெந்தெ கொஸ்தே நாளன்று திருச்சபை பிறந்தபோது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படையான அடையாளங் களில் ஒன்று நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் (அப் 2:3). “நமது தேவன் பட்சிக்கிற அக்கியாயிருக் கிறாரே (உபா 4:24; எபி 12:29). அடிக்கடி சொல்லப் பட்டுள்ள இவ்வுண்மையை நாம் மறந்துவிட்டால் நமது வாழ்விலும் தொழுகையிலும் நமது பக்தி விநயத்தை இழந்துவிடுவோம்.

கடவுளது பிரசன்னத்தின் மறுபக்கம் மகிழ்ச்சி யாகும். “உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு (சங் 16:11). “உமது முகத்தை அரசர் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கச் செய்தீர் (சங் 21:6). உமது சந்நிதானத்திலே என்னைச் சந்தோ ஷத்தினால் நிரப்புவீர் (அப் 2:28). இதுவே ஆராதனை யின்

ஆரவாரம். கடவுள் தமது மக்களின் துதி களுக்குள்ளே வாசமாயிருக்கிறார் (சங் 22:3). எனவேதான் ஆலயத்திற்குச் செல்ல வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் தாவீது துள்ளிக் குதித்தான்! (சங் 122:1).

பயபக்தியையும் பரவசத்தையும் சேர்க்கும் போதுதான் நாம் கடவுளது பிரசன்னத்தின் வல்லமையை நிறைவாய் அனுபவிக்க முடியும். பயபக்தியற்ற பரவசம் வெறும் உணர்ச்சிவசம்தான். பரவசமற்ற பக்தி அடிமைத்தனம். “அச்சத்தோடு ஆண்டவரை வழி படுங்கள்; நடுநடுங்கி அவர்முன் அகமகிழுங்கள் (சங் 2:11).

5. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை

பழைய உடன்படிக்கையின் காலத்தில் தீர்க்க தரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகியோர் மட்டுமே எண்ணெயால் அபிஷேகிக்கப்பட்டனர். இது தவிர்த்து, சிறப்பான சில பணிகளுக்கென்று குறிப்பிட்ட நபர்கள் மீது தேவாவியானவர் வந்திறங் கினார். ஆனால், கடைசி நாட்களான புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயோ பரிசுத்த ஆவியானவர் மாந்தர் “யாவர் மேலும்-அதாவது, இளைஞரோ முதியவரோ, முதலாளிகளோ தொழிலாளிகளோ, கடவுளுடைய பிள்ளைகள் யாவர் மேலும் ஊற்றப்படுகிறார் (அப் 2:17,18). விசுவாசிகள் அனைவரும் தூய குருக்கள்! சபையார் அனைவரும் அரச குருக்கள்! குருக்களல்லாதோர் திருச்சபையில் எவருமில்லை! (1 பேது 2:5,9).

பரிசுத்த ஆவியானவரின் வல்லமை பல்வேறு காரணங்களுக்காக நமக்கு அருளப்படுகிறது. அவைகளில் மிக முக்கியமானது சுவிசேஷத்தை அறிவிக்க நம்மைத் தைரியப்படுத்துவதே (அப் 1:8). நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமை யோடும், மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம் என்று பவுல் தெசலோனிக்கே சபை யினருக்கு நினைவூட்டினான் (1 தெச 1:5).

பகுத்தறிவு நிறைந்த இக்காலத்தில் சுவிசேஷத் தைத் தத்துவ ரீதியாக அறிவிப்பதே அதை ஆன்மீக வல்லமையோடு பிரசங்கிப்பதைவிடப் பயனுள்ளதா யிருக்குமென எண்ணத் தோன்றுகிறது. அது தவறு. நாம் மூளைகளோடு அல்ல, இருதயங்களோடு இடைபடுகிறோம். கொரிந்தியருக்குப் பவுல் எழுதிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “உங்கள் விசு வாசத்திற்கு அடிப்படை மனித ஞானமல்ல, கடவுளின் வல்லமையாய் இருக்கும்படி, நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது (1 கொரி 2:4,5). தலையில் பிறப்பது தலைகளுக்குள்தான் செல்லும்; இதயத்தில் பிறப்பதுதான் இதயங்களைத் துளைக்கும்.

கடவுளது ஆவியின் வல்லமை அவரது வரங்கள் மூலம் நடைமுறையில் அறியப்படுகின்றன. வரங்களுக்கு எடுத்துக்காட்டுகளாய்க் கொடுக்கப்பட்ட பட்டியல்களில் ஒன்று 1 கொரிந்தியர் 12:7-10இல் உண்டு. இப்பட்டியலில் ஒன்பது வரங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், ஆவிகளைப் பகுத் தறிதல் ஆகியவை வெளிப்பாட்டு வரங்களாகும்; தீர்க்கதரிசனம், நவநாவுகள், வியாக்கியானித்தல் ஆகியவை பேச்சு வரங்களாகும்; விசுவாசம், குணமாக்குதல், அற்புதங்கள் செய்தல் ஆகியவை செயல்பாட்டு வரங்களாகும். நற்செய்தியறிவிப்பு கனி நிறைந்திருக்கவேண்டுமானால் இம்மூன்றும் தேவை. நமக்கு வெளிப்பட்டுள்ள தேவ கிருபையோடு நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பேசி, ஆவியானவரின் வல்லமை மூலம் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

எருசலேமிலிருந்து ரோம் வரையுள்ள பகுதிகளில் மிஷனரிப் பணியாற்றிய பவுல் இப்பாணியிலேயே செயல்பட்டான் (ரோ 15:18,19).

இன்று பரிசுத்த ஆவியானவர் விண்ணிலிருந்து இறங்கிவர நாம் காத்திருக்கத் தேவையில்லையெனினும், அவரது வல்லமையால் நிரப்பப்பட்டு உலகத்தைத் தலைகீழாக்கும்படி இல்லை, இல்லை, தலைகீழாய் இருக்கும் உலகத்தை நேராக்கும்படி-வீறுகொண்டு புறப்பட்டுச் செல்ல கடவுளுக்குமுன் காத்திருப்பது அவசியம் (அப் 17:6). அகிலவுலகை நற்செய்திமயமாக்குவதென்பது இமயம் போன்றது. ஆனால் அது முடியும்; அதை முடிக்கணும் – கடவு ளது ஆவியின் வல்லமையால் (சக 4:6,7).

6. கடவுளது கரத்தின் வல்லமை

கடவுளின் கரம், அதிலும் குறிப்பாக அவரது வலது கரம், எதிரிகளை முறியடித்துத் தமது மக்களை விடுவித்துப் பாதுகாக்கும் அவரது வல்லமையைக் குறிப்பிடுகிறது. “ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உம் வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது என்று மோசே பாடினான் (யாத் 15:6).

யூதர்களின் மூப்பர் சங்கத்தின் முன் நின்று கொண்டு இயேசு, “இதுமுதல் மனுமகன் சர்வவல்ல கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் என்றார் (லூக் 22:69). உயிர்த்தெழுந்தபின் அவர் விண் ணகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கடவுளின் வலது கைப்புறம் அமர்ந்தார் (மாற் 16:19). பரம தந்தை தமது திருக்குமாரனைப் பார்த்து, “நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்றுரைத்தார் (மாற் 12:36). நாமும் கிறிஸ்துவோடு மேலே உட்கார்ந் திருக்கிறோம் என்பது இன்னும் உற்சாகம் தரும் சத்தியம்! (எபே 1:3). கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பி உன்னதங்களில் உட்கார வைத்த அதே வல்லமை நம்மிலும் வல்லமையாய்ச் செய லாற்றுகிறது (எபே 1:19,20). கிறிஸ்துவின் வெற்றி நமக்கே. அவர் நமது தலையானால், நாம் அவரது உடல். இரண்டும் பிரிக்க முடியாதவை. தலையின்றி உடல் செயல்பட முடியாது; உடலின்றித் தலை செயலாற்றாது (வச 22,23).

இன்னல்களே இல்லாத வாழ்வைக் கடவுள் நமக்கு வாக்குப்பண்ணவில்லை. இயேசு திரிபுறக் கூறியது: “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு.” ஆனால் அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. அடுத்து அவர் சொன்னது: “எனினும் துணிவுடன் இருங்கள்; நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்!” (யோ 16:33). நமது பிரச்னை எவ்வளவு பெரிதாயினும், புதிராயினும் கடவுளின் மாறாத வாக்கு இதோ: அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங் காதே, நான் உன் கடவுள்; நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் (ஏசா 41:10).

நமக்காய்ச் செயலாற்ற முடியாதபடி கடவுளின் கரத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியது ஒன்றே ஒன்றுண்டு. அதுதான் பாவம். எனவேதான் திருவாக்கினன் ஏசாயா இவ்விதம் முழங்கினான்: “மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிட வில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகிவிடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன (ஏசா 59:1,2). நமது வாழ்வில் கடவுளுக்குப் பிரியமில்லாத அத்தனை யையும் அவரிடம் சொல்லிவிட்டுவிடுவதே இதற்கு நிவாரணம். அப்படிச் செய்தால் நாம் தைரியமாக, “விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்துகொள்; பண்டைய நாட்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல விழித்தெழு என்று வேண்டலாம்! (ஏசா 51:9).

7. தேவ தூதர்களின் வல்லமை

உலகிலிருக்கிறவனைவிட உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்ற யோவான் 4:4ஆம் வசனத்தை அடிக்கடி சொல்லுவோம். ஆனால் தேவ தூதர்களும் பொல்லாத ஆவிகளைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ளவர்கள் என்பதை நினைப்பது கிடையாது (2 பேது 2:11).

தேவ தூதர்களைப் பற்றிப் படிப்பது கட்டாயமல்ல என்று கிறிஸ்தவர் பலர் எண்ணுகின்றனர். தூதர்கள் நமது காரியங்களில் எவ்வளவு சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இதோ பாருங்கள். நாம் மறுபடி பிறக்கும்போது பரிசுத்தவான்களின் சபைக்குள் மட்டுமல்ல, “ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களினிடத்திற்கும் வந்து சேருகிறோமாம் (எபி 12:22,23). ஒரேயொரு பாவி மனந்திரும்புவதுகூட தூதர்களை அவ்வளவாய்ப் பரவசப்படுத்துகிறது! (லூக் 15:7,10). நமது சுவிசேஷக் கூட்டங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் ஆவலாய்க் கவனிக்கின்றனர் (1 பேது 1:12இ). சர்வ வல்லவரை நாம் ஆராதிக்கையில் அவர்கள் நம்மோடு சேர்ந்து கொள்கின்றனர் (1 கொரி 11:5,10). திருச்சபையில் ஒழுங்கு இருக்கவேண்டுமென்பது அவர்களது கரிசனை (1 தீமோ 5:21). நாள்தோறும் நமக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்ட ஆவிகள் அவர்கள் (எபி 1:7,14).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உலகின் முடிவும் நெருங்கி வரவர வான் தூதர்களின் பணிக்குப் புதிய பரிமாணங்களும் விரிவாக்கங்களும் உண் டாகும். திருவெளிப்பாட்டுப் புத்தகத்தில் தேவதூதர்களின் செயல்பாடுகளைக் குறித்து ஏராளம் சொல்லப்பட்டிருக்கிறது (வெளி 7:1,2; 8:2,6; 10:1; 12:7; 14:6,8,9; 15:6; 18:1; முதலியன). கிறிஸ்து மண்ணுலகிற்கு வல்லமையுள்ள தமது தூதரோடு திரும்புவார் (மத் 16:27; 2 தெச 1:7). அவர் வானி லிருந்து இறங்குவதைப் பிரதம தூதனின் குரல் அறிவிக்கும் (1 தெச 4:16). இறுதி அறுவடையை அறுப்போர் தேவ தூதர்களே. கடவுளின் ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் அவர்கள் ஒன்று சேர்த்துத் தீச்சூளையில் தள்ளு வார்கள். உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நான்கு திசைகளிலுமிருந்து தேர்ந்துகொள்ளப் பட்டவர்களையோ ஒன்று சேர்ப்பார்கள் (மத் 13:39,41; 24:31). மக்கள் முன்னிலையில் வெட்கமின்றித் தம்மை அறிவித்தவர்களை இயேசு தமது தூதர்கள் முன் அடையாளங்காட்டுவார்; தம்மை மறுதலித்தவர் களையோ தூதர்கள் முன் “அவர்களை எனக்குத் தெரியாது என்று மறுதலித்துவிடுவார் (லூக் 12:8,9).

தேவ தூதர்கள் நமக்குச் செய்பவை பெரும்பாலும் காணக்கூடாதவை, அறியப்படாதவை. அவர்களும் பந்தா பண்ணமாட்டார்கள். அவர்கள் பறந்துகொண்டு பணி செய்யும்போது தங்கள் முகத்தையும் கால்களை யும்கூட அவர்கள் மூடிக்கொள்வார்கள்! (ஏசா 6:2 ஒப்பிடுக.) தங்கள் பக்கமாய் நமது கவனத்தை ஈர்க்கமாட்டார்கள். என் தாயின் கருவறையிலிருந்து எனது கல்லறை வரை தூதர்கள் எனக்கு ஆற்றியுள்ள பணிகளை நான் கடவுளை முகமுகமாய்ச் சந்திக் கும்போது அவர் சொல்வாரானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! வான் தூதரே, நன்றி!

நமக்குள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்!” (எபே 3:20,21).

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்