கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே நம்முடைய திராணிக்கு மேலாக நம்மை சோதிக்கப்படுவதற்கு இடங்கொடாதவரும், அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்குகிறவருமாகிய தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள் (1 கொரி. 10:13). மார்ச் மாதமென்றாலே, அநேக பரீட்சைகளை (Exams and Tests) நாமும், நம்முடைய பிள்ளைகளும் எதிர்நோக்குகின்றோம். அதற்காக ஆயத்தப்படுத்துவதிலும், அதனை மேற்கொள்ள எடுக்கப்படும் கடும் முயற்சிகளிலும் நாம் அனைவரும் மிகவும் பிஸியாகிவிடுகிறோம்; ஏன்? ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்தக்கூட, நடத்துகிறவர்கள் அஞ்சுகிறார்கள். LKG படிக்கும் பிள்ளைக்குக்கூட படித்துக்கொடுக்க, அம்மாவும் அப்பாவும் வெகுசிரத்தை எடுக்கவேண்டிய காலகட்டம் இது. வேறு சிந்தையோ, வேலையோ செய்யக்கூடாதபடி தடுக்கப்பட்டவர்களும் உண்டு.
ஆவிக்குரிய
வாழ்விலும் நாம் நம்மை பரீட்சித்துப் பார்க்கும்படியாக வேதம் அழைக்கிறது. நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று
உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள் (2 கொரி.
13:5). நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் (1 கொரி.
11:31) என்பதுதானே தேவ நியதி.
இதன்
அடிப்படையில், சில தற்பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உங்களை ஊக்கப்படுத்தவே இந்த மடலை
வரைகின்றேன். கீழ்காணும் அனைத்துபகுதிகளிலும் நம்மை சோதித்தறிய திறந்த வேத புத்தகமும்,
திறந்த மனதும் தேவை (open Bible and open mind). வேத வசனங்கள் நம்மை ஊடுருவும்கதிர்வீச்சைப்
போன்று செயலாற்ற விட்டுக்கொடுத்தால், ஆவிக்குரிய வாழ்வில் பலத்த மாறுதலையும் மறுரூபத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்; அதற்குரிய கிரியைகளை தேவன் தருவாராக. அவ்வப்போது இந்த பயிற்சியினை மேற்கொண்டால், தொடர் வெற்றியினையும் நாம் அடையலாம்.
நம்மை நாமே சோதிக்காவிடில், நம்முடைய உண்மையைச் சோதிக்க தேவன் சாத்தானுக்கு இடங்கொடுக்கலாம். “நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான். பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு" (வெளி. 2:10) என்பது சிமிர்னா சபைக்கு ஆவியானவர் தந்தஆலோசனை அல்லவா!
வசனத்தைக் காத்துக்கொண்ட பிலதெல்பியா சபையை, தேவன்சோதனைக்குத் தப்புவிக்க வாக்குக்கொடுக்கிறாரே! (வெளி. 3:10)
“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்"(கலா. 6:4) என்பது வேதம் தரும் ஆலோசனை.
இறுதிநாளில், நம்முடைய கிரியைகள் அல்லது ஊழியங்கள் சோதிக்கப்படுவது அக்கினியினாலேயே என்றும், அதுவே நம்முடைய பிரதிபலனை நிரூபிக்கும் என்றும் அறிகிறோமே (1 கொரி. 3:13). நாம் செய்தவை நிலைத்து நிற்கவேண்டுமே. தேவசித்தத்தினை சோதித்து அறிந்து செயல்பட்டால்தானே பரலோகத்தில் இடமுண்டு. (மத். 7:21; ரோமர் 12:2).
மற்றவர்கள் நம்மை சோதித்துப் பார்க்க, நாம் அனுமதி தரமுடியும் (தானி. 1:12);ஆயினும், நம்முடைய இருதயம் நம்மை குற்றப்படுத்துமானால், நம்முடைய ஜெபத்திற்கே விடை கிடைக்கமுடியாமல்போக நேரிடுமே (1 யோவா. 3:20-22). ஆகையினால்தான் எரேமியாவும், “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்" (புல. 3:40) என்று அறிவுரை கூறுகிறான். என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர் (எரே. 12:3; 11:20) என்பது இவனுடைய தெளிவு.
எனவேதான் சங்கீதக்காரன் தாவீதும், நான் சோதிக்கப்படும்போது, என்னைக் காட்டிலும் என்னை நன்றாக அறிந்த நீரே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் என்று தேவனுக்கு முன்பாக தன்னை திறந்த புத்தகமாகத் தருகிறான். (சங். 139:23) .
கர்த்தாவே என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும். என் உள்ளிந்திரியங்களையும், என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்(சங். 26:2) என்று நெருப்பிலிட்டு சோதிக்கவும் தன்னைத் தருகிறான்.
தேவன் நம்மை நெருப்பில்தான் சோதிக்கவேண்டியதில்லை (1 பேதுரு 4:12); ஆயினும், யோபு சொல்லுகிறான், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" என்று. (யோபு 23:10)
தற்பரிசோதனை செய்து, வேத வசன உரசும் கல்லில் நம்மையே சோதித்துப் பார்க்கக் கற்றுக்கொண்டால், வேதனைக்குத் தப்பி, நொறுக்கப்படுதல் அவசியமில்லாமல்போக வாய்ப்புண்டு.
நாம் சோதிக்கப்படவேண்டிய பகுதிகள் (areas) என்னவென்று பட்டியலிடுகிறேன் (தனியாக இதனை வைத்து, நம்மையே கேள்வி கேட்டால், அது நமக்கு உதவியாக இருக்கும்).
1. நாம் நம்முடைய அன்பிலே (Love) சோதிக்கப்படவேண்டும். (2 கொரி. 8:8)
2 நம்முடைய விசுவாசம் (Faith) சோதிக்கப்படலாம். (2 கொரி. 13:5)
3. நம்முடைய நினைவுகளை (Thoughts) சோதித்துப் பார்த்தால் நல்லது.
4.வேலை (Work)
5.பொறுமை (Patience)
6.நட்பு (Friendship)
7.உறவு (Relationship)
8.நம்பிக்கை (Hope)
9.நடத்தை (Conduct)
10. பரிசுத்தம் (Holiness)
11. கரிசனை (Concern)
12. தரிசனம் (Vision)
13. நோக்கம் (Intention)
14. வளர்ச்சி (Growth)
15. பெலன் (Strength)
16. ஞானம் (Wisdom)
17. அறிவு (Knowledge)
18. தேர்ச்சி (Maturity)
19. உண்மை (Integrity)
20. நேர்மை (Honesty)
21. எளிமை (Simplicity)
22 ஒப்புக்கொடுத்தல் (Commitment)
23. அர்ப்பணம் (Dedication)
24. முன்னுரிமை ( (Priority)
25. உபயோகம் (Usefulness)
26. அசட்டை (Slackness)
27. ஜாக்கிரதை (Carefulness)
28. சுத்தம் (Cleanliness)
29. அகசுத்தம் (Purity)
30. முன்னேற்றம் (Progress)
31. மற்றவர்களுக்கு உதவுதல் (Helping tendency)
32. மற்றவர்களுக்கான கவலை (caring for others)
33. மற்றவர்களை உயர்வாக எண்ணுதல் (Considering others better than ourselves)
34. செலவழிக்கும் தன்மை (Spending nature)
35. சொற்கள் (Words)
36. தியாகம் (Sacrifice)
37. ஆத்தும ஆதாயம் (Soul winning)
38. சுவிசேஷ பாரம் (Evangelistic fervour)
39. தேவராஜ்ய ஈடுபாடு (Kingdom concern)
40. பாரம் (Passion)
41. ஆண்டவரோடு உள்ள உறவு (Prayer life)
42. தன்னம்பிக்கை (Confidence)
43. இரண்டாம் மைல் அனுபவம் (Walking the second mile)
44. பிரதிக் கிரியை (Reactions)
45. தீர்மானம் எடுப்பதில் (Decision making)
46. தனக்கு கீழ்ப்பட்டோரை நடத்துதல் (Treating subordinates)
47. முதியவருக்கு மதிப்பு தருவதில் (Giving respect to elders)
48. சொத்து சேர்ப்பதில் (Gathering properties)
49. தேவனுக்கு தரும் நேரத்தில் (Time for the Lord)
50. நம்முடைய சரீரத்தை. ஆசை இச்சைகளை சிலுவையில் அறைவது (Crucifying our dreams and desires)
போன்றவைகள் அடிக்கடி போதிக்கப்படவேண்டியவை. எப்படி ஒரு மனிதனுக்கு Master checkup என்று சொல்லப்படுகின்ற, மருத்துவ சோதனை தேவைப்படும்போது, இரத்தம், சிறுநீர், மலம், இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு, எக்ஸ்ரே, MRI, CT Scan போன்றவைகளின் அறிக்கை (Report) தேவைப்படுகிறதோ, அதைப்போலவே மேற்கண்ட அனைத்து ஆவிக்குரிய அளவுகளும் சுயபரிசோதனைக்கு கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான், நாம் தேவையான ஆவிக்குரிய ஆகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும். குறைவுகளை சரியாக்க ஆவியானவருக்கு விட்டுக்கொடுக்கவும் ஏதுவாகும்.
சரீரத்திற்கான ஆகார முறைதனை மாற்றிக்கொள்வதுபோலவும், பயிற்சிகள் சிலவற்றை மேற்கொள்வதுபோலவும், ஆவிக்குரிய தேவைகளைக் கண்டறியும் நாம். அப்படிப்பட்ட வேத வசனங்களை தியானிப்பதும், அதற்கேற்ற ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொள்ளவும், புத்தகங்களைப் படிக்கவும் ஊக்குவிக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆவியானவரின் ஒத்தாசையோடு ஆவியில் நடக்க நம்மை ஏவிவிடும். ஏனெனில், ஆவியானவர் தாம்,
1. நம் பெலவீனங்களில் உதவுகிறார் (Helps) ரோம. 8:26
2 நம்மை சத்தியத்திற்குள் வழிநடத்துகிறார் (guides) (யோவா. 16:13)
3. நமக்குப் போதிக்கிறார் (Teaches) யோவா. 14:26
4. நம்மோடு பேசுகிறார் (Speaks) வெளி. 2:7
5. காரியங்களை வெளிப்படுத்துகிறார் (Reveals) 1 கொரி. 2:10
6. அறிவுறுத்துகிறார் (Instructs) அப். 8:29
7. இயேசுவைக் குறித்து சாட்சிகொடுப்பார் (Testifies Jesus) யோவா. 15:26
8. ஆறுதல் தருகிறார் (Comforts) அப். 9:31
9. அழைக்கிறார் (Calls) அப். 13:2
10. நிரப்புகிறார் (fills) அப். 4:31
11. நம்மை பலப்படுத்துகிறார் (Strengthens) எபே. 3:16
12. நமக்காக வேண்டுதல் செய்கிறார் (Prays for us) ரோம. 8:26
13. நம் மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் (Prophecies through us) வெளி, 22:17
14. உண்மைக்கு சாட்சி தருகிறார் (Bears witness to the truth) ரோம. 9:2
15. சந்தோஷம் தருகிறார் (Brings Joy) 1 தெச. 1:6
16. விடுதலை தருகிறார் (Brings freedom) 2 கொரி. 3:17
11. சத்தியத்திற்குக் கீழ்ப்படிய உதவுகிறார் (Helps to obey) 1 பேதுரு 1:22
18. இயேசுவை திரும்ப வரச்சொல்லுகிறார் (He calls for return of Jesus) வெளி. 22:17
19. மறுரூபமாக்குகிறார் (Transforms) 2 கொரி. 3:18
20. நம்மில் வாசம் செய்கிறார் (Lives in us) 1 கொரி. 3:16
21. மரண பிரமாணத்திற்கு விடுதலையாக்குகிறார் (He frees us) ரோம. 82
22. புதிதாக்குகிறார் (He renews us) தீத்து 3:5
23. கனிகளை உருவாக்குகிறார் (Produces fruits) கலா. 5:22,23
24. வரங்களைத் தருகிறார் (gives gifts) 1 கொரி. 12:8-10
25. வழி குழம்பும்போது நடத்துகிறார் (Leads us) ரோம. 8:14
25. கண்டித்து உணர்த்துகிறார் (Convicts us) யோவா. 16:8
27. பரிசுத்தமாக்குகிறார் (Sanctifies us) 2 தெச. 2:13
28. பலப்படுத்துகிறார் (Empowers us) அப். 1:8
29. இணைக்கிறார் (Unites us) எபே. 4:3,4
30. முத்திரை போடுகிறார் (He seals us) எபேசி. 1:13
31. பிதாவினிடத்தில் சேர்க்கிறார் (Gives access to the father) எபே. 2:18
32. காத்திருக்க பெலன் தருகிறார் (Enables us to wait) கலா. 5:5
33. பிசாசுகளை துரத்துகிறார் (Casts out demons) மத். 12:28
இதனைத்தான் தாவீது உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக என்கிறான் (சங். 143:10).
நம்மை நாமே சோதித்தாராய்வதின் மூலம், நம்மை ஆவியானவர் மேற்கொள்ள விட்டுக்கொடுப்போம். அவரில் நிறைந்து வாழ்வோம்; வெற்றிகளைக் குவிப்போம்.
இன்றைய ஆவிக்குரிய உலகில் தற்பரிசோதனை என்ற காரியம், ஆவியில் நிறைந்து துதித்துவிட்டால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதினால், பெலனற்ற, தோற்றுப்போன விசுவாசிகளையும், ஊழியர்களையுமே நாம் சந்திக்க நேரிடுகிறது.
ஆட்டம், பாட்டம், ஆர்ப்பரிப்பு அமைதியாக நம்மை ஆராய்ந்து அறிந்து,
அவருடைய பிரசன்னத்தில் ஆவியானவரால் ஆட்கொள்ளப்படுவதற்கு ஒருநாளும் நம்மை நடத்தாது. எனவே, ஏமாந்துபோகாமல், அவர் காட்டின பூர்வ வழிகளில் நம்மை நடத்த ஒப்புக்கொடுப்போம். அங்கேதான் வெற்றியும் இளைப்பாறுதலும் உண்டாகும். (எரே. 6:16) தங்களைக் கொண்டே தங்களை அளந்துகொள்ளுகிறவர்களுக்கும் (2கொரி. 10:12), புகழின் பெலத்தை, பணத்தின் பெலத்தை, தாலந்துகளின் பெலத்தினை, ஆட்களின் பெலத்தை (கூட்டத்தின்) நம்புகிறவர்களுக்கு, இவைகள் வேப்பங்காயைப் போலக் கசக்கும்.
அவர்கள், தண்ணீரற்ற மேகங்கள், அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகள், இவைகளின் முடிவு காரிருள் என்பதனை மறவாதிருப்போம் (யூதா 1:12,13). ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே. (மத். 7:14)
எதனைப் பின்பற்றுவது. எதனைச் செய்வது என்று ஜனங்கள் குழம்பும் நேரத்தில், வேதவசனமாம் தீபம் நம்மை நடத்திடட்டும். காரிருள் சூழும்போது, அதுவே நமக்கு நேச தீபம். குழம்பாமல், குழப்பாமல் வேதம் காட்டும் வழிநடப்போம். நேசர் வருகிறார் வேகம்.
ஆராய்ந்துபாரும் என்ற
உள்ளம்
திறந்தோர்
ஆண்டவருக்கு ஏற்ற
பாத்திரமாக
மாறுவார்
அவரின் வார்த்தையின்
வெளிச்சத்தில்
நடப்போர்
அன்பருக்கு பிரியமாவார்
சந்தேகமில்லை.
நம்மை நாமே
சோதித்திட்டால்
வெற்றி
உண்டு
நலமானவைகளைப் பற்றிக்கொண்டால்
சுகமே
உண்டு
நல் மேய்ப்பரின்
தோளில்
நான்
இருப்பதாலும்
நல் ஆவி
என்னை
நடத்துவதாலும்
அஞ்சிடேன்
என்றுமே
தியானிப்போம் அவரின்
வார்த்தைதனை
சீர்பொருந்தவே.
திருத்துவ தேவனின்
வழிநடத்துதல்
நீதி
செய்யவே
திருப்தியாக்கும் அவர்
வார்த்தை
நித்தம்
நம்மையே
தீர்த்துவைக்கும் வாழ்வின் திருக்குகளையே
நாம் உண்டாக்கும்
அக்கினி
அணைந்துபோகுமே.
நலமென்று எண்ணும்
வழியும்
மறைந்துபோகுமே
நானிலத்தோர் அனைவரும்
நலம்
பெற்றிட
நம்மைத் தர
ஏவுவதும்
இயக்குவிப்பதும்
அவர்
வார்த்தையே
இருள் சூழும்
காலமிது
இறுதி
நாட்களும்
இவைகளே.
இறுமாப்பாய் வாழாமல்
இயங்குவோம்
அவர்
பெலத்தினால்
இதுகாறும் நடந்த
பாதை
இன்னல்
செய்தாலும்
இனியாவது காண்போம்
பேரின்பம்
அவர்
செயலால்
அன்பரின் அறுவடைப் பணியில்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்