" தனது ஜெப வாழ்க்கையைவிடப் பெரியவன் எவனுமல்லை .
விண்ணப்பம் செய்யாத போதகர் விளையாடுகிறார் ;
மன்றாடாத சபை மக்கள் மடிகின்றனர்.
பிரசங்க தாலந்துகளைப் பெருமையாகக் காட்டலாம் ;
ஆனால் ஜெப அறையில் அதற்கு வழியே இல்லை .
வறுமையில் வாடும் இன்றையச் சபையின்
மிகப்பெரிய வறுமை ஜெபத்தில்தான் . "
'நம்மிடையே ஒழுங்குபடுத்துவோர் பலர், ஓலமிடுவோரோ சிலர் விளையாடுவோரும் வீதம் தருவோரும் பலர், ஆனால் விண்ணப்பிப்போரோ
சிலர் பாடுவோர் பலர், நாடுவோரோ சிலர் ; போதகர்
பலர், போராடுவோர் சிலர்.
அச்சம் அதிகம், அழுகை அபூர்வம் ; ஆடம்பரம் அதிகம், ஆத்தும தாகம் கொஞ்சம்;
கெடுப்போர் பலர், கெஞ்சுவோர் சிலர் ; எழுதுவோர் பலர், எதிர்ப்போர் சிலர்.
இங்கு தவறுவதாலேயே நாம் எங்கும் தவறுகிறோம்.
கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கைக்கு முதல் தேவை தரிசனமும் தாகமும் . இவையிரண்டும் பிறப்பதும்
வளர்வதும் ஜெபத்தினாலேயே. பிரசங்க ஊழியம் ஒரு சிலருக்கே; ஊழியங்களிலெல்லாம் பிரதானமான
ஜெப ஊழியமோ யாவருக்குமுரியது. ஆவியில் வளர்ந்துவிட்டோம் என நினைப்பவர்கள் : நான் இன்றிரவு
ஆலயத்திற்குப் போகமாட்டேன், இன்று ஜெபக்கூட்டம்தான் என்று சொல்லுகிறார்கள் !
அநேகப் பிரசங்கங்களுக்கு சாத்தான் அவ்வளாக அஞ்சுவதில்லை. ஆனால் அவனது கடந்த
கால அனுபவங்கள் தனது பாதாளச் சேனைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஜெபிக்கும் தேவ மக்களை
எதிர்த்து போராடச் செய்துவிடுகின்றன .
“நீங்கள் எதைக் கட்டுவீர்களோ.”
என்ற பரம சிலாக்கியம்
நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தும்
கட்டுவது கட்டவிழ்பது
என்பதைப்பற்றி
நவீனக் கிறிஸ்தவர்களுக்கு
ஒன்றுமே தெரியாது .
சமீபத்தில் நீங்கள் இவற்றில் எதையேனும் செய்திருக்கிறீர்களா? தேவன் தம் வல்லமையை
வீணாக்குகிறவர் அல்ல. நாம் தேவனுக்காக அதிகம் செய்யவேண்டுமானால், தேவனோடு அதிக நேரம்
செலவழிக்க வேண்டும்.
நமது மின்னல் வேக விமானங்களைக்கூட ஆமையைப்போலத் தோன்றச் செய்யும் அளவு வேகத்துடன்
இன்று உலகம் பாதாளப் பாதையில் பாய்கிறது. ஆயினும் அந்தோ! உலகை உலுக்கும் உயிர்மீட்சி
உண்டாக கடைசியாக நாம் செய்த இராவிழிப்பு ஜெபம் எப்போது என்று நம்மில் அநேகருக்கு நினைவில்லை. நமது உருக்கம் இன்னும் உலுக்கப்படவில்லை. கட்டிடம் கட்டுமுன் போடும் சாரத்தையே நாம்
கட்டிடம் என்று கருதிவிடுகிறோம். தெய்வீக உண்மைகளைத் தெளிவின்றி எடுத்துக்கூறும் இன்றையப்
பிரசங்கங்கள் தேவ பலத்திற்குப் பதிலாக மனித பலத்தையும், புது சிருஷ்டிக்குப் பதிலாக
வெறும் கிளர்ச்சியையும், எழுப்புதலுக்குப் பதிலாக இரைச்சலையும் தவறாகக் கருதும்படிச்
செய்துவிடுகின்றன .
" ஜெபத்தின் இரகசியம் இரகசியமாக ஜெபிப்பதே .
பாவம் செய்யும் மனிதன்
ஜெபிப்பதை நிறுத்துவான் ;
ஜெபிக்கும் மனிதன்
பாவம்செய்வதை நிறுத்துவான். "
நாம் பிச்சைக்காரராகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆகிவிட்டோம். ஆனால் உள்ளமோ இன்னும்
உடையவில்லை; உணரக்கூட இல்லை.
ஜெபம் ஆழ்ந்த எளிமையானது ; எளிமையாக ஆழ்ந்தது. ஜெபம் பாலகர் உதடும் பேசக்கூடிய எளிய பேச்சு.
ஆனால் அது மேன்மையில் மனிதனின் சொல்லகராதித் திறனையும் மிஞ்சுவது. அருவிபோல வார்த்தைகளைக் கொட்டிவிட்டால், அதை தேவன் கேட்டுவிட்டார் என்றோ, அவரை அசைத்துவிட்டோம் என்றோ எண்ணிவிடக் கூடாது.
பழைய ஏற்பாட்டு ஜெபவீரர் பட்டியலிலுள்ள, அன்னாளின் “உதடுகள் மாத்திரம் அசைந்தன, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை.”
இங்கு மொழிப்புலமையில்லை! இவைகளே “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள் !”
சரித்திர சாட்சி பெற்ற நமது பிதாக்களின் விசுவாசத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை; ஆனால் நமது சகாக்களின் சத்துவமற்ற விசுவாசத்தையோ நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது .
புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவத் தரத்திலிருந்து நாம் இறங்கிவிட்டோம் . வியாபாரிக்கு மூலதனம் எப்படியோ அப்படியே விசுவாசிக்கு ஜெபமும்.
இன்றைய சபையமைப்பில் அதிகமாகக் கவலைபடுவது, பணத்திற்காகவே என்பதை எவரேனும் மறுக்க முடியுமோ? எனினும் இன்றையச் சபையை இவ்வளவு அலைக்கழிக்கும் இக்காரியம், புதிய ஏற்பாட்டு ஆதிச்சபையைச் சற்றும் பாதிக்கவில்லை.
நாம் பணத்தையே முக்கியப்படுத்துகிறோம்; அவர்களோ ஜெபத்தையே முக்கியப்படுத்தினார்கள் .
நாம் பணம் கொடுத்து இடம் வாங்குகிறோம்; அவர்களோ ஜெபித்தே அசைத்தார்கள் .
" நரகத்தை நடுங்கச் செய்யும் , உலகத்தை உடைக்கும் ,
ஆவிக்குள்ளான புதிய ஏற்பாட்டு ஜெபம்
இன்று போல் என்றுமே பலரால் ஒரு சிலரிடம் மட்டும் விட்டுவிடப்பட்டதில்லை .
இவ்வித ஜெபத்திற்குப் பதிலானது எதுவுமில்லை .
மன்றாடுவோம் அல்லது மடிவோம். "
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்