-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நீ களையா ? பதரா ? கோதுமையா ?

களையா ? பதரா ? கோதுமையா ?

உண்மையைப் புரியவைத்து உயிர்ப்பிக்கும் செய்தி

அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிற நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்தபோது அநேக உண்மைகளை உவமைகளாக போதித்தார். அவைகள் அன்றைக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் ஆவியாயும் ஜீவனாயும் உயிப்பிக்கிறதாயும் இருக்கிறது . அப்படி அவர் போதித்த ஒரு உவமையிலிருந்து இன்றைய கிறிஸ்தவம் அறிய வேண்டிய மிக முக்கிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன்.

இயேசு போதித்த உவமை: (மத் 13:30)

அறுப்புக் காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாக கட்டுங்கள், கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உவமையில் சொல்வது என்னவென்றால், அறுப்புக்காலம் என்பது உலகத்தின் முடிவு, களைகளை நெருப்பில் போடுங்கள் கோதுமை மணிகளையோ களஞ்சியத்தில் சேர்ப்பார்கள் என்றார். முதலாவது நாம் அறிய வேண்டியது என்னவென்றால் அறுப்புக்காலம் என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. இன்றைய கிறிஸ்தவர்களுக்கோ இதைப் பற்றிய உணர்வே இல்லை இந்த உலகமே பிரதானம் இதிலே எப்படி வாழலாம்? சுகமாய் இருக்கலாம்? என்று உலகத்தார் போலவே யோசித்து உலகம் போகிற போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானானால் நினைக்க வேண்டிய முதல் காரியம் நரகத்திற்கு தப்பி பரலோகம் எப்படி போவது. நரகம் என்பது எதோ சில நிமிடங்கள் மாத்திரம் அல்ல அதில் போனால் வரமுடியாது. நித்தியமாய் வேதனைப்படுகிற அக்கினி கடல். ஆனால் இந்த உணர்வு அநேகருக்கு இல்லாமல் போய்விட்டது. நடக்கப்போவது என்னவென்றால், இந்த உலகத்தில் முடிவிலே முதலாவது களைகளை பிடுங்கி நெருப்பிலே போடுவார்கள். பின்பு கோதுமை மணியையோ களஞ்சியத்தில் சேர்ப்பார்கள். ‘களைஎன்பது என்ன? கோதுமை என்பது என்ன? 36ம் வசனத்திலிருந்து பார்க்கலாம்……

அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். (மத் 13:36 - 40)

எனவே நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் என்பது பொல்லாங்கனின் புத்திரர், அப்படியென்றால் தேவனுக்கும் பிள்ளைகள் உண்டு பொல்லாங்கனாகிய சாத்தானுக்கும் பிள்ளைகள் உண்டு. தேவனுடைய பிள்ளைகளே ராஜியத்தின் புத்திரர். அவர்களே களஞ்சியமாகிய பரலோகத்தில் சேர முடியும். ஆனால் பிசாசின் பிள்ளைகளாகிய களைகளையோ முடிவிலே நெருப்பிலே போடுவார்கள். நான் கிறிஸ்துவின் ஆலயத்திற்கு ஒழுங்காய் செல்பவன். நான் தேவனைத் தான் வணங்குகிறேன். எனவே, நான் தேவனுடைய பிள்ளை; நான் இராஜ்யத்தின் புத்திரர்; பரலோகம் எப்படியும் போய்விடுவேன் என ஒருவேளை நினைத்தால் அது முற்றிலும் தவறு. யார் தேவனின் பிள்ளைகள்? யார் பிசாசின் பிள்ளைகள்? வேதம் சொல்வதை கவனியுங்கள்!

பாவஞ்செய்கிறவன் பிசாசினால் ண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால்பாவஞ்செய்யமாட்டான் .இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்;( 1 யோவான் 3:8-10 )

அப்படியென்றால் பாவம் செய்கிற யாராக இருந்தாலும் அவர்கள் பிசாசினுடைய பிள்ளைகளே. இவர்களே களைகள். இவர்கள் முடிவு நெருப்பே. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நிர்விசாரமாய் இருக்கின்றனர். இது சின்ன வயசு என்ஜாய் பண்ணுகிற காலம். எல்லாம் முடிந்து காடு வா வா வீடு போ போ என்னும்போது ஒழுங்காய் வாழலாம்.  இப்பவே ஏன் கஷ்டப்படனும் என்று அநேகர் பாவத்தைக்குறித்து உணர்வில்லாமல் போகிறார்கள். நன்றாய் கவனியுங்கள். எல்லா பொருட்களுக்கும் guarantee உண்டு. சாதாரணமாக, ஒரு பிரிட்ஜ் இன் விலை சுமார் 20000, ஒரு TV இன் விலை சுமார் 25000 என அழியும் பொருட்களுக்கு பல வருடங்கள் guarantee உண்டு.. ஆனால் விலைமதிப்பே இல்லாத மனிதனுக்கோ ஒரு guarantee-யும் கிடையாது. Remote control அவர் கையில் இருக்கிறது. அவர் எப்போ ஒருவனுடைய வாழ்வை முடிப்பார் என யாருக்கும் தெரியாது. இதை அறியாமல் அப்புறம் பார்க்கலாம் என அநேகர் மறுத்துவிடுகின்றனர்;

வேறு சிலர் மனசாட்சி படி வாழ்கிறேன். சரியாக இருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ( நீதி 16:25 ) இதுவும் தவறு. தேவன் உன்னை எப்படி பார்க்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர உன் மனசாட்சி படி வாழ்வது அல்ல. எனவே, தேவன் உன்னிடத்தில் பார்க்கும்போது, என்ன குறைகள் உள்ளதோ எல்லாவற்றையும் மாற்றிக்கொள்.

அன்பு சகோதரனே, சகோதரியே, இது உனக்கு கிடைத்த மிக முக்கியமான தருணம். நீ பாவமில்லாத பரிசுத்த வாழ்வை பின்னால் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டாலோ அல்லது உன் மனசாட்சிபடி சரி என்று சப்பைகட்டு கட்டி கொண்டாலோ நீ தேவனுடைய பிள்ளை அல்ல.  வசனத்தின் அடிப்படையில், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றால்தான் தேவனுடைய பிள்ளை

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினா -ல்  தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களேஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள்  எத்தனை பேரோ,அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.  ( கலா 3:26,27 ).

இன்று நீ உன் வாழ்வை மாற்றிக் கொள்ளாவிட்டால் நீ இராஜ்யத்தின் புத்திரனாக முடியாது. நீ களையே. சுட்டெரிக்கப்படுவதே உன் முடிவு. எனவே உன் வாழ்வில் இப்போழுது மாற்றம் கண்டிப்பாய் அவசியம். ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

ஒரு ஆற்றில் வெள்ளம் வந்து எல்லா பொருட்களும் தண்ணீரில் அடித்துக்கொண்டு போகும்போது, ஒரு பொருள் கம்பளியால் சுற்றியது போல் போய்க்கொண்டிருந்தது.அதை எடுத்துவிட ஒருவன் நினைத்து அதனை போய் பிடித்தான். இவன் பிடிக்கும் முன்னரே அருகில் சென்றவுடன் அது இவனை பிடித்து விட்டது.. அது என்ன? – கரடி. தப்பிக்கவே முடியவில்லைஇதுபோலதான் பாவமும்.. மிகவும் ஆபத்தானது. ஒரு சிகரட் தானே என ஆரம்பித்தாய். இப்பொழுதோ விடமுடியாதபடி அது உன்னை பிடித்துக்கொண்டது. சும்மா பொழுது போக்கிற்கு என சினிமா பார்க்க ஆரம்பித்தாய் இப்பொழுது அது உன்னை பிடித்துவிட்டது. பாவத்தோடு விளையாடாதே. அது படுபயங்கரமானது. இப்போழுது மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொள். இல்லாவிட்டால் பாவம் செய்கிற நீ பொல்லாங்கனின் புத்திரன். அப்படியென்றால் நீ களை. நெருப்பிலே போடப்படுவாய் ஜாக்கிரதை.

முதலாவது களையானது அக்கினியிலே போடப்படும். அடுத்து வேதம் சொல்வதை கவனியுங்கள்.

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது;  அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்(மத்தேயு 3:12).

களைகள் மாத்திரமல்ல பதரும் கூட அக்கினியில்தான் போடப்படும். பார்க்கும்போது, பதரும் கோதுமை மணியும் ஒன்றுபோலதான் காணப்படும். வெளியே எந்த வித்தியாசமும் இருக்காது. இதைப்போலவே, இரட்சிக்கப்பட்ட எல்லாருமே கோதுமை மணிகள் போலவே வெளியே தெரியலாம்; ஆனாலும் உண்மையில் பதராயிருக்கக்கூடிய அநேகர் உண்டு. களைகளுக்கு என்ன முடிவோ அதே முடிவுதான் பதருக்கும். இரட்சிக்கப்பட்டு சபைக்குச் செல்வதால் நாங்கள் மணிகள் என நினைத்தாலும் சபைக்குள் இரண்டுமே உண்டு. பதரும் உண்டு, கோதுமையும் உண்டு. எப்படி கண்டுபிடிப்பது? வெளியே பார்க்கும்போது தெரியாது அல்லவா? எனவே வேதத்தின் அடிப்படையில் பதருக்கும் கோதுமைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி காட்டுகிறேன். வாசிக்கும் போதே நீங்கள் கோதுமையா? அல்லது வெளியே கோதுமையைப் போல்  தோற்றமளித்து உள்ளே ஒன்றுமில்லாத பதரா என்பது உங்களுக்கே புரிந்து விடும்.

முதல் வித்தியாசம்

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்(லூக்கா 22:31,32)

சாத்தான் தன்னிடம் அனுமதி கேட்டதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார். தேவ பிள்ளைகள் எனப்படுவோர் இதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அனுமதி இல்லாமல் சோதனை கிடையாது, எதற்காக சாத்தான் இங்கே சோதிக்கிறான் என்றால், விசுவாசம் ஒழிந்துபோகும்படிக்கே. அவனது பிள்ளைகளை, அதாவது பாவம் செய்கிறவர்களை (களைகளை) நெருப்பிலே போடுவது மட்டுமல்ல தேவனுடைய பிள்ளைகளையும் எப்படியாவது அவர்கள் விசுவாசத்தை ஒழித்து அவர்களையும் நெருப்பில் போடுவதற்காகவே அனுமதி கேட்கிறான்

இங்கே தான் உண்மை புரியும். சுளகில் புடைக்கும்போது பதர் பறந்துவிடும்; கோதுமை மணி மட்டுமே நிற்கும். அப்படியே சோதனை வரும் போது ஆண்டவரை நீ விட்டுவிடுவாய் என்றால் நீ கோதுமை அல்ல பதரே. பிரச்சனை  வரும்போது தேவனை விட்டு விலகி பாவம் செய்கிறவன் கோதுமை மணி அல்ல பதரே. தேவன் அனுமதித்தால் மட்டுமே விசுவாசிகளின் வாழ்வில் பிரச்சனை வரும். ஆனாலும் இதன் மத்தியில் உன் விசுவாசம் ஒழியாதபடி இயேசு வேண்டுகிறார். ஆண்டவரிடம் வந்து என்னத்தை கண்டேன் என்று முறுமுறுப்பாயானால் நீ பதர். யோபுவைப்போல் என்னை கொன்றுபோட்டாலும் நம்பிக்கையாய் இருப்பேன் என்று சொன்னால் நீ கோதுமை, பெண் விஷயத்தில், பண விஷயத்தில் அநேகர் பதராகிவிட்டனர். பதருக்கு பிரச்சனையில்லை ஏனென்றால் முதல்முறை புடைக்கும்போதே அது பறந்துவிடும். கோதுமைக்குதான் அதிக பிரச்சனை உண்டு. ஏனெனில் அது சுளகினால் புடைக்கப்படுகையில் மேலும் கீழும் அடி வாங்கும்போது, அதிலுள்ள உமி போய்விடுகிறது. அப்படியே, உன்னிலுள்ள பாவ சுபாவத்தை போக்கவே தேவன் உன்னை புடைக்க ஒப்புக்கொடுக்கிறார். எனவே, நீ உண்மையான கோதுமையானால் எப்படி புடைத்தாலும் பதரைப்போல் பறக்காமல் உன் வாழ்வை சுத்தமாக்கிக் கொள்வாய். நான் உபத்திரவப் பட்டது எனக்கு நல்லது அதனால் உமது பிரமானங்களைக் கற்றுக் கொண்டேன் என்பாய்.

இரண்டாவது  வித்தியாசம்

அடுத்து, கோதுமைக்கும் பதருக்கும் உள்ள 2-வது வித்தியாசம் என்னவென்றால், கோதுமை பிறரை பலப்படுத்தும். ஆனால் பதரால் அப்படி செய்ய முடியாது.

கொஞ்சம் யோசித்துப்பார். இதுவரை யாரையாவது ஆவிக்குறிய வாழ்வில் பலப்படுத்தி இருக்கிறாயா? நீ பலப்படுவதே பெரிய காரியமாய் இருக்கிறது.. இதிலே எங்கே பிறரை பலப்படுத்துவது. அப்படியென்றால் நீ பதர், கோதுமையல்ல. பிற ஆத்துமாக்களை குறித்து கவலையற்றிருந்தால் நீ பதரே. ஆலயத்திலும் சரி, வெளியேயும் சரி. உனக்கு தெரிந்த சகோதர சகோதரிகளை மாத்திரம் விசாரித்துவிட்டு, புதிதாய் வந்த ஒரு ஆத்துமாவை பலப்படுத்த தவறினால் நீ பதரே. கோதுமையல்ல. வசனம் சொல்லுவதை கவனியுங்கள்.

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.          (எபிரேயர் 3:13)

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றிஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.  (1தெச 5:11)

பாவத்தின் வஞ்சனையால் ஒருவன் இறப்பதை அறிந்தும் நீ தேற்றாமல் போய்விடாதே. மேலும் தேவன் சரீரத்தில் அநேக அவயவங்களை வைத்திருப்பது ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படியே. இவையெல்லாம் அறிந்தும் சரீரத்திலுள்ள இன்னொரு அவயவத்தை நீ பலப்படுத்தாமல் போனால் கோதுமையல்ல பதரே. உன்னை உணர்ந்து மாற்றிக்கொள்.

மூன்றாவது   வித்தியாசம்

மூன்றாவதாக, கோதுமைக்கும் பதருக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால்,

மெய்யாகவே மெய்யாகவே  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது  நிலத்தில் விழுந்து  சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த  பலனைக்கொடுக்கும் . (யோவான் 12:24)

நல்ல மணி அடுத்த மணியை உருவாக்கும். ஆனால் பதரால் அப்படி செய்ய முடியாது. சிந்தித்துப்பார். உன் வாழ்நாளிலே இதுவரை குறைந்தது ஒரு ஆத்துமாவையாவது உன்னால் ஆதாயப்படுத்தியிருக்க முடியுமானால் நீ கோதுமை. இல்லாவிட்டால் நீ பதரே. கோதுமை எப்பொழுது இன்னொரு கோதுமை மணியை உருவாக்க முடியும் என்றால் அது நிலத்தில் விழுந்து சாகும்போது மட்டுமே. நான், எனது, எனக்கு, என்னுடைய  இது போன்ற உன் சுய நல வாழ்விற்கு செத்தால் மாத்திரமே நீ இன்னொரு ஆத்துமாவை உருவாக்க முடியும். அப்போது தான் நீ கோதுமை . இல்லாவிட்டால் வெறும் பதர்.

லூக்கா பத்தாம் அதிகாரத்தில் வரும் சமாரியன், கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராய் கிடந்தவனை காப்பாற்றியதினால் அவன் பதரல்ல, கோதுமை. இது எப்படி அவனால் முடிந்தது என்றால் தனது சுயநலத்திற்க்கு மரித்தான். தனது சுய வாகனத்திற்கு மரித்தான், பொருளுக்கு மரித்தான், பணத்திற்கு மரித்தான், தன் நேரத்திற்கு மரித்தான். எனவே இன்னொருவனை காப்பாற்றியுள்ளான். நீயும் பணத்திற்கு, பொருளுக்கு, நேரத்திற்கு, பெருமைக்கு மரிப்பாயானால் உன்னாலும் பிறரை ஆதாயப்படுத்த முடியும். நீ கோதுமை மணி போல் இருப்பாய். ஆனால் எல்லாம் உனக்கே வைத்துக்கொண்டு உனக்கே செலவழிப்பாய் என்றால் உன்னால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை நீயும் பதரும் ஒன்று தான். பதரின் முடிவு நெருப்பிலே போடப்படுவது

சகோதரனே, சகோதரியே,உண்மையைப் புரிந்துகொள்.

இன்னும் பாவத்தில் இருந்தால்         - நீ களை

(பிசாசின் பிள்ளை)

சோதனையில் பின்வாங்கினால்        - நீ பதர்

பிறரை பலப்படுத்தாவிட்டால்           - நீ பதர்

ஆத்துமா ஆதாயப்படுத்தாவிட்டால்   - நீ பதர்

நெருப்பிலே போடப்படுவாய்

கோதுமை மணியாய் வாழ்ந்தால்

களஞ்சியத்தில் சேர்க்கப்படுவாய்

கர்த்தரின் வேலைக்காரன்

P. அற்புதராஜ் சாமுவேல்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்