கிறிஸ்தவ வெற்றி வாழ்வுக்குத்
தரிசனமும் தாகமும் இன்றியமையாத இரண்டு.
கொடுமை குடியிருக்கும் குடியிருப்புகளின் நடுவில்
கிறிஸ்துவின் சிலுவையை நாட்டுவதற்காக
மலையென உயர்ந்து கடலெனப் பரந்திருக்கும்
மனித, மாம்ச விமர்சனத்தையும்,
நெருப்பு மலையளவான பிசாசின் எதிர்ப்பையும் எதிர்த்து
தேவ மனிதர் போராடுவது ஏன்?
அவர்கள் கண்ட தரிசனம் ; கொண்டது தாகம் !
இம்மையில் எப்பயனுமில்லாத அளவுக்கு மறுமையின் சிந்தையில் மயங்கிவிட்டோம் என்று
எவராவது நம்மை எச்சரிக்கிறார்களா? சகோதரனே, இந்தத் தலைமுறை விசுவாசிகளைப் பொறுத்தவரை
இப்பிரச்சனையே கிடையாது. ஆனால், மறுமைக்கு எப்பயனுமில்லாத அளவுக்கு இம்மையின் சிந்தையில்
மூழ்கிவிட்டோம் என்பதே நம்மைப்பற்றிய உலுக்கும் உண்மை !
நண்பா, உன் சொந்தத்தொழிலில் நீ ஊக்கம் காட்டுவதைப்போல் ஆவிக்குரிய காரியத்திலும்
காணப்பட்டால் பிசாசுக்கு நீ ஒரு பிரச்சனையாக இருப்பாய். ஆனால் இப்போது ஆவிக்குரிய காரியங்களில்
நீ மந்தமாயிருப்பது போல் உன் தொழிலிலும் இருந்தால் பிச்சை எடுக்க வேண்டியநிலை வந்துவிடும்.
பொறுப்புப்பணியற்ற
தரிசனம்
வெறும் கற்பனையாளனை
உருவாக்கும்;
தரிசனமற்ற பணி
மிருக வேலையாகும்;
பொறுப்புப்பணியும்
தரிசனமும் இணையப்பெற்றவனே
ஒரு மிஷனரியாவான்.
நல்லதொரு கூற்று !. உசியா “மரணமடைந்தபோதுதான்” ஏசாயாவுக்குத் தரிசனம் கிடைத்தது.
ஒருவேளை கர்த்தருடைய முழு தரிசனத்தைக் காணக்கூடாதவாறு உனக்குத் தடையாக உன் வாழ்க்கையில்
எவராவது இருக்கலாம். ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அதிக கிரையம் செலுத்தவேண்டும். சில
சமயங்களில் வதைக்கப்படுமளவுக்குத் துன்பம் சகிக்க வேண்டியதாயிருக்கும். ஒருவேளை உன்
நண்பரையும் அல்லது வேலையையும் இழக்க வேண்டியதாயிருந்தாலும் தேவனுடைய முழு தரிசனத்தையும்
பெற்றுக்கொள்ள நீ எதையும் தியாகம் செய்ய ஆயத்தமா? ஆவிக்குரிய புரட்சிக்கு விலையில்
“தள்ளுபடி” கிடையாது. இரட்சிக்கப்படுவதும், பரிசுத்தமாக்கப்படுவதும், திருப்தியடைவதும்
மட்டுமே உனது ஆவலாய் இருக்குமாயின் தேவனின் யுத்தக் களத்திற்கு நீ தேவையில்லை.
ஏசாயா பெற்றது முப்பரிமாண தரிசனம் (ஏசாயா 6: 1 முதல் 9 வரை)
வசனம் 5 : “ஐயோ“ – கதறுதல்
வசனம் 7 : “இதோ” – கழுவப்படுதல்
வசனம் 9 : “போ” - கட்டளை பெறுதல்
அது மேல்நோக்கிய தரிசனம் ......................... அவன் ஆண்டவரைக் கண்டான்:
அது உள்நோக்கிய தரிசனம் ......................... அவன் தன்னையே கண்டான்:
அது வெளிநோக்கிய தரிசனம் .........................அவன் உலகைக் கண்டான்.
அது உயரத்தின் தரிசனம் .........................அவன் ஆண்டவரை உயரமும் உன்னதமான
இடத்தில் கண்டான்:
அது ஆழத்தின் தரிசனம்.........................அவன் தன் சொந்த இருதயத்தின் இடுக்குகளைக்
கண்டான்:
அது அகலத்தின் தரிசனம் .........................அவன் உலகைக் கண்டான்.
அது பரிசுத்தத்தின் தரிசனம்.........................தேவனைச் சகல பரிசுத்தத்திலும்
காணும் தரிசனம்
அது பாதாளம் பற்றிய தரிசனம்……………………அதமானேன்”… அசுத்த உதடுகளுள்ள மனுஷன்.”
அது பரிதாபத்தின் தரிசனம் …………………………..யார் நமது காரியமாய்ப் போவான் ? “என்ற
பரிதாபக் கதறல்.
ஜெபத்தைக் காட்டிலும் பதவி உயர்வையும், பரிசுத்தத்தைக் காட்டிலும் போட்டி மனப்பான்மையையும்,
பறைசாற்றுவதைக் காட்டிலும் பெருமையடித்துக் கொள்வதையையும் , திறம்படச் செய்துவரும்
இன்றையச் சபைக்கு, இந்த முப்பரிமாணத் தரிசனம் அத்தியாவசியம்.
தரிசனமில்லையேல்
சமுதாயம் சீர்கெட்டுப் போகும்:
தாகமில்லையேல்
சபை சீர்கெட்டுப் போகும் – ஆலயம் நிரம்பி வழிந்தாலும்!
உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும்
கிறிஸ்து மரித்தார்.
ஆனால் ஒவ்வொருவருக்கும்
இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை.
உலகில் தினமும்
1,22,000 பேர் கிறிஸ்து இல்லாமல் மரிக்கின்றனர்.
இதைப்பற்றி உங்களுக்குக்
கவலையில்லையா?
பாவம் நிறைந்த இச்சூழல் பிரசங்க பீடத்தில் அனலையும் சபையினர் நடுவே அசைவையும்
கூவி அழைக்கிறது. செயற்கை மதம் மடியட்டும். ஆமேன் போடும் உற்சாகம் என்றோ செத்துவிட்டது.
ஆவிக்குரிய முகாம்களில் மகிமையும் மறைந்துவிட்டது; தெருப் பிரசங்க ஊக்கம் உலர்ந்துவிட்டது.
யாருக்குத் தெரியும், ஒருவேளை தேவன் இல்லையென்போரின் மேல் உக்கிரங் கொண்டிருப்பதைக்
காட்டிலும் அதிகமாக இன்றையக் கிறிஸ்தவத்தின் மேல் தேவன் உக்கிரங்கொண்டிருக்கலாம். அதிர்ச்சியாயிருக்கிறதா?
தேவனை மறுதலிக்கும் ரஷ்யாவில் இலட்சங்கள் ஒருபோதும் சுவிசேஷத்தைக் கேட்டதில்லை; அவர்களுக்குப்
பெரும்பாலும் வேதப்புத்தகம் கிடையாது; நற்செய்தி ஒலிபரப்பை அவர்கள் ஒருபோதும் கேட்டதில்லை;
சிந்தித்துப் பாருங்கள்! ஆலயத்தில் செல்ல முடிந்தால் நிச்சயம் அவர்கள் செல்லுவார்களே.
நரகத்தின் அகோர தரிசனத்தை பாவிகள் காணவேண்டுமென்று மீண்டும் மீண்டும் நாம் ஜெபிப்பது
முற்றிலும் தவறு. மாறாக, பாவிக்குத் தேவையானது கல்வாரித் தரிசனமே. பாடுபடும் இரட்சகர்
கனிவுடன் அவனை மனந்திரும்ப அழைக்கும் தரிசனமே அவனுக்குத் தேவை. கல்வாரிக்குப் பிறகு
அவன் ஏன் அழியவேண்டும்? 24 மணி நேரம் நரகத்திற்கு மேல் தொங்கிக் கொண்டு அதன் நித்திய
வேதனையைக் காணுவதற்குத் தன் சேனை வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்க முடியுமானால், தான்
நிச்சயம் அவ்விதப் பயிற்சி கொடுத்தே தீருவேன் என்று இரட்சண்ய சேனையின் வில்லியம் பூத்
கூறுவாராம். அடிப்படைச் சத்தியங்களைப் பிரங்கிக்கும் சபைகளுக்கும், ஏன் புயலெனப் பிரமாதமாகப்
பேசும் சுவிசேஷகருக்கும், இத்தரிசனம் இன்று தேவை !
இங்கிலாந்து நாட்டில் குற்றவாளி ஒருவனை மரண தண்டனை நிறைவேற்ற நடத்திச் செல்லும்போது,
சிறைச்சாலைப் பாதிரியார் வழக்கம்போல உணர்ச்சியின்றி சில வேத வசனங்களை வாசித்துக் கொண்டே
சென்றாராம். குற்றவாளி அப்பாதிரியாரை நிறுத்தி, “நீர் வாசிப்பது என்ன?” என்று கேட்க,
“நான் தேவனுடைய இரட்சிப்பின் பாவ மன்னிப்பின் ஆறுதல் வார்த்தைகளை வேதத்திலிருந்து வாசிக்கிறேன்”
என்று அவர் பதிலுரைத்தார். பாதாளத்தின் பயங்கரத்தையும், இரட்சகரின் அன்பையும் ஒருவன்
உண்மையாய் விசுவாசித்தால் இவ்விதம் செத்தவனைப் போல வாசிக்கமுடியுமா என்று அக்குற்றவாளிக்கு
எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. இவ்விதமாகப் பாதிரியாருக்குப் பிரசங்கிக்கத் துவங்கினான்:
“ஐயா, நீரும் கிறிஸ்தவ சபையும் விசுவாசித்திருந்தால், அப்படிப்பட்ட நித்திய நரகத்திலிருந்து
ஓர் ஆத்துமாவைக் காப்பாற்றுவதற்காக, இங்கிலாந்து நாடு முழுவதும் உடைத்த கண்ணாடித் துண்டுகளால்
பரப்பப்பட்டிருந்தாலும், நான் அதன் மீது நடந்து சென்று இதை ஒவ்வொருவருக்கும் சொல்லியே
தீருவேன். இதைவிட மேலானதொன்றில்லையே.”
இதை வாசிக்கும் நண்பரே,
பரிசுத்த ஆவியின்
அக்கினியை
சபை இழந்து விட்டதினால்தான்,
மனிதர் பாதாள
அக்கினிக்குச் செல்லுகின்றர்!
பரிசுத்த தேவனைப்பற்றி ஒரு தரிசனம் நமக்குத்
தேவை. தேவனுடைய முதற்குணாதிசயம், பரிசுத்தமே. கேரூபீன்களும் சேராபீன்களும். தேவன் சர்வவல்லவர்,
சர்வவல்லவர் என்றோ அல்லது தேவன் சர்வ வியாபகர், சர்வ ஞானம் படைத்தவர் என்றோ போற்றாமல்,
“பரிசுத்தர், பரிசுத்தர் !” என்றே போற்றினர். இந்தப் பரந்த எபிரெய அறிவு நம் ஆத்துமாக்களை
மீண்டும் ஊடுருவ வேண்டியது அவசியம். நாம் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அதிகாலையின்
செட்டைகளை எடுத்துப் பறந்தாலும் அவர் அங்கேயுமிருக்கிறார். அவரிடமிருந்து யாரும் தப்பித்துக்கொள்ள
முடியாது. அவர் நமக்காக நித்தியத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் ‘இங்கு’ அவருடன்
ஒப்புரவாகி ‘இப்போது’ அவரது சித்தத்தின் மையத்தில் இருந்தால் நலமாயிருக்கும்.
தினமும் வேலைக்காக செல்லுமுன் நாம் பரிசுத்தமானவருக்கு முன் , நடுக்கத்துடன்
காத்திருப்பது ஆத்துமாவிற்கு ‘டானிக்’ போன்றது.
விண்ணவருக்குப் பயப்படுகிறவன் மண்ணவருக்குப் பயப்படான். தேவனுக்கு முன் முழங்காலிடுகிறவன்
எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிற்பான்.
பரிசுத்தமானவரின் அனுதின தரிசனம் அவரது, சர்வ வியாபத் தன்மையினால் நமக்கு அடக்கத்தையும்,
அவரது சர்வ வல்லமையினால் நமக்கு அதிர்ச்சியையும், அவரது சர்வ ஞானத்தினால் நமக்கு அமைதியையும்,
அவரது பரிசுத்தத்தினால் நமக்குப் பரிசுத்தத்தையும் அளிக்கும். அவருடைய பரிசுத்தமே நம்முடைய
பரிசுத்தமாகிவிடும்.
பரிசுத்தத்தைப்
பிரங்கித்தும், பரிசுத்தமாக வாழாததே,
இன்றைய அழிவுக்குக்
காரணம்.
‘பரிசுத்தமான
ஊழியன் பரிசுத்தரின் கரங்களில் பயங்கரமான ஓர் ஆயுதம்’
என்று இராபர்ட் முர்ரே மச்செயின் என்ற தேவமனிதன் கூறினார்.
ஆறாம் அத்தியாய அனுபவங்களுக்கு முன்பு ஏசாயா அநேக மக்களுக்கு அநேக “ஐயோ” க்கள்
கூறினான். இப்போதோ அவன் தன்னைத்தானே பார்க்கிறான். “ஐயோ, (நான்) அதமானேன் !” “ஆ ! கர்த்தாவே,
எனக்குத்தான் ஜெயம் வேண்டும்” என்று கதறுகிறேன். எவ்வளவு உண்மை! அசுத்தமான படங்கள்
தொங்கும் அறைகள் உள்ளத்தில் உண்டா? நமது இருதயத்தின்
அலமாரிகளில் நாம் எலும்புக் கூடுகளை வைத்திருக்கிறோமா? நம்முடைய கரத்தைப்பிடித்து நம்முடைய
ஆத்துமாவின் தாழ்வாரங்கள் எங்கும் நம்மை அழைத்துச் செல்லுமாறு பரிசுத்த ஆவியானவரை நாம்
அழைக்க முடியுமா? நம்முடைய ஆத்துமாவை ஆளுகை செய்யும் இரகசிய ஊற்றுகளும், இரகசிய எண்ணங்களும்,
தீட்டான காரியங்கள் நிரம்பிய இரகசிய அறைகளும் நம்மிடம் இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் மூவர் வாழ்கின்றனர் –
ஒருவர் நாம் யாரென்று நம்மால் கருதப்படுபவர், அடுத்தவர் நாம் யாரென்று பிறரால் கருதப்படுபவர்,
மூன்றாவது நபர் நாம் யாரென்று தேவனால் அறியப்படுபவர்.
உண்மையான வெற்றியைப்பெற வேண்டுமென உறுதிகொண்டாலொழிய நம்மிடம் இலகுவாகவும், பிறரிடம்
இரக்கமாகவுமே இருப்போம். சுயம் சுயத்தை நேசிக்கும், நம்மைப் பற்றிய காட்சி நம்மை வருத்தக்கூடாது
என்பதற்காக நாம் நம்மை நமக்கே மறைத்துக் கொள்கிறோம். நம்மிடம் உள்ள இந்த கெட்டுப்போன,
கறைபடிந்த, துர்நாற்றம் நிறைந்த சுயத்தை தேவனுடைய ஆராயும் கண்கள் கண்டுபிடிக்குமாறு
அவரை அழைப்போம். அது நம்மிடத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, “இனி பாவத்துக்கு
ஊழியம் செய்யாதபடி அவரோடேகூட சிலுவையில்” அறையப்படட்டும். (ரோ 6:6) “
பாவத்திற்கு மறு பெயர் கொடுப்பதில் பயனில்லை.“ அவனுடையது பிசாசின் முரட்டுக்குணம்;
என்னுடையது நியாயமான கோபம்! அவன் தொட்டால் சிணுங்கி. என்னுடைய எரிச்சலோ நரம்புத் தளர்ச்சியினால்தான்!
அவன் பேராசைக்காரன்; நானோ என் தொழிலை அபிவிருத்தி செய்கிறேன்! அவனுக்கு இருப்பது பிடிவாத
குணம்; என்னுடையதோ மன உறுதி! அவன் பெருமைக்காரன். நானோ உயரிய விருப்பங்களுள்ளவன்! இவ்விதம்
பூசிமெழுகுவதில் பயன் ஏதும் இல்லை.
நாம் பரிசுத்த ஆவியானவரிடம் அவருடைய பிழையற்ற ஆழ்ந்த பரிசோதனைக்கு நம்மை ஒப்படைப்போமானால்,
அவர் நம்மை எளிதில் விடவும் மாட்டார்; ஏமாற்றிவிடவும் மாட்டார். இயேசு குருடனை நோக்கி,
“நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்றார். அதற்கு அந்த குருடன்
“ஆண்டவரே, நான் பார்வை அடைய வேண்டும்” என்றான் (மாற் 10:51).
நாமும் கூட பார்வை அடைய – மேல் நோக்கிய, உள்நோக்கிய, வெளிநோக்கிய பார்வை அடைய
ஜெபிப்போம். அப்போது ஏசாயாவைப்போல் நாம் மேல்நோக்கி பார்க்கும்போது தேவனை அவருடைய சகல
பரிசுத்தத்தோடும் காணுவோம்; உள்நோக்கி பார்க்கும்போது நமக்குச் சுத்திகரிப்பும் வல்லமையும்
தேவை என்பதைக் காணுவோம்; வெளிநோக்கிப் பார்க்கும்போது அழிந்துகொண்டிருக்கும் உலகத்தையும்
அதற்கு இரட்சகர் தேவை என்பதையும் காணுவோம்.
“தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை
அறிந்துகொள்ளும்; என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்; வேதனை உண்டாக்கும்
வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்”(சங்
139:23,24).
அப்பொழுது
தான் பிரசங்க பீடத்தில் அனலும் சபை நடுவே அசைவும் காணப்படும்.


0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்