Wesley preaching from his father's tombstone |
அனலோடு பிரசிங்கிப்பது அழிந்துபோன கலையாயிற்றோ?
“ஆர்வமில்லாத
வெது வெதுப்பான மனிதர்
திரளாய்க்கூடி
ஊழியம் செய்வதைவிட
ஒரு சில அனலான
மனிதர் செய்யும் ஊழியம்
எவ்வளவு பயனுள்ளதாக
இருக்கிறது.”
காலம் கடந்துவிட்டதால் இக்கூற்று சாரமிழந்து விடவில்லை. 'நல்ல அனலான பிரசங்கிகள்' நமக்கு அதிகம் தேவை. "ஐயோ!" என்று ஓலமிட்ட ஏசாயா இப்படிப்பட்ட பிரசங்கியாயிருந்தான். "ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் " என்று அவன் கதறினான். "ஐயோ!" என்று கூறிய பரிசுத்த பவுலும் இப்படிப்பட்டவனே. "சுவிசேஷத்தை நான் பிரசிங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ!" என்றான். இங்கிலாந்தில் உள்ள ரிச்சர்டு பாக்ஸ்டர் என்ற தேவ மனிதன் தன்னுடைய ஊழியத்தின் அளவை உணர்ந்து தான் சோம்பேறித்தனமாக இருப்பதாக பிறரால் பழித்துரைக்கப்பட்டபோது பின்வருமாறு பதில் சொன்னார்: 'உங்களுடைய ஊழியம் என்னுடைய ஓய்வுக்குக்கூட சமமாகாது. எல்லாப் பரிசுத்தவான்களிலும் கடையனாக என்னைக் கருதிக்கொள்வதற்கு எனக்குக் காரணம் உண்டு. ஆனால் எனது உழைப்புடன் ஒப்பிடும்போது நகரத்திலுள்ள பெரும்பான்மையான வர்த்தகர்களின் உழைப்பை உல்லாசம் என்றே கூறவேண்டும் என்று என்னைக் குற்றஞ்சாட்டுகிறவர்களிடம் கூற நான் அஞ்சவில்லை. என்றாலும் அதற்காக என் உழைப்பைப் பெரிய இளவரசப் பதவிக்காகக் கூட நான் மாற்றிக்கொள்ளமாட்டேன்.
“அவர்களின் உழைப்பு
உடலைக் காக்கிறது; என்னுடைய உழைப்பு உடலைக் கரைக்கிறது. அவர்கள் அலட்டாது உழைக்கிறார்கள்:
நான் அயராது உழைக்கிறேன்.
அவர்களுக்குப்
பொழுது போக்க நேரம் உண்டு; எனக்குச் சாப்பிடுவதற்குக்கூட நேரமில்லை. யாரும் அவர்களுக்குத்
தொந்தரவு செய்வதில்லை; ஆனால் நான் எந்த அளவு உழைக்கிறேனோ அந்த அளவு வெறுக்கவும் நெருக்கவும்
படுகிறேன்.”
இவ்விதம் பிரசிங்கிப்பதில் புதிய ஏற்பாட்டு ஆத்துமக்
கலாச்சாரம் காணப்படுகிறது. செத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, செத்துக் கொண்டிருப்பவனைக்
போலப் பிரசங்கிக்க விரும்பியது இந்த பாக்ஸ்டரே. அவரைப் போன்று ஆத்துமாவில் வீரங்கொண்ட
பிரசங்கிகளே இன்றையத் தலைமுறைப் பாவிகளை நரகத்தின் திறந்த வாயிலினின்று காப்பாற்ற முடியும்.
“ஆலயத்தில் கூட்டம்
நிறையஇருக்கலாம்;
ஆனால், ஆவிக்குரிய
நிலை சீர்கேடாயிருக்கிறதே.”
கடந்த காலத்தில் மிதவாதமானது மக்களைக்
கெடுக்கும் சக்தி என்று சபிக்கப்பட்டது சரியே. பிரசங்கிகள் தங்களை ஆராய்ந்து பார்க்க
ஒரு சில கேள்விகளை நான் கேட்கட்டுமா? மகத்துவமாகப் பிரசிங்கித்தல் மறைந்து விட்டதோ?
மக்களின் சுவைக்கேற்ப, நகைச்சுவை நிரம்பப் பிரசங்கிப்பதே நமக்கு விருப்பமாயிற்றோ? மக்களின்
ஆவிக்குரிய பசியின்மைக்கு இத்தகையப் பிரசங்கிகள் பரிகாரம் செய்யுமெனக் கருதிவிட்டோமோ?
பவுலைக் கவனித்துப் பாருங்கள், பரிசுத்த ஆவியால்
வல்லமையாக அபிஷேகிக்கப்பட்டு, சந்தை வெளிகளைத் தாக்கி, ஆலயங்களைக் கலக்கி, அரண்மனைகளில்
ஊடுருவி, இப்படி ஆசியா முழுவதும் அசைத்துவிட்டான். உள்ளத்திலும் உதடுகளிலும் சுவிசேஷப்
போர்க்குரலோடு புறப்பட்டுச் சென்றான். 'உண்மைகள் பிடிவாதமானவைகள்' என்ற சொற்றொடரை லெனின்
உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பவுலின் சாதனைகளைப் பார்க்கும்போது இக்கூற்று மிகவும்
உண்மையென்பது புரிகிறதல்லவா? அப்படியே ஒப்பிட்டுப்பார்த்து இத்தலைமுறைக் கிறிஸ்தவர்கள்
எப்படி அனலின்றி இருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறதல்லவா? நம் உள்ளம் வேதனை அடைகிறது.
பவுல் பெரிய பட்டணப் பிரசங்கி மட்டுமல்ல, இருப்பினும், வீதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளைத்
தட்டவும், அழியும் ஆத்துமாக்களுக்காக வீடுகளில் ஜெபிக்கவும் அவனுக்கு நேரமிருந்தது.
சுவிசேஷ ஊழியம் இன்று ஒரு வியாபாரமாகிவிட்டது.
எனக்குத்தெரிந்த புகழ்பெற்ற சுவிசேஷகர் ஒருவர் நான்கு வாரங்கள் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கு
வாரம் ஒன்றிற்கு 500 டாலர் (சுமார் ரூ.15000) தருகிறோம் என்று சொன்னபோது அது போதாது
என்று மறுத்துவிட்டார். ஆத்துமாக்களுக்காக அழவும் கூலி வேண்டுமோ? இவர்கள் யூதாசைப்
போன்றவர்கள். சபையினரிடையே காணப்படும் பலவீனத்திற்குக் காரணம் பிரசங்க பீடத்தில் உள்ள
இப்பயங்கரங்கள் அல்லவோ?
“எழுப்புதல் பிரசங்கத்திற்குக்
கண்ணீர் இன்றியமையாதது என்று
நான் நாளுக்கு
நாள் அதிகமாய் நம்புகிறேன்.
நமக்கு வெட்கமில்லை
எனத் தலை குனியவும்,
கண்களில் கண்ணீர்
இல்லையேயெனப் புலம்பவும்,
ஊழியக்காரருக்குரிய
பணிவில்லையேயெனநம்மைத் தாழ்த்தவும்,
பாரமில்லையேயென
அங்கலாய்க்கவும்,
இக்கடைசி மணி
நேரத்தில் பிசாசானவன் வீறுகொண்டு
அலைவதைக் குறித்து
அவன் மேல் நமக்குக்
கோபம் இல்லையேயென
நம்மை நாமே கோபித்துக் கொள்ளவும்,
இந்த உலகம் நம்மைத்
தண்டிக்காமல் நம்மோடு எளிதில்
ஒத்துப்போக முடிகிறதேயென
நம்மை நாமே தண்டித்துக்
கொள்ளவும் இதுவே தருணம்.”
பெந்தேகொஸ்தே என்றால் பெரும் துன்பம் சகிக்க வேண்டும், நாமோ இன்பத்தில் உழலுகிறோம். பெந்தேகொஸ்தே என்றால் பெரும் துன்பம் சகிக்க வேண்டும்; நாமோ படாடோப சௌகரியத்தை நாடுகிறோம். பெந்தேகொஸ்தே என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதைவிட வேறேது வேண்டுமானாலும் செய்வோம். ஒரு வேளை பெந்தேகொஸ்தே வாழ்க்கையை நாம் மீண்டும் வாழ்ந்தால் நம்மில் அநேகர் சிறை செல்ல வேண்டியதிருக்கும். நான் பெந்தேகொஸ்தே வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறேனே ஒழிய பெந்தேகொஸ்தே சபை பிரிவைப் பற்றிப் பேசவில்லை. நான் யாரையும் தாக்கவில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் ஆலயத்தில் பெந்தேகொஸ்தே சம்பவம் நடைபெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்,பேதுரு வல்லமையால் தரிப்பிக்கப்பட்டதுப்போல், நீங்களும் தரிப்பிக்கப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு வார்த்தை சொல்ல அனனியாவும் அவன் மனைவியும் கீழே விழுந்து உயிரை விடுகிறார்கள். இன்றைய நவீன வாதிகள் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? இதோ பவுல் அவன் எலிமாவைக் கண் தெரியாமல் போகும்படிச் செய்கிறான். இன்று இப்படியெல்லாம் நடந்தால் பிரசங்கி மீது வழக்கு தொடர்ந்துவிடுவார்கள். தேவ சமுகத்தில் தாழ விழுவது ஏறத்தாழ எல்லா எழுப்புதல் பிரசங்கிகளையும் பின் தொடரும், ஆனால் இன்று அப்படி நடந்தால் "நமது பெயர் கெட்டுவிடும்" நம்முடைய மென்மையான இருதயங்கள் இவைகளைத் தாங்குமோ?
இச்செய்தியின் துவக்கத்தில் நாம் கூறியது போல, கெம்பீரமாய் பிரசங்கிக்க
வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன். பிசாசானவன் சிறியவைகளை நாம் பெரிதுபடுத்த விரும்புகிறான்.
சிங்கங்கள் நாட்டை விழுங்கிக்கொண்டிருக்கும் போது, "ஆழமான விசுவாச வாழ்வில்"
உள்ள நம்மில் பலர் சுண்டெலிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறோம்!
அன்புக்கு அடிமைப்பட்டு, கிறிஸ்துவுக்காகக் கட்டுண்ட பவுல் தேவன் மாற்ற வேண்டிய ஆத்துமாக்களிலேயே மிகவும் கடினமானவன் என்று சொல்லக்கூடிய அவன், உலகை தேவனுக்காக உலுக்கப் புறப்பட்டுச் சென்றான். அவனுடைய காலத்தில் அவன் சாத்தானைப் புறங்காட்டச் செய்து, நம் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகத் துன்பம் சகித்து, ஆண்டவரை அதிகமாக நேசித்து, ஊக்கமாக ஜெபித்து, நல்ல சாட்சியாக விளங்கினான்.
சகோதரரே,
“அப்போஸ்தலரின் பயபக்தியையும்,
அவர்களின் வல்லமையையும்
திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி
முழங்காலுக்குச் செல்லுவோம்.
வறட்டுத்தனமாய்ப்
பிரசங்கிப்பதை ஒழித்துக்கட்டுவோம்.”
எழுப்புதல் தாமதிப்பது ஏன்? - லியோனார்டு ரேவன்ஹில்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்