-->

Ticker

Header Ads Widget

திறமை - தமிழ் கிறிஸ்தவ கதை



“என்ன இருந்தாலும் யானை பாஸ்டர் அப்படி சொல்லி இருக்கக்கூடாது . இந்த சபைக்காக எவ்வளவு  உழைக்கிறேன்.  என்னப் பாத்து உனக்கு  இதெல்லாம்  வேணாம்னு சொல்லி இப்படி அவமானப் படுத்திட்டாரே!” கழுதை காலேபுக்கு அழுகை அழுகையாக வந்தது.  நடந்தது  இதுதான்.  காட்டில் புதிதாக ஒரு  ஆலயம் கட்டப் பட்டது.   எல்லா மிருகங்களுமே இயன்ற  உதவி செய்தன.  குறிப்பாகக் கழுதை காலேப் தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு  ஆலயத்துக்காகக் கல்லும், மண்ணும் சுமந்தது. யானை பாஸ்டர், கழுதை காலேபுக்காகவும் ,  அதன் குடும்பத்துக்காகவும்  விசேஷித்த ஜெபமும் ஏற்பாடு செய்தது.  இன்னும் பத்தே நாளில் பிரதிஷ்டை.   இப்போதுதான் வந்தது பிரச்சினை.  கழுதைக்கு நெடுநாட்களாக ஒரு ஆசை .   ஆராதனைக் குழுவிற்குத் தலைமைப் பாடகனாக விளங்க வேண்டும்  என்பது தான்  அது.  தான்  என்ன கேட்டாலும் யானை பாஸ்டர் மறுக்கவே  மாட்டார் என்று நம்பியது.

அன்று ஆலயத்தில் வர்ணம் பூசிக் கொண்டிருந்த குரங்குகளுக்கும் ,  உடும்புகளுக்கும் காலேப்  சாப்பாடு எடுத்து வந்தது.  அப்போது ஆலயத்தின் பின்னே இருக்கும்  அறையிலிருந்து இனிய பாடல் சத்தம் கேட்டது .  காலேப் ஓடிப்போய் என்னவென்று பார்க்க  அங்கே குயில் கிறிஸ்டியானாவும் , அதன் தங்கை சில்வியாவும் அழகாய்ப் பாடிக் கொண்டிருந்தன.  கழுதை காலேபுக்கு  எங்கேயா உதைத்தது. வெளியே நின்று கொண்டிருந்த பாஸ்டரிடம் ஓடி,

“ஐயா!  ஆராதனைக் குழுவிற்குத் தலைமை தாங்க எனக்கு ரொம்ப வாஞ்சையாய் இருக்குதுங்கய்யா. என்னையே. . . ” காலேப் சொல்லி முடிப்பதற்குள் பாஸ்டர் குறுக்கிட்டது.

” காலேப் ! காட்டிலேயே இந்த சகோதரிகள்தான் அருமையா பாடுவாங்கன்னு எல்லார்க்கும் தெரியும்.  அதனால்தான்  அதை அவங்க கிட்டயே விட்டுட்டேன் ” என்றது.

” இல்லைங்கய்யா ,  இது  என்னோட நெடுநாள் ஆசை.  அவங்களை வேணா  நான் பாடப் பாடகோரஸா பாட சொன்னா? ”

யானை பாஸ்டருக்கு அதை மனதில் கூட நினைக்க முடியவில்லை.  கழுதையின்  குரல் வளம்தான் காட்டுக்கே தெரியுமே!

” காலேப்!  உனக்கு இதெல்லாம் வேணாம்பா.  சொன்னா கேளு ” என்றது.  இதுதான்  கழுதை காலேபின் வருத்தத்துக்குக் காரணம். எப்போதும் மனதில் பாரம் வந்தால்   காலேப்  ஜெபிப்பதுடன், தன் தோழன் காட்டெருமை  காபிரியேலுடன் பகிர்ந்து கொள்ளும். காலேப் ,  காபிரியேலைக் கண்டு தன் மன பாரத்தை சொன்னதுமே காபிரியேல் அடக்க முடியாமல் சிரித்துவிட்டது. காலேபுக்கு மிகவும் அவமானமாகி விட்டது.

” என் குரலுக்கு என்ன குறை?

கொஞ்சம் பிசிரடிக்கும்,  ஒரு சுதியில்  போகாது.  அவ்வளவுதானே ?  இதெல்லாம் ஒரு

குறையா? ” தனக்குத் தானே கேட்டுக் கொண்டது.  திடீரென அதற்கு  ஒரு யோசனை தோன்றியது.

” அந்தக் குயில் கிறிஸ்டியானா  போலவே  என் குரலும் மாறினால்! ”

நினைக்கும் போதே சந்தோஷம் பீரிட்டது. அன்று முதல் குயில் என்னவெல்லாம் சாப்பிடுமோ அதை மட்டும் சாப்பிட முடிவெடுத்தது. குயிலுக்குப் பிடித்தவற்றைப் பட்டியல்  போட்டது.  எல்லாம் பழவகைகள்.  கோவைப் பழம்  எளிதாக கிடைத்தது.  ஆனால் கொடிக்கு ஒன்றிரண்டுதான் கிடைத்தது.  மற்ற பழவகைகளோ மரத்தின் மீது  இருந்தன.  எனவே கிடைக்கும் கோவைப் பழங்களையும் கீழே விழுந்து கிடந்த பழங்களையும்  மாத்திரம் புசிக்கலானது. நன்றாக தின்று கொழுத்த வயிற்றுக்கு இப்போது கால்பங்கு கூட  உணவு கிடைக்கவில்லை.  உடல் மெலிந்தது ,  வலிமை குன்றியது ,  நடக்கவே சிரமப்பட்டது.  ஆயினும்  குயிலைப் போலப் பாடவேண்டும் என்ற  வைராக்கியத்தில் பழங்களைத் தேடிக் காடெங்கும் அலைந்தது.  பழங்கள் குறைவாகவே தரையில் கிடைத்தன. பசியில் ஒரு முறை மரத்தின் மேலேயே ஏறிப் பழம் பறிக்க முயன்றது.   ஆனால் கீழே விழுந்து காலில் நல்ல அடி.  நடக்க முடியவில்லை.  நகரவும் உடலில்  தெம்பில்லை. கழுகுகள்  அதை வட்டமிட ஆரம்பித்து விட்டன.  காலேபின் மனைவி,  பிள்ளைகள்  அதன்  எண்ணத்தை அறிந்து  எவ்வளவோ புத்தி சொல்லி இருந்தன.  இப்போது  அதைக் காணவும்  இல்லை.  கண்ணீரோடு ஓடிப்போய் யானை பாஸ்டரிடம்  சொல்ல  அனைவரும் பதறியடித்து தேட  ஆரம்பித்தனர்.  கடைசியாக   குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த காலேபைக் கழுகுகள் கூட்டத்தின் நடுவே கண்டு கதறினார்கள். பாஸ்டர் விரைந்து  கழுகுகளைத் துரத்தியது .  பாஸ்டரின் பிள்ளைகள் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து புகட்டின. யானை பாஸ்டர் அதன் மேல் தும்பிக்கை வைத்து ஜெபித்தது. காலேப் மெதுவாக  எழுந்து நின்றது.  பாஸ்டர் சொன்னது,

” ஒவ்வொருத்தருக்கும் கர்த்தர் ஒரு திறமையை  கொடுத்திருக்கிறார்.  யாரையும்  அவர் வெறுமையாக விடவில்லை.  அந்தக்  குயில்கள்  என்னதான் முயன்றாலும் உன்னைப்  போல  ஆலயம்  எழும்ப  உதவி இருக்க முடியுமா?  உன்னைப்  போல வலிமையாய் பாரம் சுமக்க முடியுமா?  உன்னிடம் உள்ளதைக் கர்த்தருக்குக் கொடு.  மற்றவரைப் போல மாற நினைக்காதே ”  என்று புதிதாகப் பிறந்த காலேபை அழைத்துச் சென்றது.  செல்லமே!  உன்னிடம் கர்த்தர் ஒப்புவித்த தாலந்துகளை ஊதிப்  பெரிதாக்கு. மிமிக்ரி பண்ண முயற்சி செய்யாதே!

 "காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?           1 கொரிந்தியர் 12 :16

சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?      1 கொரிந்தியர் 12 :17

தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.  1 கொரிந்தியர் 12 :18 ”

கருத்துரையிடுக

0 கருத்துகள்