அநேகர் குழம்புகிற மற்றும் குழப்புகிற ஒரு மிக முக்கியமான சத்தியம் இது. இந்த கேள்விக்கான பதிலை சரியாக அறிந்துகொண்டால், கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு வரும் அநேக சந்தேகங்களுக்கு, குழப்பங்களுக்கு பதில் கிடைத்துவிடும்.
ஆதியாகமம் 1:26- 27 சொல்லுகிறது: "பின்பு தேவன்: நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..... (வச. 26); தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்."
இந்த வசனத்தைப் படித்துவிட்டு, ஆதியாகமம் 2:7-ம் வசனத்தையும் படித்துப்பாருங்கள், நீங்கள் குழம்பிப்போவீர்கள்.
"தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவ ஆத்துமாவானான்." (2:7)
ஆதியாகமம் 1:26-27 - லிலேயே மனிதனை தேவன் உண்டாக்கிவிட்டாரே. பின்பு 2-ம் அதிகாரத்தில் இன்னொரு முறை தேவன் மனிதனை உண்டாக்கினாரா? என்பது அநேகருடைய கேள்வி. இதை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் குழப்பமும், சந்தேகமும்தான் மிஞ்சும். கொஞ்சம் ஆழமாக தியானித்துப் பார்த்தால், இதிலுள்ள இரகசியங்கள் நம்முடைய விசுவாசத்தை மிகவும் வலுப்படுத்துவதாக இருக்கும்.
ஆதி. 1:26,27 - ஐயும், 2:7 – ஐயும் திரும்பத் திரும்ப வாசியுங்கள். அதில் இருவேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் காணமுடியும். முதல் அதிகாரத்தில் சிருஷ்டித்தார்" என்ற வார்த்தை மூன்று முறை வருகிறதை கவனியுங்கள். 2:7 - ல் "உருவாக்கினார்" என வருவதை கவனியுங்கள். இதை நீங்கள் ஆங்கிலத்தில் வாசித்தால், முதல் அதிகாரத்தில் "aeated' என்றும் இரண்டாம் அதிகாரத்தில் “formed | made' என்றும் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
- Created என்பது இல்லாத ஒன்று சிருஷ்டிக்கப்பட்டது (the invisible part of man - soul and spirit)
- formed/ made என்பது இருக்கிற ஒன்றிலிருந்து
- மற்றொன்றை வேறுவடிவில் உருவாக்குவது (the visible part of man - the physical body)
ஆக, முதலாம் அதிகாரத்தில் மனிதனுக்குள் மறைந்திருக்கும் காணக்கூடாத பகுதிகளை தனக்குள் இருந்து உண்டாக்குகிறது. அதாவது, மனிதனுடைய ஆத்துமா மற்றும் ஆவி. இரண்டாம் அதிகாரத்தில் தேவன் மனிதனுடைய சரீரத்தை உண்டாக்குகிறார். ஏற்கனவே அவர் படைத்திருந்த பூமியின் மண்ணை எடுத்து அதிலிருந்து மனிதனுடைய காண்கின்ற பகுதியாகிய சரீரத்தை வடிவமைக்கிறார். சரீரத்தைப் படைத்த பின்பு “ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; அவன் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதப்பட்டிருக்கிறது. "ஜீவ ஆத்துமாவானான் என்றால், ஜீவனையும் (ஆவியையும்), ஆன்மாவையும் உடைய மனிதனாக அவன் உருவானான்.
இந்த ஆவியிலும், ஆத்துமாவிலும்தான் தேவனுடைய சாயல் இருக்கிறது. மனிதனுடைய சரீரத்தில் தேவனுடைய சாயல் இல்லை. ஏனென்றால், அது காண்கின்ற ஒன்று; தேவன் காணக்கூடாதவர் (1தீமோ. 6:16; யோவா. 1:18; யோவா. 4:12; எபி. 11:27). தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவா. 4:24).
ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றுமில்லையே... ரூபமில்லை
ஆகையால் சொரூபம் ஒன்றுமில்லையே....
என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். மனிதர்களாகிய நமக்கு உருவம் இருக்கிறது; தேவனுக்கு உருவம் இல்லை. அவரை ஒரு சிலையில் வடிக்க முடியாது; ஒரு படத்தில் வரைய முடியாது; அவருக்கு உருவத்தைக் கொடுக்க முடியாது. ஆனால், இன்றைக்கு அறிவிலியான மனிதர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப கடவுளுக்கு உருவங்களைக் கொடுத்து அதை வணங்கிக்கொண்டிருக்கிற கொடுமை இந்தியாவில் நடப்பதுபோல வேறெங்கும் காணமுடியாது. இதைக் குறித்து ரோமர் 1:19 - 23 - ல் தெளிவாக வாசிக்கலாம்.
காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகளை, அழிவற்ற தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனுஷர்கள், மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) ஒப்பாக மாற்றிவிட்டார்கள். வசனம் 25 சொல்லுகிறது: "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிக்கிறார்கள்." எனவேதான் தேவன், "மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" என்று கட்டளையிடுகிறதையும், அப்படி செய்தால், அவர் எரிச்சலுள்ள தேவனாக இருப்பார்" என்று எச்சரிப்பு கொடுக்கிறதையும் நாம் வேதத்திலே பார்க்கிறோம்.
காணாத உலகில் வாழும் உருவமில்லாத தேவன், முதலாவது மனிதனுடைய காணக்கூடாத பகுதிகளாகிய ஆத்துமாவையும், ஆவியையும் சிருஷ்டித்துவைத்துவிட்டு, இரண்டாம் அதிகாரத்தில் மனித சரீரத்தைப் படைத்து அதில் உட்செலுத்துகிறதை நாம் அறிகிறோம் "நாசியிலே ஊதினார்" (ஆதி. 2:7). இப்பொழுது மனிதனுடைய காணக்கூடாத பகுதியும், காணக்கூடிய பகுதியும் இணைந்து, முழு சரீர மனிதனாக எழும்பி நிற்கிறதைப் பார்க்கிறோம். சரீரம் மண்ணினாலானது; ஆத்துமாவும், ஆவியும் தேவனிடமிருந்து இந்த சரீரத்துக்குள் புகுத்தப்பட்டது.
சரி, இப்பொழுது காணாத தேவதனின் சாயல் மற்றும் ரூபம் என்ன என்பதைப் பார்ப்போம். இதற்கான ஆங்கிலப் பதத்தைக் கவனியுங்கள் image and likeness. இந்த இரு பதங்களும் வெவ்வேறு அர்த்தத்தைக் குறிக்கிறதாக இருந்தாலும், ஒரே விஷயத்தை மையமாகக் கொண்டவையாகும். அதுதான் தேவனுடைய "திரித்துவம். (திரித்துவம்" என்று சொன்னவுடன் நிறைய கேள்விகள் உங்கள் மனதில் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை). இந்தத் திரித்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தேவனுடைய சாயல் மற்றும் ரூபம் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். (இங்கே திரித்துவம் என்றால் என்ன என்பதை விளக்க எனக்கு நேரமில்லை; மன்னிக்கவும்).
தேவன் திரித்துவமாய் இருக்கிறார் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அதுபோலத்தான் தேவன் மனிதனையும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியவனாகப் படைத்திருக்கிறார். ஆவி, ஆத்துமா, சரீரம். (இதைக் குறித்து அடுத்த கேள்விக்கான பதிலில் பார்ப்போம்). இந்த ஆவி மற்றும் ஆத்துமாவுக்குள்தான் தேவன் தன்னுடைய சாயலை வைத்திருக்கிறார். அதாவது தேவனுடைய குணாதிசயங்கள். தம்முடைய குணாதிசயங்களை, அதாவது தனக்குள் இருக்கும் இயல்புகளை, பண்புகளை, குணநலன்களை தேவன் மனிதனுக்குள்ளும் வைத்திருக்கிறார். (நூறு சதவீதம் வைத்து படைத்தார் என்று சொல்ல முடியாது; ஆனால், அவருடைய குணங்கள் நிறைந்தவனாகத்தான் தேவன் அவனைப் படைத்தார்). அவை எவை என்பதைப் பாருங்கள்.
- தேவன் ஆளுகை செய்கிறவர்; மனிதனுக்கு ஆண்டுகொள்ளுகிற ஆற்றலைக் கொடுத்தார் (dominion / rule over the creation).
- தேவன் அதிகாரமுள்ளவர்; மனிதனுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார் (authority).
- தேவன் படைக்கும் ஆற்றல் கொண்டவர்; மனிதனும் புதிது புதிதாக எதையாவது படைக்கவேண்டுமென ஆவலுடையவன் (creativity).
- தேவன் சுயமாக செயல்படுகிறவர்; அதே போல மனிதனையும் தன்னிச்சையாக செயல்படுகிறவனாகப் படைத்தார் (free being).
- தேவன் தெரிந்தெடுக்கும் ஆற்றல் கொண்டவர்; மனிதனுக்கும் அதைக் கொடுத்திருந்தார் (ability to choose).
- திரித்துவத் தேவனுக்குள் உறவுப் பரிமாற்றம் இருந்தது; அதேபோல மனிதனும் உறவுகளைப் போற்றி வாழ விரும்புகிறான் (relationship).
- திரித்துவத் தேவனுக்குள் மொழிப்பரிமாற்றம் இருந்தது; அதேபோல மனிதனுக்கும் இருப்பதை நாம் அறிகிறோம் (communication).
- திரித்துவத் தேவனுக்குள் அன்புப் பரிமாற்றம் இருந்தது; அதேபோல மனிதனும் மற்றவருடைய அன்பை எதிர்பார்த்தும், அன்பு செலுத்தியும் வாழ்கிறான் (love).
- தேவன் தாம் படைத்தவைகளை கவனித்துக்கொள்ளுகிறவர்; அதேபோல மனிதன் கவனித்துக் கொள்ளும் குணமுடையவன் (care taker).
- தேவன் தம் படைப்புகளைப் பார்த்து ரசிக்கிறவர்; அந்த ரசிக்கும் இயல்பு மனிதனுக்கும் உண்டு. (ஆதி. 1:31; 2:23)
தனக்குள் இல்லாத ஒன்றை தேவன் மனிதனுக்குள் வைக்கவில்லை. அதே சமயத்தில், தனக்குள் இருந்த எல்லா ஆற்றலையும், குணாதிசயங்களையும் தேவன் மனிதனுக்குள் வைத்துவிட்டார் என்றும் நினைத்துவிடக்கூடாது. ஏதோ, வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்கிற முட்டாள்தனம் எங்கோ நடந்த கட்டுக்கதை; அது இங்கே நடக்கவில்லை. கற்துக்கொடுத்தவனிடமே வித்தையைக் காட்டும் கதை இங்கே செல்லாது.
தேவனுடைய பல அம்சங்களுடன் படைக்கப்பட்டவன்தான் மனிதன். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று வாய்கிழிய சொல்லிக்கொண்டு திரியும் ஒரு வானரக்கூட்டம் இந்த வையகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. சாத்தானால் குருடாக்கப்பட்ட இவர்களின் மனக்கண்கள் திறக்கப்படுவது எப்போது? (2 கொரி. 4:4)
தேவனுடைய ரூபம் என்பது அவருடைய திரித்துவம்; அது மனிதனுக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய சாயல் என்பது அந்தத் திரித்துவ தேவனுக்குள் இருக்கும் குணாதிசயங்கள். அவைகளை தேவன் மனிதனுக்குள் வைத்துதான் மனிதனைப் படைத்திருக்கிறார். எத்தனை அற்புதமான தேவனை நாம் இவ்வளவு சமீபமாகப் பெற்றிருக்கிறோம். (உபா. 4:7; யாத். 15:11 )
சகோ. கிரிஸ்டோபர்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்