மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிய மேலாளர் ஒருவருக்கு, மண்டல மேலாளர் பதவி கிடைத்தது.
அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து ,தாம் வகித்த பதவியை அவருக்குக் கொடுக்கும்படி நிர்வாகும் கட்டளையிட்டதுடன் , ஒரு திறமையான இளைஞனையும் அவரிடம் ஒப்படைத்தது .
இளைஞன் நல்ல கூர்மையான அறிவுடையவன் என்பதால் அலுவலக விஷயங்களை மிக எளிதில் கற்றுக் கொண்டான். இப்போது புதிய வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்குவது என்று கற்பிக்க மேலாளர் அவனை காரில் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.
மிகுந்த அனுபவமும் , திறமையும் மிகுந்த ஒருவருடன் செல்வதால் இளைஞனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றான். மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதிக்குக் கார் சென்றது.
அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபரை சந்திக்க ஏற்கனவே அவர்கள் அனுமதி பெற்றிருந்தனர். அவர் வீட்டுக்கு முன்பாக இன்னொரு பெரிய பங்களாவும் இருந்தது . அவர்கள் அந்தத் தெருவுக்குள் நுழையும்போது அந்த வீட்டின் உரிமையாளரின் கார் அப்போதுதான் உள்ளே நுழைவதைப் பார்த்தனர்.
மேலாளருக்கு ஒரு யோசனை தோன்றியது. அனுமதியளித்திருந்த தொழிலதிபரை சந்திக்க இன்னும் முப்பது நிமிஷம் மீதமிருந்தது. அதற்குள் முன்பாக இருந்த வீட்டுக்காரரையும் பார்த்து விட்டால் , அவர்கள் சந்தைப் படுத்தும் வீட்டு உபயோகப் பொருள் குறித்து அவரிடம் கூறி ஒரு புதிய ஆர்டரை பிடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கலாம். முப்பது லட்சம் ரூபாய்க் காரை வைத்திருப்பவர் கண்டிப்பாகப் பெரிய கோடீஸ்வரராகத்தான் இருக்கும் . மார்க்கெட்டிங்கைப் பொறுத்த வரை, வந்த இடத்தில் எத்தனை பேரைப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியுமோ அத்தனையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயத்தில் , திட்டமிட்டு வந்த காரியம் வாய்க்காமல் போனாலும், திடீரென்று கிடைக்கும் சந்திப்பு பெரிய ஆர்டர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மேலாளர் தம்முடைய யோசனையைப் பயிற்சிக்கு வந்திருந்த இளைஞனிடம் சொன்னார். அவனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது . அடுத்த நிமிடம் கார் அந்த வீட்டின் வாசலில் நின்றது.
கேட் வழியாகக் கையை விட்டு அழைப்பு மணியைத் தேடிப்பார்த்தார்கள். கிடைக்கவில்லை . ஆனால் அவர்கள் கை பட்டவுடனேயே கேட் திறந்து கொண்டது. நேராக உள்ளே போய்க் கதவைத் தட்ட முடிவு செய்து உள்ளே பிரவேசித்தனர்.
இரண்டிதான் நடந்திருப்பார்கள். அதற்குள் ஈரல் குலையே வெடித்து விடுவது போல் பயங்கரமான ஒரு நாயின் குரைப்பு சத்தம். அப்போதுதான் இருவருமே கவனித்தார்கள். கன்றுக்குட்டி போலக் கொழுத்த ஒரு நாய் , வீட்டு வாசலை யாரும் நெருங்கி விடாதபடிக் கட்டப்பட்டிருந்தது. இவர்களைப் பாத்ததும் , கட்டிக் கிடந்த சங்கிலியையே அறுத்து விடுவதுபோலத் திமிறிக்கொண்டு குரைத்தது.
நாய் திமிறிய திமிறலைப் பார்க்கும்போது அது நிச்சயமாக சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவந்து அவர்களைக் குதறி எடுத்து விடுமென்று தோன்றியது. வேகமாகப் பின் வாங்கினார்கள். மேலாளர் தமது விசிட்டிங் கார்டை எடுத்து “தங்களைப் பார்க்க வந்தோம். இயலவில்லை” என்று எழுதி வாசலில் இருந்த கடிதப் பெட்டியில் இட்டார். இளைஞனின் முகம் வாடிப் போய்விட்டது . வீட்டுக்கு வருகின்றவர்களை அவமானப்படுத்துவதற்காகவே அந்த வீட்டுக்காரர் நாய் வளர்க்கிறாரோ என்ற எண்ணம் அவனுக்குள் வந்துவிட்டது.
உதவியாளனின் எண்ண ஓட்டம், மேலாளருக்கு நன்றாகவே புரிந்தது. அவன் தோளின் மீது கைபோட்டு , " வா. நாம் நமக்கு சந்திக்க அனுமதியளித்தவரைக் காணலாம்" என்று அழைத்துச் சென்றார்.
சந்திப்பு நன்றாகவே முடிந்தது. பெரிய தொகைக்கு ஆர்டரும் கொடுப்பதாக அவர் வாக்குறுதியளித்தார். இருவரும் காரில் வந்து அமர்ந்தனர். இத்தனை சந்தோஷமான விஷயம் நடந்தும்கூட உதவியாளன் முகத்தில் அவமானம் இன்னும் தெரிந்தது.
"இத்தனை பெரிய உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தும் கூட இப்படி அவமானப்பட வேண்டி இருக்கிறதே ஐயா! " என்று சொல்லி வேதனைப் பட்டான். காரை செலுத்தியபடியே மேலாளர் சொன்னார் ,
“தம்பி, நம்மை விரட்டியடித்தது அந்த வீட்டின் நாய்தானே தவிர வீட்டுக்காரர் அல்ல. நம்மையும் , நம்முடைய நிறுவனத்தையும் பற்றி அதற்கென்ன தெரியும் ? மேலும் , இது போன்ற பல அவமானங்களைக் கடந்துதான் இந்த உயர்வு எனக்குக் கிடைத்தது. வீணாகக் குழப்பிக் கொள்ளாதே ” என்றார் .
அப்போது மேலாளரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது . புதிய நபர் ஒருவர் பேசினார்.
“மன்னியுங்கள் ஐயா. என் வீட்டின் கடிதப் பெட்டியில் நீங்கள் வந்து போனதன் அடையாளமாக உங்களின் முகவரி அட்டையைக் கண்டேன். நான் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் திருமண மண்டபத்திற்கு மின்விசிறிகள் மற்றும் பொருட்கள் வாங்க உங்கள் நிறுவனத்தில்தான் தொடர்பு கொள்ள நினைத்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக நீங்களே வந்துவிட்டீர்கள். ஏதோ அவசரத்தில் நாயைப் பாதையில் கட்டிவிட்டேன் . மன்னித்துக் கொள்ளுங்கள். உடனே திரும்பி வாருங்கள்”.
மேலாளருக்கு வந்த அழைப்பு ஓரளவுக்கு உதவியாளன் காதிலும் விழுந்தது. இப்போது அவன் முகத்தில் தெளிவு தெரிந்தது. மேலாளர் சொன்னார், "பார். இதுதான் உன் நிறுவனத்திற்கு ஒரு பெரிய மனிதர் கொடுக்கும் மரியாதை . அந்த மரியாதையை ஒரு மிருக ஜீவனிடம் எதிர்பார்த்தால் நஷ்டம் நமக்குத்தான். ”
செல்லமே ! சில நேரங்களில் நாம் யாராவது புதிய நபரிடம் சுவிசேஷம் சொல்ல முயலும் போது அவர்களிடம் இருக்கிற பாவப் பழக்கங்களும் , பாரம்பரிய நம்பிக்கைகளும் மூர்க்கத் தனமாய் மிருகத்தைப் போல் பாய்ந்து நம்மைத் துரத்தி அடிப்பதுண்டு. ஆனாலும் நீங்கள் அவரைப் பற்றி சொன்னதின் நிமித்தமாக அவர்களின் உள்ளான மனிதன் கர்த்தரின் மேல் தாகமாக இருந்து ஒரு நாள் கர்த்தரிடம் திரும்பலாம். அவமானத்தை எண்ணாமல் விதைத்தபடியே சென்று கொண்டிரு. நீ அவமானப்பட்ட இடத்தில் கர்த்தர் உன்னை உயர்த்துவார். மிருகங்கள் அடங்கும். ஆத்துமாக்கள் தேடி வரும்.
” ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு ” எபேசியர் 6 :12
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்