எச்சரிக்கை மணி
ஒரு எலிக் கூட்டம் உணவு தேடிப் புறப்பட்டது. அவற்றின் தலைவன் ஒவ்வொரு இடமாக மோப்பம் பிடித்தபடி அவற்றை வழி நடத்திச் சென்றது. வழியில் ஒரு வீட்டின் அறை ஒன்றிலிருந்து அருமையான பலகார வாசனை அதன் கவனத்தை இழுத்தது. தன் கூட்டத்தாருடன் கவனமாய் உள்ளே சென்றது.
ஆஹா ! அங்கே ஒரு மூடப்படாத பெரிய ஜாடிக்குள் நெய்யில் சுட்ட அதிரசங்கள் இருந்தன.“இன்னிக்கு நல்ல வேட்டைதான் “. உற்சாகமாய் ஜாடிக்குள் குதிக்கும் போது தலைவன் எலி சொன்னது ,“நண்பர்களே ! இது புதிய இடம் . எங்கிருந்து என்ன ஆபத்து வருமென்பது நமக்குத் தெரியாது. எனவே உங்கள் பசிக்குத் தேவையானதை மாத்திரம் சாப்பிட்டு விட்டு உடனடியாய் இங்கிருந்து சென்று விடும் வழியைப் பாருங்கள்". தலைவன் சொன்னதுடன் நிற்காமல், அவசரமாகக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு ஜாடிக்கு வெளியே வந்து காவலுக்கு நின்றது. ஆனால் மற்ற எலிகளோ தலைவன் சொன்னதை மறந்து நெய் அதிரசங்களை ஒரு கை பார்க்கத் தொடங்கின.
தலைவன் சொன்னது ,“நண்பர்களே ! தூரத்தில் மனித வாடை தெரிகிறது. உடனே கிளம்புங்கள்”.ஜாடிக்குள்ளிருந்து ,” இதோ தலைவா! ” பதில் மட்டும் வந்தது. எலிகள் வரவில்லை. மீண்டும் தலைவன் சொன்னது ,” நண்பர்களே ! மனிதக் காலடி ஓசைகள் நெருங்கி வருகின்றன. உடனே வெளியே வாருங்கள் ” .இம்முறை அதிரசத்தின் சுவையில் மெய்மறந்து போயிருந்த எலிகள் ,“ம்… ம்… ” என்று மட்டும் சொல்லிவிட்டு இன்னும் வயிறு முட்ட அதிரசத்தைத் தின்றன.
இப்போது தலைவன் கத்தியது ,“முட்டாள்களே ! இதோ ஒரு மனிதன் உள்ளே வந்து விட்டான் . இனி நான் இங்கிருந்தால் என்னைக் கொன்று விடுவான். உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப்போனது.
பிரச்சனையின் தீவிரத்தை அப்போதுதான் புரிந்து கொண்ட எலிகள் ஜாடியிலிருந்து வெளியேற முயன்றன . ஆனால் பாவம் ஆழமான ஜாடியிலிருந்த அதிரசங்கள் தீர்ந்ததால் அது மேலும் ஆழமாகி விட்டதாலும் , வயிறு முழுக்க அதிரசம் நிரம்பி இருந்ததாலும் அவற்றால் தாவி வெளியே வர இயலவில்லை. கோபத்துடன் வந்த மனிதனிடம் சிக்கிக் கொண்டன.
தன் கூட்டத்திருந்த எலிகள் ஒவ்வொன்றாக அடித்துக் கொல்லப் படுவதை ஒரு பொந்திலிருந்து பார்த்து தலைவன் எலி கண்ணீர் விட்டது.
செல்லமே ! உலகத்தின் மயக்கத்தில் அடிமைப் பட்டுப் போனால் எச்சரிப்பின் தொனியும் காதில் விழாது, எக்காள சத்தமும் கேட்காது. எதிலும் அளவுடன் இரு. பிழைப்பாய்.
“வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். நீதிமொழிகள் ” 15 :10
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்